- எழுதுவது ரசல் ஹேவாவசம்
(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர், 05. பிற்பகல் 1.00) ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை பிடிப்பதாக கூறிக் கொண்டு தேர்தல் மேடைகளில் வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதி வழங்கி நாட்டு மக்களின் வாக்குகளை கொள்ளையடித்த கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கம் தற்போது உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக குறித்த தாக்குதல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி குரல் எழுப்பும் நபர்களை வேட்டையாடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வேட்டையாடலின் புதிய நபராக கத்தோலிக்க மக்கள் சார்பில் குரல் எழுப்பும் ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என நீதி கோரும் அருட்தந்தை சிறில் காமினி மாட்டிக் கொண்டுள்ளார்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆரம்பம் தொடக்கமே உண்மைத் தகவல்களை வெளியிட்டு குரல் கொடுத்து வந்த லங்கா ஈ நியூஸ் ஆகிய எம்மால் நீதிக்காக குரல் கொடுக்கும் அருட்தந்தை சிறில் காமினி அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. அதனால் கேடு கெட்ட கொலைகார ராஜபக்சே அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கணக்கில் எடுக்காது அச்சமின்றி இந்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எமக்கு கிடைக்கும் தகவல்களை நாம் மறைக்காமல் வெளியிட்டு வருகிறோம்.
2019 உயிர்த்த ஞாயிறு மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்று சுமார் 30 மாதங்கள் கடந்து விட்டன. அதாவது தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தி ஆகி விட்டன. 300 ற்கும் அதிகமான அப்பாவி உயிர்களை காவு கொண்ட சுமார் 500 ற்கும் மேற்பட்ட அப்பாவி நபர்களை வாழ் நாள் முழுவதும் அங்கவீனர்களாக மாற்றிய இந்த கொடூரமான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது இன்றுவரை முடிவுக்கு வராத இரகசியமாக காணப்படுகிறது.
ஆரம்பத்தில் அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட சஹரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயல்பட்டு இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகள் மூலம் தகவல் வெளியிட்ட போதும் பின்னர் வெளி வந்த தகவல்களின் அடிப்படையில் நாட்டினுடைய தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்ற சர்ச்சைக்குரிய தகவல்களை நாட்டு மக்கள் மத்தியில் பரப்பி அதனூடாக அரசியல் இலாபம் ஒனறை பெற்றுக் கொள்ளும் நோக்கில், கோட்டாபய ராஜபக்ஷவை இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக கொண்டு வருவதன் நோக்கமாக புலனாய்வு பிரிவினர் இணைந்து சஹரான் உள்ளிட்ட குழுவினரை வைத்து மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலாக இந்த ஞாயிறு தாக்குதல் அமைந்துள்ளமைகான சட்சிகள் தற்போது வெளி வந்த வண்ணம் உள்ளன.
இலங்கை நாட்டின் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சட்ட மா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் போது ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பாரிய ' அரசியல் சூழ்ச்சி இருப்பதாக ' ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் சட்ட மா அதிபரின் இந்த கருத்து தற்போதைய ஆளும் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது. முன்னாள் சட்ட மா அதிபரின் இந்த கருத்தை மூடி மறைப்பதற்காக பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நவ்பர் மௌலவி என தகவல் வெளியிட்டார். விசாரணைகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனாலும் நாம் அறிந்த அளவில் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே நவுபர் மௌலவி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த தாக்குதல்களின் பின்னணியில் இனம் தெரியாத அரசியல் சூழ்ச்சி காணப்படுவதாக முன்னாள் சட்ட மா அதிபர் தெரிவித்ததன் காரணம் என்ன ? நாம் இது குறித்து கடந்த காலங்களாக ஆய்வுகளை மேற்கொண்டோம். அதன்போது வெளிப்பட்ட விடயங்கள் மற்றும் சந்தேகங்களை இதன் ஊடாக பகிர்ந்து கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டி அமைக்கப்பட்ட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விசேட ஆணைக்குழு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கான குறிப்பிட்டுக் கூறக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக மிக முக்கியமான சாட்சிகளை விசாரணை செய்யாமலே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்தது.
