- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 25 , பிற்பகல் 07 . 25 ) இலங்கை நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதத்திற்குள் இடம் பெற்ற மூன்றாவது கேஸ் வெடிப்பு இன்று 25 ஆம் திகதி அதிகாலையில் பதிவாகி உள்ளது. அது ஹோகந்தர - கொட்டவ வீதியில் வித்தியாலய மாவத்தை சந்திக்கு அருகில் கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் பிரபல கணித பாட ஆசிரியர் தயாரத்ன ஹேன்நாயக்க அவர்களின் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது தீப் பரவல் ஏற்படவில்லை. ஆனாலும் கேஸ் வாயில் பகுதி முற்றாக வெடித்து சிதரியுள்ளது. இந்த விபத்தில் சமயல் அறைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் எவ்வித உயிர் சேதங்களோ யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் 20 ஆம் திகதி அதிகாலையில் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள மெக்டோனல்ட் ஹோட்டலில் கேஸ் வெடித்து தீப் பரவல் சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் கேஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை எனவும் ஆனால் கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவு ஹோட்டலில் நிரம்பி காணப்பட்டதுடன் அப்போது ஹோட்டலில் செயலில் இருந்த மின் உபகரணம் ஒன்றின் மூலம் வெடிப்பு தீ பரவல் ஏற்பட்டதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கேஸ் நிறுவனம் எரிவாயுவில் மேற் கொண்டுள்ள அடர்த்தி மாற்றம் அல்லது தரமற்ற வாயு காரணமாக இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக மறுத்துள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையிலும் அவ்வாறு ஏதேனும் குறைப்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை.
இதேவேளை கடந்த 4 ஆம் திகதி அதிகாலை வெலிகம - கப்பலாதொட்ட - எவரிவத்த பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றினுள் கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடிப்பு மிகவும் பெரியதாக காணப்பட்டது. ஆனால் தீப் வரவல் ஏற்படவில்லை. இந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஊடகங்களுக்கு வெளிவரவில்லை.
இலங்கையில் தற்போது பாரிய கேஸ் குறைபாடு தட்டுப்பாடு காணப்படுகிறது. கேஸ் இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இல்லை. இதுவே கேஸ் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் ஆகும். இலங்கையில் இரண்டு நிறுவனங்கள் கேஸ் விநியோகம் செய்கின்றனர். அதில் அரச நிறுவனமான லிட்ரோ நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனமான லாப் கேஸ் நிறுவனம் ஆகியவை இவ்வாறு கேஸ் விநயோகம் செய்கின்றனர். இந்த இரண்டு கேஸ் நிறுவனங்களினதும் கேஸ் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்திய நுகர்வோர் விவகார அதிகார சபை கேஸில் உள்ளடக்கத்தில் மாற்றம் காணப்படுவதாக தெரிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் அப்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளர் (CAA) துசான் குணவர்தன வர்த்தக அமைச்சில் கடந்த ஜூலை மாதம் முறைப்பாடு செய்தார். (இந்த காலத்தில் வெள்ளைப் பூண்டு மோசடியை ஊடகங்களுக்கு வெளிக் கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் அரசாங்கம் அவரை பதவியில் இருந்து நீக்கியது. தற்போது அவர் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அடிக்கடி அழைக்கப்பட்டு வருகிறார்).
இந்த சம்பவங்களின் பின்னர் துசான் குணவர்த்தன பிபிசி செய்திச் சேவை உள்ளிட்ட ஏனைய ஊடகங்களுக்கு கீழ் கண்டவாறு தெரிவித்தார்.
" சாதாரணமாக இலங்கையின் எல் பி கேஸ் சிலிண்டரை பிரதானப்படுத்தி அதில் ப்ரோபென் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்கள் உள்ளடங்கும். இதற்கு குறிப்பிட்ட அளவுகள் உள்ளன. சாதாரணமாக பியூட்டேன் 80 சத வீதமும் ப்ரோபென் 20 சத வீதமும் காணப்பட வேண்டும். சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் படி ப்ரோபென் என்பது தொழில் ரீதியான கேஸ் ஆகும். பியூட்டேன் என்பது சமையல் எரிவாயு கேஸ் ஆகும். இலங்கையிலும் 80 சத வீத பியூட்டேன் 20 சத வீத ப்ரோபென் எரி வாயுவில் காணப்பட்டது. ஆனால் தற்போது பல நாடுகளில் ப்ரோபென் அதிகமாகக் காணப்படலாம். சாதாரணமாக நாடுகளுக்கு நாடு ப்ரோபென் மற்றும் பியூட்டேன் அளவு மாறுபட்டு காணப்படும். இலங்கையில் எவ்வித காரணங்களும் இன்றி இவர்கள் இவற்றை 50% ற்கு 50% என மாற்றியுள்ளனர். இதனால் வீட்டில் கேஸ் வைத்திருந்தால் அது குண்டு வைத்திருப்பதற்கு ஒப்பானதாக உள்ளது. இது தொடர்பில் நான் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களிடம் கூறிய போதும் அவர்கள் அதனை கணக்கில் எடுக்கவில்லை. இது மிகவும் மோசடியான செயற்பாடாகும். கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கும் செயலுக்கு ஒப்பானது. "
ஆனாலும் இலங்கையில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்களாக லிட்ரோ மற்றும் லாப் ஆகிய இரண்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு நிறுவனங்கள் மீதும் துசான் குணவர்தன குற்றச்சாட்டு சுமத்தவில்லை. இவர் நுகர்வோர் விவகார அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளராக இருந்த போது இரண்டு நிறுவனங்களின் கேஸ் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து உண்மையான அறிக்கை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பில் அமைச்சர்களுக்கும் முறையிட்டுள்ளார்.
