~

சீனாவின் "ரியல் எஸ்டேட் சந்தை குமிழி" உடைந்து விட்டது..! மின்சார நெருக்கடி..! நகரம் இருளில்..! நாகத்தின் வாயில் சீனா..!

- அனுபவானந்தா எழுதுகிறார்

(லங்கா ஈ நியூஸ் - அக்டோபர். 07 , 2021 , காலை 06.45 ) 2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை கீழ் மட்டத்திற்கு முற்றாக சரிந்தது. வீடு உட்பட சொத்துக்களை வாங்க அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த லெஹ்மன் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் நட்டத்தை சந்தித்ததால் இந்த நெருக்கடி வெடித்தது. அமெரிக்கா பங்கு சந்தையும் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதன் விளைவுகள் சில மணி நேரத்தில் உலகம் முழுவதும் பரவியது. உலகின் ஒவ்வொரு பங்குச் சந்தையும் சரிந்தது.

அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை சரிவு .. 

அதன் தாக்கங்கள் பெரிய மற்றும் சிறிய ஒவ்வொரு நாட்டிலும் உணரப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மந்த நிலைக்கு சென்றது. இது ஒன்றுடன் ஒன்று இணைந்த  "டோமினோ" முறிவாகும்.  இதனால் அமெரிக்காவில் மட்டும் 8.8 மில்லியன் மக்கள் வேலை இழந்தனர். பல ஆண்டுகளாக கணக்கில் இருந்து வந்த நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது. ஓய்வூதிய நிதி இல்லாது போனது. 1930 ம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்கா சந்தித்த மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி நிலை இதுவாக பதிவானது.

ஒரு செயற்கை " வீட்டுக் குமிழி " ... 

அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தையின் சரிவு இந்த பாரிய மந்த நிலைக்கு வழி வகுத்தது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முறையான ஆய்வுகள் செய்யாது அமெரிக்க பிரஜைகளுக்கு வீட்டுக் கடன்களை வழங்கியமை இந்நிலைக்கு முதன்மை காரணியாக அமைந்தது. தளர்வான கடன் நிபந்தனைகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடு கட்டுதல் வாங்குதல்களால் ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்தது. அதன் மூலம், ஒரு செயற்கை "வீட்டு குமிழி" உருவாக்கப்பட்டது. இந்த வசந்தம் யுகத்திலான சந்தை  பல ஆண்டுகள் நீடித்தது. சிறிது காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கடன் தவணைகளை சரியாக செலுத்த முடியாத நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியதும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின. இதனுடன் மேலும் சில பொருளாதார பிரச்சினைகள் சேரவே உலக அளவில் பொருளாதார மந்த நிலை உருவாகியது.

சீனாவின் " ரியல் எஸ்டேட் சந்தை குமிழி " சரிந்து வருகிறது... 

இந்த நேரத்தில், சீனா 2008 ல் அமெரிக்காவுக்கு நேர்ந்த அதே விதியை நோக்கி செல்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சீனாவில் இருந்த "ரியல் எஸ்டேட் சந்தை குமிழி" தற்போது சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. 

305 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் சீனாவின் China Evergrande Group எவர்கிரேண்டே குழுமம் ...

சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான China Evergrande Group சீனா எவர்கிரேண்டே குழுமம் நிதி பற்றாக் குறையால்  சரிந்துள்ளது. செப்டம்பர் 23 ம் திகதி அன்று, நிறுவனம் அதன் பத்திரங்களுக்கு அமெரிக்க டொலர் 83 மில்லியன் வட்டி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்நிறுவனம் அந்தத் தொகையை அன்று செலுத்தத் தவறியது. ஜூன் 30 ம் திகதி நிலவரப்படி எவர்கிராண்டின் மொத்த கடன்  305 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இந்த பணத்தின் பெரும்பகுதி சீன மக்களிடமிருந்து முதலீடாக எவர்கிராண்ட் நிறுவனம் கடன் வாங்கியதாகும்.  கூடுதலாக, சீனா மற்றும் சர்வதேச, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்கள் இவையாகும். நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட வருமானத்தை வழங்கத் தவறி விட்டது. நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவுகளையும் அதன் ஊழியர்களின் சம்பளத்தையும் கூட செலுத்தவில்லை. 

சீன நடுத்தர வர்க்க மக்களின் வீட்டுக் கனவு... 

1998 இல் சீன ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியது. சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட நடுத்தர வர்க்க மக்களுக்கான ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. விரைவான நகரமயமாக்கல் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே பண இருப்பு அதிகரிப்பு ஆகியவை சீன ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு என்பது நடுத்தர வர்க்கம் சீன முதலாளித்துவ அமைப்பின் கீழ் அதன் பொருளாதார வலிமை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை நிரூபிக்கும் ஒரு வழியாக காணப்பட்டது. கோடிக் கணக்கான நடுத்தர வர்க்க சீனர்கள் சொத்தை ஒரு முக்கிய குடும்பச் சொத்தாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் கருதுகின்றனர். 

சீனாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த போக்கு வேகமாக அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்க குடும்பங்கள் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் பல வீடுகளை கொள்வனவு செய்கின்றனர். குறிப்பாக சீன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொகுசு வீடு வாங்குவதை தங்கள் கடமையாக கருதி செய்கின்றனர். 

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சந்தையில் ரியல் எஸ்டேட் 30%... 

இந்த சந்தை வாய்ப்பை பூர்த்தி செய்ய பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சீனாவில் தோன்றின. 1996 ம் ஆண்டில் சூ ஜியாங்க்ஸால் என்பவரால் நிறுவப்பட்ட எவர் கிராண்டே நிறுவனம் அவற்றில் ஒன்று. நிறுவனம் 280 நகரங்களில் கிளைகள் கொண்டு பரவியுள்ளது. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நிகழ்ந்த ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சியை விட சீனாவில் மிகவும் தீவிரமான சூழ்நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் ரியல் எஸ்டேட் சந்தையை சார்ந்துள்ளது. சீன மக்களும் தங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்வதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் வேறு மாற்று முதலீட்டு வழிகளைப் பார்ப்பதில்லை. 90 சதவீத சீன குடிமக்களுக்கு சொந்த வீடு உள்ளது. அவர்கள் தங்கள் சேமிப்பு அனைத்தையும் வீடு வாங்குவதற்காக முதலீடு செய்கிறார்கள். நகர்ப்புற சீன மக்கள் தங்கள் நிகர சொத்துக்களில் 70 சதவீதத்தை ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். சீன ரியல் எஸ்டேட் சந்தையின் சரிவு என்பது நாட்டின் பெரும்பான்மையான பொது மக்களின் வாழ் நாள் சேமிப்பை உடனடியாக அழிப்பதாக அமையும் என கூறப்படுகிறது. 

பொருளாதார வளர்ச்சி குறித்த சீன அரசின் தவறான புள்ளி விபரங்கள்... 

சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கட்டுக்கதை இந்த பொருளாதார நெருக்கடி மூலம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின் படி, சீனா " பாரிய " பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது.  ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதார வளர்ச்சி குறைந்தே காணப்படுகிறது. சீன அரசாங்கம் தாம் அடைய நினைத்த பொருளாதார இலக்குகளை அடைய தவறி விட்டது. சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளை விற்க முடியவில்லை. எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் வீட்டு அலகுகளை கட்டினாலும், இப்போது அவற்றை விற்க முடியாமல் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்றன.  சீனாவில் இதுபோன்ற 50 மில்லியன் வீடுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடங்கிய பல வீட்டு வளாகங்களின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு போதுமான நிதி மூலங்கள் அந்த நிறுவனங்களுக்கு இல்லை. அந்த முதலீடுகளுக்காக பெறப்பட்ட வங்கிக் கடன்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த முடியாததால் வங்கிக் கட்டமைப்பும் ஆபத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சீன அரசாங்கம் தலையிட்டு, எட்டு ஆண்டுகளாக கட்டுமானத்தை முடிக்க முடியாமல் இருந்த சீனாவின் குன்மிங்கில் உள்ள 15 வீட்டுத் திட்டங்களை இடித்துத் தள்ளியது.

சீன வங்கி அமைப்பு சரிந்து விடுமா..? 

சீனாவின் எவர் கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத்திரம் சுமார் 171 சீன வங்கிகள் மற்றும் 121 நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றுள்ளது. இன்று இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு குறித்த நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையானது சீன வங்கிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சீன வங்கி முறையை வலுப்படுத்த சீன மத்திய வங்கி சமீபத்தில் 71 பில்லியன் அமெரிக்க டொலர்களை பொருளாதார நடிவடிக்கையில் சேர்த்தது. ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு டொலர்களை சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை.

Evergrand நிறுவனத்திற்கு தாங்கள் எதிர்பார்த்தது போலானா வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கிய வாக்குறு போன்று பெற முடியவில்லை. நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவுகளையும் அதன் ஊழியர்களின் சம்பளத்தையும் கூட செலுத்தவில்லை. முதலீட்டாளர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகளை திரும்பப் பெற பிரச்சாரம் செய்கின்றனர். சாதாரண முதலீட்டாளர்கள் நிறுவனத்திற்கு வந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள். இந்தப் போக்கை சீனா முழுவதும் காணலாம். இந்த போராட்டக்காரர்களை சீன அரசு வழக்கம் போல் அடக்கி ஒடுக்குகிறது. குறிப்பாக, இந்த பொருளாதார நெருக்கடி பற்றிய தகவல்கள் பரவுவதை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. 

எரிசக்தி நெருக்கடியால் சீனாவில் மின்வெட்டு...