பின்னர் விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டன.
இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான ஆவணத்தை தனக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன் வைத்த போதும் அரசாங்கம் அதனை சிறிதள வேனும் கணக்கில் எடுக்காது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஒரு பகுதியை மாத்திரம் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்கியது.
வழக்கு தாக்கல் செய்யும் நோக்கமாக குறித்து அறிக்கையின் முழு ஆவணங்களையும் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கோரிய போதும் அவருக்கும் அது வழங்கப்படவில்லை.
எனினும் ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட நடவடிக்கை தொடர்பான பொறுப்பாளர் ஹரிகுப்த ரோகனதீர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இருந்து 22 பக்கங்களை மாத்திரமே சட்ட மா அதிபருக்கு வழங்கியதோடு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வத்த பரிந்துரைகளை மாற்றி அமைத்து திருத்தங்கள் செய்து சட்ட மா அதிபருக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. எனினும் குறித்த இருபத்தி இரண்டு பக்கங்களிலும் முக்கிய சாட்சிகள் உள்ளடக்கப்படவில்லை. அவை அழிக்கப்பட்டன.
சஹரான் ஹாசிம் உள்ளிட்ட அவரது அமைப்புடன் ஆரம்ப காலம் தொடக்கமே நெருங்கி செயல்பட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சிலரது தகவல்கள் வெளியாகிய நிலையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய வங்கிக் கணக்கு ஊடாக சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு சம்பளம் வழங்கப்பட்ட விடயமும் பாரதூரமான சாட்சியாக பதிவானதுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய சாட்சியும் முக்கிய சாட்சியாக பதிவானது. மேலும் ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் ஏப்ரல் 4ஆம் திகதி தொடக்கம் அப்போதைய அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜெயவர்த்தனவிற்கு கிடைத்த மிகவும் முக்கியமான முன் எச்சரிக்கை தகவல்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பான விசாரணை அறிக்கை தகவல்களும் அழிக்கப்பட்டன.
இந்த சாட்சிகள் திரிபுபடுத்தப்பட்டு இருந்ததுடன் சட்ட மா அதிபருக்கு இவை வழங்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையை ஆழமாக மீளாய்வு செய்யும் நோக்கில் சட்ட மா அதிபர் நியமித்த 12 பேர் அடங்கிய குழுவின் செயற்பாடுகளையும் சுயாதீனமாக நடத்த விடாது பாதுகாப்பு தரப்பினரை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்த விடயம் பாரிய அளவு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறித்த நபர்களின் தொலைபேசி அழைப்புகளும் அந்த காலத்தில் இரகசியமாக பதிவு செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக தெரிய வருகிறது.
விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்ட மா அதிபருக்கு பகுதி அளவில் வழங்கப்பட்டு சட்ட மா அதிபர் அதனை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ' அரசியல் சூழ்ச்சிகள் ' காணப்படுவதாக தகவல் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் சட்ட மா அதிபரின் இந்த கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அப்போது ஊடக சந்திப்பு நடத்தி கூறிய போதும் பல மாதங்கள் கடந்தும் இன்னும் எவ்வித விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் மயிர் சிலிர்க்க வைக்கும் சூழ்ச்சிகள் இருப்பதான விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கமும் அமைதி காத்து வருவதாக அருட்தந்தை சிறில் காமினி பல முக்கிய தகவல்களை அண்மைக் காலங்களாக அச்சமின்றி வெளியிட்டு வந்தார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அருட்தந்தை சிறில் காமினி கருதினாலின் பேச்சாளராக ஊடகங்களுக்கு மத்தியில் வந்து கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார். அதனால் சிறில் காமினி அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி அவருடைய குரலை நசுக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நீதி வேண்டி நிற்கும் அமைப்புகள் அண்மைக் காலமாக சூம் தொழில் நுட்பம் ஊடாக சர்வதேச நாடுகளில் உள்ள அனைவரையும் தெளிவுபடுத்தும் கூட்டங்களை நடத்தினர். ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புலனாய்வு பிரிவினருக்கு இருந்த தொடர்புகள் என்ன என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் அதனை வெளிப்படுத்த குறித்த குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகளில் தலைமை ஏற்றவர்களாக கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட மேலும் சில நபர்கள் காணப்பட்டனர்.
