~

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கொழும்பில் இருக்கும் போதே இராணுவ வீரர்கள் முள் கம்பி மற்றும் தென்னை மட்டையால் தமிழ் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , நவம்பர் , 29 பிற்பகல் 02.10 ) வடக்கு முல்லைத்தீவு பகுதியில் சுதந்திர தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படை அணியின் இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீதான  காட்டு மிராண்டித்தன தாக்குதல் சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு  வந்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  
 
சுதந்திர தமிழ் ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் நவம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை வீடியோ செய்து கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்குச் சென்ற இராணுவ வீரர்கள் ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது முள் கம்பிகள் மற்றும் தென்னை மட்டையால் நடு வீதியில் வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்துள்ளனர். 

இந்த காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டதோடு ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

முல்லைத்தீவு ஊடக அமையம் நவம்பர் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் என அனைத்து தரப்பினரின் முழுமையான ஆதரவு கிடைத்து இருந்தது. 

சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீதான கடுமையான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம்,  மட்டக்களப்பு ஊடக சமூகம் மற்றும் மட்டக்களப்பு பிரதேச ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நகரத்தில் இன்று இருபத்தி ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் சிவில் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்ததாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.

முள் கம்பி மற்றும் தென்னை மட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர் .. 

சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினர் முள் கம்பி மற்றும் தென்னை மட்டை கொண்டு கடும் தாக்குதல் நடத்தியதாக முல்லைத்தீவு ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதலால் வயிறு, கால்கள் மற்றும் இரண்டு கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட ஊடகவியலாளர் தற்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இலங்கை ராணுவத்தின் 59 ஆவது படை அணியின் இராணுவ வீரர்களே ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக முல்லைத்தீவு ஊடக அமையம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளரின் புகைப்பட கேமரா மற்றும் கையடக்க தொலைபேசியை பறித்துக் கொண்ட இராணுவ வீரர்கள் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளராக செயல்படும் சுதந்திர ஊடகவியலாளர் விசுவலிங்கம் விஸ்வசந்திரன் மீதான இராணுவத்தினரின் கண்மூடித் தனமான தாக்குதலை கண்டித்து அவருக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டின் ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.  

இந்த தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு ஊடக அமையம் மூன்று மொழிகளிலும் விடுத்துள்ள கண்டன அறிக்கையின் பிரதியை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆசிரமத்தின் பொறுப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கையளித்தார்.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு யுத்த பாதிப்பு வளையங்களில் வசிக்கும் ஊடகவியலாளர்கள் தங்களுடைய உயிர் மற்றும் தொழிலுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் பாரிய சவால்கள் குறித்து அந்த  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கொழும்பில் இருக்கும் போதே ஊடகவியலாளர் மீது தாக்குதல் ..

அடிமைத் தனத்திகாற்கான தற்கால தாக்குதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி '  டொமோயா ஒபோகாட் ' கொழும்பிற்கு வருகை தந்து இருக்கின்ற நிலையில் வடக்கில் சுதந்திர தமிழ் ஊடகவியலாளர் மீது இவ்வாறு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கருத்து சுதந்திரத்திற்கு இலங்கை இராணுவம் ஏற்படுத்தும் இடையூறு இதன் மூலம் தெட்டத் தௌிவாவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தமிழ் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட அமானுஷ்ய தாக்குதல் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி வரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள  போதும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என முல்லைத்தீவு ஊடக அமையம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் மூலம் தாக்குதலுக்கான சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தி இடையூறுகளை ஏற்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் இடையூறு ஏற்படுத்தும் கொள்கையை கடைபிடித்து வரும் இலங்கை அரசாங்கம் மிகச் சிறிய குற்றச்சாட்டுகளை காட்டி வடக்கு ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் ஊடாக தொடர்ச்சியாக இவ்வாறான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து வருவதாக முல்லைத்தீவு ஊடக அமையம் நவம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காவது தூணுக்கு இடைவிடாமல் விடுக்கப்படும் தாக்குதல் ..

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறைக்கு இலங்கை அரசாங்கம் சாவு மணி அடித்து வரும் நிலைமை காணப்படுகிறது.

கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் கொலை செய்தல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான 44 சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதோடு
 அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அதிகமானோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பிரதேசத்தில் நடக்கும் விடயங்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்தும் நோக்கில் பிரதேச ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுகின்ற போது இராணுவத்தினர் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி அடக்குமுறை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் முல்லைத்தீவு ஊடக அமையம் ஆகியன தெரிவித்துள்ளன.  

இதேவேளை எவ்வித இடையூறுகளும் இன்றி தமது ஊடக தொழிலை முன்னெடுத்துச் செல்லக் கூடிய சூழ்நிலையை நாட்டில்  உருவாக்குவதற்கு தலையிடுமாறு சர்வதேச ஊடக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முல்லைத்தீவு ஊடக அமையம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

நன்றி ஜே டி எஸ் 

---------------------------
by     (2021-12-01 14:49:27)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links