இதேவேளை கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதற வாய்ப்புகள் இல்லை எனக் கூறும் லிட்ரோ கேஸ் நிறுவன பாதுகாப்பு பணிப்பாளர் பொறியியலாளர் ஜெயந்த பஸ்நாயக்க பின்வருமாறு கூறுகிறார் ..
" இங்கு எல் பி கேஸ் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோம். சாதாரண சிலிண்டர் அடர்த்தியை விட ஆறு மடங்கு அடர்த்தியை தாங்கிக் கொள்ளக் கூடிய சிலிண்டர் உள்ளது. அடர்த்தி மாற்றம் ஏதும் காணப்பட்டால் சிலிண்டரின் வாயு பகுதியில் வேல் ஒன்று உள்ளது. பாதுகாப்பு சேப்டி ரிலீப் வேல் ஊடாக அதிகரிக்கும் அல்லது மாற்றம் கண்ட அடர்த்தியை குறைக்க முடியும். அதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடர்த்தி மாற்றம் காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறாது. இது முற்றிலும் உண்மை. "
ஆனாலும் கடந்த மூன்று சம்பவங்களிலும் சிலிண்டரின் மேல் பகுதியில் கசிவு ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மெக்டொனல்ட் கேஸ் வெடிப்பு தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு கூறும் கதை சந்தேகத்திற்கு உரியது.
மெக்டொனல் என்பது சர்வதேச மட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் கேஸ் கசிவை கண்டு பிடிப்பதற்காக சென்சார் பயன்படுத்தப்படுகிறது. இந்த சென்சார் இல்லாவிட்டால் வீடு ஒன்றில் வசிக்க அனுமதி அளிக்கப்படாது. வர்த்தக நிலையங்களில் உணவு தயாரிக்கும் இடங்களில் கட்டாயமாக கேஸ் கசிவை கண்டு பிடிப்பதற்கான சென்சார் காணப்படும். இலங்கையில் அவ்வாறான தரத்திலான சேவைகள் இல்லா விட்டாலும் கொழும்பிலுள்ள மெக் டொனல்ட் நிறுவனம் தனது தலைமை நிறுவனத்தின் தரத்திற்கு குறைந்து செயல்பட வாய்ப்பில்லை. அதனால் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கூறும் கதை நம்ப முடியாது உள்ளது. இங்கு சிலிண்டரின் மேல் பகுதிக்கு அருகில் கசிவு ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும்.
இந்த மூன்று வெடிப்பு சம்பவங்களும் அதிகாலை நேரத்தில் இடம் பெற்றுள்ளமை இங்கே கவனிக்க கூடிய விடயமாகும். அதிகாலை என்பது அந்த அளவு வேலைப் பளு அதிகமாக காணப்படும் நேரம் அல்ல. இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் துப்புரவு செய்யும் அல்லது ஒதுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. சிலிண்டரில் கசிவு ஏற்பட்டாலும் அந்த கசிவு கேஸ் சிலிண்டருக்கு உள்ளே சென்று அடர்த்தி காரணமாக வெடிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் பல வீடியோக்கள் பாதுகாப்பு ஆலோசகர்களால் செயல் முறையில் செய்து காட்டப்பட்டுள்ளது.
அப்படி இருக்கையில் இந்த சிலிண்டர்கள் வாய் பகுதிகளின் அருகே வெடித்து சிதறியது எவ்வாறு ?
நாட்டில் ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கேஸ் தட்டுப்பாடு காரணமாக கால்கடுக்க வரிசையில் நிற்கும் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் அம்மா உள்ளிட்ட அனைவரையும் இழுத்து கெட்ட வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் கேஸ் தொடர்பில் பயமுறுத்தும் வகையிலான சம்பவங்களை ஏற்படுத்தி நாட்டு மக்களை கேஸ் இல்லாத வேறொரு உபாய மார்க்கத்திற்கு திருப்பும் முயற்சி இதில் உள்ளதா ? அதன் அடிப்படையில் வேண்டும் என்றே திட்டமிட்டு வெடிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றனவா ?
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மிகவும் கைதேர்ந்த விளையாட்டு காரர். அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வர ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிகவும் உறுதுணையாக இருந்தன. ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பிரதான சூத்திரதாரியை இன்று வரை மறைத்து வைத்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாட்டில் சந்தேகத்திற்கு இடமான பல தீ விபத்து சம்பவங்கள் பதிவாகின. அதில் கொழும்பு கச்சேரி கட்டிடத்தில் இடம்பெற்ற தீ பிரதானமான ஒன்றாகும். அது இரவு நேரத்தில் தீப் பற்றி எரிந்தது. அதன் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் " உடனே தீ பற்றக் கூடிய சிறிய ரசாயன திரவம் இருந்தது " என கூறப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கிய கோவைகள் பல இந்த தீ விபத்தின் காரணமாக எரிந்து முழுமையாக சேதம் அடைந்தன. அதன் பின்னர் அந்த காணிகளை கையகப்படுத்த மிகவும் இலகுவாகியது.
" காக்கை ஒன்றை கொன்று கம்பத்தில் தொங்க விட்டால் சரி " என தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கான அச்சுறுத்தல் மூலோபாய செயல்பாடு ஒன்றை கூறினார்.
பிரச்சினைகளின் போது பைத்தியக்காரர்களுக்கு பைத்தியக்காரத்தனமான செயற்பாடுகளையே செய்யத் தோன்றும்.
---------------------------
by (2021-11-27 15:05:19)
Leave a Reply