இந்த சூம் தொழில் நுட்ப கூட்டங்களை அரச புலனாய்வு பிரிவினர் இரகசியமாக ஒட்டு கேட்டதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே உண்மை தகவல்கள் வெளி வருவதை தடுக்கவே அவர்கள் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார் என கடுமையாக சந்தேகிக்கப்படும் தற்போதைய அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி என்பவர் குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னரும் அவர் இவ்வாறு முறைப்பாடுகள் செய்த போதும் இம்முறை உண்மைகளை வெளிப்படையாக அச்சமின்றி பேசிய அருட்தந்தை சிறில் காமினி மீது முறைப்பாடு செய்துள்ளார். இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கு எதிராக சாலி முறைப்பாடு செய்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட உடனேயே சுரேஷ் சாலி மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு அனைத்து புலனாய்வு பிரிவுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டார். அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக போலீஸ் துறையில் உள்ள உயர் அதிகாரி நியமிக்கப்பட்டு வந்த நிலையில் முதல் தடவையாக இராணுவ அதிகாரி ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதனால் முதல் முறையாக இலங்கையில் போலீஸ் அதிகாரிகளுக்கு இராணுவ அதிகாரியின் கட்டளையின் கீழ் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் சுரேஷ் சாலி தான் குற்றமற்றவர் என்றால் நல்லவர் போல நடிக்காது அரசியல்வாதிகள் மற்றும் தனக்குக் கீழ் உள்ள சிஐடி பிரிவில் ஓடிச் சென்று முறைப்பாடு செய்வதை தவிர்த்து கத்தோலிக்க சபை கோரும் நீதிக்காக முன் வந்து செயல்பட வேண்டும். புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடிப்படைவாத குழுவினரின் குண்டுத் தாக்குதல்கள் உடன் தொடர்பு வைத்திருந்தது ஏன் ? அவர்கள் யார் ? இவர்கள் யாருடைய தேவையை பூர்த்தி செய்துள்ளனர் ? போன்ற கேள்விகளுக்கு பதிலை தேடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது பொறுப்புடைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிளின் கடமையாகும். அரசு என்பது ராஜபக்சக்கள் நித்திரை கொள்ளும் இடம் அல்ல. அது இறைமை அதிகாரம் கொண்ட நாட்டு மக்களின் உடைய இடம் என்பதால் அரச ஊழியர் என்ற அடிப்படையில் பொது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமை அரச புலனாய்வுப் பிரிவு பிரதானிக்கு உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தின் இறுதி யுத்தத்தை வழி நடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையில் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு குழுவினரின் ஒத்துழைப்பை பெறவில்லை என கூறியிருந்தார். தான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சஹரான் என்ற நபரின் தலைமையில் குழு ஒன்று இயங்குவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவின் இந்த கருத்து பாராளுமன்ற ஹென்சாட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து 'சேவை' செய்த சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு சம்பளம் வழங்கியது ஏன் ? அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் ? என்பதை அப்போதைய இராணுவப் புலனாய்வுப் பிரிவு பிரதானி என்ற அடிப்படையில் சுரேஷ் சாலி வெளிப்படுத்த வேண்டும்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் முன்நிலையான கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளையிடும் அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் லால் பெரேரா சஹ்ரான் குழுவினரின் தொடர்ச்சியான அடாவடி நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதால் ஒரு முறை அழைத்து எச்சரிக்கை விடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
அப்பாவி மக்களை பலி கொண்ட ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சூத்திரதாரிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் பதிவாகியுள்ள சாட்சிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரலை நசுக்குவதற்கு அல்லது ஒடுக்குவதற்கு எடுக்கப்படும் மிக மோசமான கேடு கெட்ட அச்சமூட்டும் முயற்சிகளை கண்டிக்கும் நாம், அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலியின் முறைப்பாடு குறித்து சிஐடி பிரிவினர் விசாரணை செய்வதற்கு முன்னர் சிஐடி பிரிவினரிடம் கீழ் காணும் மிக முக்கியமான கேள்விகள் சிலவற்றை முன் வைக்கிறோம். மத குருவிடம் விசாரணை செய்வதற்கு முன்னர் முடிந்தால் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிஐடி பிரிவினர் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என நாம் சவால் விடுக்கிறோம்.
