( லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர், 10 பிற்பகல் 08.00 ) " நீ நன்கு தெரிந்து கொள். நீ இருப்பது இப்போது எங்களுடைய வீட்டில். எங்களது வீட்டில் எங்களுக்கு தேவையானது போன்று தான் வழக்குகள் தீர்க்கப்படும் " என கைது செய்யப்படும் போது பொலிசார் தன்னை அச்சுறுத்தியதாக கூறியும் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையத்தில் தான் எழுதி வெளியிட்ட கட்டுரை தொடர்பிலான செய்தி மூலங்களை கோரி தன்னை பயமுறுத்தி வருவதாகவும் சுமார் மூன்று மாதங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று நவம்பர் 10 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இலக்கம் SCFR 363/2021 எனும் கீர்த்தி ரத்னாயக்க அடிப்படை உரிமை மீறல் மனு என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்னம், பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜயவீர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சி,டி.விக்ரமசிங்க, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யு. திலகரத்ன, குற்ற விசாரணை பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஜான் பிரேமரட்ன, மற்றும் ஒரு குற்ற விசாரணை பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரந்தெனிய, பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பாளர் மற்றும் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நந்தன குமார உள்ளிட்ட சுமார் 20 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்னாயக்க கைது செய்யப்படுவதற்கான பிரதான காரணம், அவர் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய முன் எச்சரிக்கை தகவல் ஆகும். அதாவது இந்தியாவின் சுதந்திர தினத்தன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் மீது பயங்கரவாத தலிபான்கள் அமைப்பினர் தாக்குதல் நடத்தக் கூடும் என அவர் முன் எச்சரிக்கை தகவல் ஒன்றை வழங்கி இருந்தார். இதன் காரணமாகவே கீர்த்தி ரத்னாயக்க கைது செய்யப்பட்ட போதும் அவர் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய தகவல் தொடர்பில் இரகசிய பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் கீர்த்தி ரத்நாயக்க லங்கா ஈ நியூஸ் இணையம் ஊடாக வெளியிட்ட சில கட்டுரைகளின் செய்தி மூலங்களை வெளிப்படுத்துமாறு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து கீர்த்தி ரத்நாயக்க தனது மனுவில் தெரிவித்துள்ளார். 15 வது பிரதிவாதி நபராக பெயரிடப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் 19 வது பிரதிவாதி நபராக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் தொடர்பில் அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து கீர்த்தி ரத்னாயக்க லங்கா ஈ நியூஸ் இணையத்தின் ஊடாக பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பில் கீர்த்தி ரத்னாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்டத்தரணிகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சுமார் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரையில் எவ்வித நீதிமன்றத்திலும் அவர் ஆஜர் படுத்தப்படவில்லை. அத்துடன் தடுத்து வைப்பதற்கான உத்தரவு கூட அவருக்கு இதுவரை காட்டப்படவில்லை. தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக எவ்வித சாட்சிகளும் நம்பக்கூடிய ஆதாரங்களும் இன்றி தன்னை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை குறித்த சட்டத்தை மீறும் செயல் என கீர்த்தி ரத்னாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமாயின் அதற்கான சாட்சியங்கள் ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவ்வாறான ஒன்றும் முன்வைக்கப்படவில்லை.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ள போதும் ஊடகவியலாளராக தான் எழுதிய கட்டுரைகள் செய்திகள் தொடர்பான செய்தி மூலங்களை வெளியிடுமாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதன் மூலம் அரசியல் யாப்பின் 14 . 1 ( அ ) பிரிவில் உறுதி செய்யப்பட்டுள்ள மனுதாரரின் பேச்சு மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரம் என்பன மீறப்படுவதாக கீர்த்தி ரத்நாயக்க தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், தன் மீதான தடுப்புக் காவல் உத்தரவை இரத்து செய்து விடுதலை செய்யுமாறும் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு பிரதிவாதிகளிடம் இருந்து பெற்றுத் தருமாறும் கீர்த்தி ரத்னாயக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரியுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமார பெருமவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி செலோம் குணரத்ன, சட்டத்தரணி ஓசினி ருபேரு மற்றும் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு கீர்த்தி ரத்னாயக்க சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
---------------------------
by (2021-11-11 10:54:56)
Leave a Reply