~

சட்ட விரோதமாக வழக்குகளை மீளப் பெறும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்...! முடியாது என்றால் சட்ட மா அதிபர் பதவி விலகி வக்காலத்து வாங்கும் நபர்களின் தனிப்பட்ட சட்டத்தரணியாக செயற்படவும்..!

- சட்டத்தின் ஆதிக்கத்துக்கான சட்டத்தரணிகள் சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தல்.

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஒக்டோபர் 26, பிற்பகல் 12.25 ) எந்த ஒரு நாடும் நல்ல நிலையில் செயற்பட சட்டத்தை நிலைநாட்ட நீதி நியாயத்தை முன் கொண்டு செல்ல தேவையான யாப்பு ரீதியான ஏற்பாடுகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.  

சட்ட மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பது நாட்டின் சுயாதீன நிறுவனங்களாகும். சட்டத்தின் ஆதிக்கத்தை பாதுகாக்கும் மிக உயர் முக்கிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு. சட்டத்தின் ஆதிக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் அரச மற்றும் பொது செயற்பாடுகளை  அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் எடுத்துக் கூறி சட்டம் தொடர்பான பிரச்சினைகள் வரும் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை சரியாக பாதைக்கு வழி நடத்தி செல்ல தேவையான பொறுப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது சட்ட மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தலையாய பிரதான கடமையாகும்.

எந்த ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமும் இல்லை...

சட்ட மா அதிபர் திணைக்களம் அண்மைக் காலங்களில் மேல் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்குகளை எவ்வித காரணமும் இன்றி மீளப் பெற்றுக் கொள்வதை காண முடிகிறது. ஏதேனும் விசேட காரணங்களுக்காக மாத்திரமே வழக்கு விசாரணைகள் மீளப் பெறப்படும் என்ற போதிலும் அண்மையில் மீளப் பெற்றப்பட்ட வழக்குகளுக்கு அவ்வாறான விசேட காரணங்கள் எதுவும் இல்லை. வழக்குகள் வாபஸ் பெறுவதும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஒரு வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், பூரண விசாரணை நிறைவு பெறாமலா சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்தது  என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு வழக்கு விசாரணைகள் மீளப் பெறப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.  

சட்ட மா அதிபர் முழுமையாக பெயிலா ?

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்கு அவ்வாறு நீதிமன்றில் விசாரணை செய்வதற்கு முன்பு பொலிஸ் விசாரணை பிரிவினால், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வருட காலங்களாக விசாரணைக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குற்றம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் விசாரணை இடம்பெறும். விசாரணையின்  போது கிடைக்கப் பெறும் தகவல்கள் மற்றும் சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குறித்த குற்றச்சாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை எதுவென ஆராய்ந்து அந்த தண்டனை சட்டக் கோவைக்கு அமைய வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்படும்.  சட்ட மா அதிபர் திணைக்களத்தில் மூன்று மட்டத்திலான அதிகாரிகள் குறித்த ஆவணங்களை ஆராய்வர். ஆவணங்களில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டு ஆராயப்படும். அதன் பின் குற்றச்சாட்டுக்கு தண்டனை கிடைக்கக் கூடிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட முடியும் என சட்ட மா அதிபர் நம்பிக்கை கொள்ளும் இடத்து சட்ட மா அதிபரால் குற்றப் பத்திரிகை தயார் செய்யப்படும். இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க பல வருடங்கள் செல்லும் என்பதுடன் அதற்கான லட்சக் கணக்கான செலவுகள் பொது மக்கள் பணத்தில் இருந்து செல்லும் என்பதையும் கூற வேண்டிய அவசியமில்லை. எனவே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீளப் பெறப்படும் விடயமானது சட்ட மா அதிபர் திணைக்களம் முற்றிலுமாக பெயில் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தற்போதைய பிரதம நீதியரசர் அன்று சட்ட மா அதிபராக கடமையை சரியாகச் செய்யவில்லையா ?

காலத்திற்கு முன்னர் செயற்பட்டு வந்த அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசேட ஆணைக்குழு அநீதியான முறையில் வழக்குகள் சிலவற்றை மீளப் பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கூறிய சட்ட மா அதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்ட வழக்குகள் பல ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் பரிந்துரை
செய்யப்பட்டவை என்பதுடன் இந்த அனைத்து வழக்குகளும் ஒரே குழுக்களுடன் தொடர்புடையவை என்பதுவும் கவனிக்கத்தக்கது. இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது சட்ட மா அதிபராக செயற்பட்டவர் தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய என்பதுடன் வழக்குகள் மீளப் பெறப்படுவதால் அவர் தனது பதவி காலத்தில் கடமையை சரியாக செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழக்குகளை மீளப் பெறும் சட்ட மா அதிபர் நாட்டுக்குத் தேவை இல்லை...

சுயாதீன நிறுவனமான சட்ட மா அதிபர் திணைக்களம் சட்டத்திற்கு பொருத்தமான வகையில் செயற்பட வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைகளுக்காக அல்லது வேறு தேவைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மீளப் பெறுவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களமும் சட்ட மா அதிபரும் அவசியம் இல்லை.

சட்ட விரோதமாக வழக்குகளை மீளப் பெறுவதை உடனே நிறுத்து, இல்லையேல் வக்காலத்து வாங்கு..!

இந்த சட்ட விரோதமாக வழக்குகளை மீளப் பெறும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கிறோம். சட்ட மா அதிபர் திணைக்களம் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும் என்பதுடன் சட்டத்தின் ஆதிக்கத்தை பாதுகாப்பதன் ஊடாக ஒட்டு மொத்த நீதிமன்ற கட்டமைப்பிற்கும் முன் உதாரணமாக விளங்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியா விட்டால் தயவு செய்து சட்ட மா அதிபர் பதவியில் இருந்து விலகி வீட்டுக்குச் சென்று வக்காலத்து வாங்க நினைக்கும் நபர்களின் தனிப்பட்ட சட்டத்தரணியாக செயற்பட்டால் அதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு முன்பு இருந்த கௌரவம் மீள நிலைநாட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  

அத்துடன் சட்டத்துறை பிரஜைகள் மற்றும் உணர்வுள்ள பிரஜைகள் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

சட்டத்தரணி கலாநிதி ஹேரத் எம். ஆரியரத்ன

ஏற்பாட்டாளர் - சட்டத்தின் ஆதிக்கத்திற்கான சட்டத்தரணிகள் 

---------------------------
by     (2021-10-26 15:17:35)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links