1. சஹரான் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்த மாத்தளை பிரதேச புலனாய்வு பிரிவு உறுப்பினர் யார் ?
2. ' சோனிக் சோனிக் ' என்ற பெயர் கொண்டு சஹரான் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார் ? அவரை வழி நடத்தியது யார் ?
3. தெஹிவளை பிரதேச ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்து உயிரிழந்த ஜமீல் முஹம்மது என்ற குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி யார் ? ஜமீல் உயிரிழப்பதற்கு முன்னர் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஜமீலின் வீட்டை கண்டு பிடித்து உடனடியாக அவரை சந்திக்கச் சென்றது எவ்வாறு ?
4. தற்கொலை குண்டுதாரி சஹரான் ஹாசிமின் மனைவி ' பாத்திமா காதியாவின் ' சாட்சியை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் இரகசிய சாட்சியமாக பெற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது ஏன் ? அது யாருடைய அழுத்தத்தின் பேரில் ஆகும் ? அந்தப் பெண்ணின் சாட்சியை மூடி மறைத்தது யாரைப் பாதுகாக்க ?
5. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த கேடு கெட்ட அரசியல் செயல்பாடு மற்றும் யாப்பு விரோத சூழ்ச்சியுடன் சேர்த்து அதே மாதத்தில் 30 ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் குழுவினரால் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்பு படுத்தி தற்கொலை அங்கிகள் மற்றும் இராணுவ சீருடைகளை குறித்த இடத்தில் வைத்து விட்டு ( அன்று மழையுடன் கூடிய நாளாக இருந்த போதும் இராணுவ சீருடை நனைந்து இருக்கவில்லை ) கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் என இருவரை கைது செய்து போலியான சம்பவம் ஒன்றை உருவாக்கியது யார் ? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட புலனாய்வு பிரிவு உறுப்பினர் யார் ?
6. முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜெயவர்தன ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன் கூட்டியே தனக்கு கிடைத்த எச்சரிக்கை தகவல்களை தனது தொலைபேசி மற்றும் மடிக் கணினியில் இருந்து அழித்தது ஏன் ? இந்த செயலனின் மூலம் நிலந்த ஜயவர்த்தனவை கடுமையான குற்றவாளி என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள போதும் அவரை அரச சாட்சியாளராக மாற்றி தற்போதைய அரசாங்கம் உயர் பதவிக்கு நியமித்திருப்பது நிலந்த ஜயவர்த்தனவை பாதுகாப்பதன் நோக்கத்தில் அல்லவா ?
7. நியூசிலாந்தின் கிறிஸ்சேர்ச் இஸ்லாமிய பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழி வாங்கும் நோக்கமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த நபரின் குரல் பதிவு என்று வாட்ஸ்அப் ஊடாக குரல் பதிவு ஒன்றை பரப்பி சம்பவத்தை திசை திருப்ப முயற்சித்தது யார் ? இதன் தயாரிப்பாளர் யார் ? நிலந்த ஜெயவர்தன தனது சாட்சியத்தில் இந்த சூட்சமத்தின் பின்னணியை வெளியிட்டு இருந்ததாக தெரிகிறது.
8. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது முன்னாள் புலனாய்வு பிரதானிகளில் ஒருவரான கபில ஹெந்த விதாரண ஓய்வு பெற்றதன் பின்னர் ஷெங்ரில்லா ஹோட்டல் வலையமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து வியாபார வலயமைப்புகளிலும் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். ஷெங்ரிலா ஹோட்டலில் பாதுகாப்பு பணிப்பாளராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரியான ப்ரீத்தி ராஜபக்சவின் ( வைத்தியர் லலித் சந்திரலால் பிரியதாஸவுடன் திருமணம் செய்து கொண்டுள்ள ) மகனான முன்னாள் கடற்படை அதிகாரியாக செயல்பட்ட மாலக்க சந்திரதாச நியமிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இவர் செயல்பட்டார். ஷெங்ரிலா ஹோட்டல் குழுமத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கபில ஹெந்தவிதாரனவும் ஷெங்ரிலா ஹோட்டல் பாதுகாப்பு பணிப்பாளராக மாலக்க சந்திரதாசவும் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டனர். மாலக்க சந்திரதாஸ் என்பவர் ' முறையற்ற யுத்தம் ' தொடர்பிலும் ' குண்டு வெடிப்புகள் ' தொடர்பிலும் விசேட நிபுணத்துவம் பெற்றவர். இப்படி இருக்கையில் ஷெங்ரிலா ஹோட்டலில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? அன்றைய தினம் ஷெங்ரிலா ஹோட்டலின் பாதுகாப்பு வேண்டுமென்றே குறிக்கப்பட்டு இருந்ததா ? அது தொடர்பில் விசாரணை நடத்தாதது ஏன் ? குறைந்தது மாலக்க சந்திரதாசவிடம் வாக்குமூலம் பெறப்பட்டாதது ஏன் ?
9. 2019 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முன் பயிற்சி பார்க்கும் வகையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் முச்சக்கர வண்டி ஒன்றில் சஹரான் குழுவினர் வெடி விபத்து நடத்தி அதன் பின் 5 நாட்கள் சென்று அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு தேவையான குண்டு தயாரிப்பு, சரியான தொழில் நுட்பம், அது தொடர்பான அறிவு அவர்களுக்கு கிடைத்தது எவ்வாறு ? இதன் பின்னணியில் இருந்தது யார் ?
10. FBI பயிற்சி பெற்ற பெயர் போன இரகசிய பொலிஸ் பரிசோதகர் சானி அபேசேகர சந்தேகநபர்களின் தொடர்புகளை விசாரணை செய்து ஐபி அட்ரஸ் மூலம் பிரதான சந்தேக நபராக அரச புலனாய்வு சேவையின் உறுப்பினர் ஒருவரை கைது செய்தார். அப்போது உடனடியாக வந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் ' இது எங்களுடைய நிகழ்ச்சித் திட்டம் ' என்று கூறி புலனாய்வு பிரிவு அதிகாரியை அழைத்து சென்றார். இது தொடர்பில் சானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி அளித்துள்ளார். ஆனாலும் சானி அபேசேகரவின் சாட்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படாதது ஏன் ?
இந்த மூர்க்கத்தனமான, மிலேச்சத்தனமான, கேடு கெட்ட தாக்குதல்கள் தொடர்பில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பின்புலம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பில் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி குரல் கொடுப்பவர்களின் குரலை நசுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சமூகமும் இது குறித்து கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளமையானது 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான சிறுவர்கள், தாய், தந்தையர்கள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அவர்களுடைய ஆன்மா மற்றும் அவர்களை பிரிந்து துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்கள் மற்றும் தாக்குதல்களால் ஊனமுற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
குறிப்பு.
அருட்தந்தை சிறில் காமினி மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஆகும். இந்த செயல் திட்டத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரும் அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்யும் சூழ்ச்சி உள்ளது. எனவே தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூழ்ச்சியாளர்களை கண்டு பிடிப்பதை விட அது தொடர்பில் குரல் எழுப்பும் நபர்களை அடக்குவதே அரசாங்கத்தின் முன்னிலை செயல்பாடாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக பேசிய கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூட கோட்டாபயவின் உண்மையான சொரூபம் பொய்யான சொரூபம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலின் பின்னணியில் அவர் ராஜபக்சேக்கள் குறித்து அறிந்திருப்பார் என்பது எங்களுடைய நம்பிக்கை. அப்படி அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் கத்தோலிக்க ஆயர்களின் உயிரிழப்பு மற்றும் குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆயர்கள் சிறைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களின் சாட்சியாக நாம் இதற்கு இடமளிக்க முடியுமா ?
---------------------------
by (2021-11-05 11:06:11)
Leave a Reply