துரதிர்ஷ்ட வசமாக, ரியல் எஸ்டேட் சந்தை சரிவை போலவே சீனாவில் எரிசக்தி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.  தற்போது, சீனா முழுவதும் அடிக்கடி மின் வெட்டு அமுலில் உள்ளது. இதனால் சீன தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் உற்பத்தி செயல் முறைகள் பெரிதும் குறைத்துள்ளன. மின் வெட்டு காரணமாக சில தொழில்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மாத்திரமே இயங்குகின்றன. இது சீன உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனங்களுக்கு வரும் குளிர்காலத்திற்கான எரிபொருள் விநியோகத்தை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளனர். சீன துணைப் பிரதமர் ஹான் ஜெங் எரிசக்தி நிறுவனங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், பெய்ஜிங்கை இருளில் மூழ்க விட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். எரிசக்தி நெருக்கடியால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காவது காலாண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.7% முதல் 3.0% மற்றும்  5.1% முதல் 4.4% வரை குறையும் என்று நோமுரா நிதி ஆய்வாளர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர். 

பொருளாதார நெருக்கடியை உலகத்திலிருந்து மறைக்க முயற்சி... 

அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஐரோப்பாவில் ஒரு பொருளாதார சரிவு ஏற்படும் போது, அது இரகசியமாக வைக்கப்படாது உலகிற்கு வௌிச்சமிட்டுக் காட்டப்படும். ஆனால் சீனா ஒரு இரகசிய நாடு போல செயற்பட்டு தங்களது பல விடயங்களை உலகத்திற்கு தெரிய வராமல் எல்லாவற்றையும் மறைக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த தகவல்களை உலகிற்கு மறைத்தனர். இன்று, ரியல் எஸ்டேட் சந்தையின் சரிவு, மின் நெருக்கடி போன்ற சீனப் பொருளாதாரத்தின் மந்த நிலையை உலகிலிருந்து மறைக்கின்றனர். ஆனால் கொரோனா குறித்த சீன அரசின் முட்டாள்தனமான கொள்கைகள் மூலம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்கள் காவு கொல்லப்பட்டன.  சீனப் பொருளாதார வீழ்ச்சி அடைவதை கண்டு உலகில் எந்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. அதன் தாக்கம் பெரிய மற்றும் சிறிய ஒவ்வொரு நாட்டிலும் உணரப்படும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் பங்காளர்கள் என்ற முறையில், சீனாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் கண்ணை மூடிக் கொள்ள முடியாது. இந்த நெருக்கடியை சமாளிக்க சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒட்டு மொத்த உலக சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார சரிவை மூடி மறைப்பது தொடர்ந்து நிலைமையை மோசமாக்கும். 

இலங்கையைப் பற்றிய சீனா.. 

சீன அரசாங்கத்திடம் இலங்கை பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், சீனக் கடன்களால் செய்யப்பட்ட நஷ்டமான முதலீடுகளை மறு விற்பனை செய்ய வேண்டியிருந்தது. சிறந்த உதாரணம் அம்பாந்தோட்டை துறைமுகம். 2017 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிற்கு துறைமுகத்துடன் 15,000 ஏக்கர் காணி விற்பனை செய்ய நேர்ந்தது. இந்த கொடுக்கல் வாங்கல் முடிந்து இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சீனா அங்கு செய்வதாக உறுதியளித்த எந்த சீன முதலீடுகளையும் இன்னும் தொடங்கவில்லை.

கொழும்பு துறைமுக நகரம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் சீனாவுக்கு 286 ஏக்கர் என்ற பாரிய அளவு நிலம் சொந்தமாக உள்ளது. முதலீட்டிற்காக இந்த நிலங்களை ஒதுக்கீடு செய்வது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் காலத்தில் தொடங்கியது. ஆனால் LOLC உரிமையாளர் இஷாரா நாணயக்கார மட்டுமே அங்கு விற்கப்பட்ட ஒரே நிலத்தை இன்றுவரை கொள்வனவு செய்துள்ளார். சீனாவிற்கு தனது 286 ஏக்கர் காணியில் முதலீடு செய்ய எந்த திட்டமும் இதுவரை இல்லை. 

இதற்கெல்லாம் காரணம் சீனா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி ஆகும். இலங்கைக்கு வரும் தந்திரமான சீனர்களுடன் கூட்டு வியாபார முயற்சிகளை தொடங்க முயற்சிக்கும் இலங்கையின் சிறு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு குறித்து இரண்டு முறை அல்ல ஐந்து முறை மறுபரிசீலனை செய்வது சிறந்ததாக அமையும். 

இலங்கை சீனக் காலனியாக மாறியுள்ளதால், இலங்கை ஊடகங்கள் சீனப் பொருளாதார நெருக்கடியை மறைக்கின்றன. ஆனால் ஒரு சீன முதலாளி நட்டமடையும் போது அதன் பாதிப்புகள் இலங்கை போன்ற காலனித்துவ நாட்டிற்கு உடனடியாக வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

-அனுபாவனந்த

[email protected]

---------------------------
by     (2021-10-07 17:00:47)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links