( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 14 , பிற்பகல் 01. 10 ) குடும்ப கஸ்டத்திற்காக வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மிகவும் கடினமாக உழைக்கும் இலங்கை பணியாளர்கள் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கியும் இலங்கை வர்த்தக வங்கிகளும் இணைந்து கொள்ளை அடித்து வரும் செய்தி ஒன்று லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்திற்கு பதிவாகியுள்ளது.
இவ்வாறு டொலர் கொள்ளையில் பாதிக்கப்பட்ட நபர் தனது பணத்தை தனது டொலர் கணக்கில் வைப்பில் வைத்துக் கொண்டு தேவை ஏற்படும் போது அவசியமான தொகையை மட்டும் ரூபாயாக மாற்றிக் கொள்வார். அவரது டொலர் கணக்குகள் இலங்கையின் சம்பத் வங்கியில் உள்ளன. சமீபத்தில் அவர் தனது டொலர் கணக்கு இருப்பை சரி பார்த்த போது, அதில் 1879.47 அமெரிக்க டொலர் குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 8 ஆம் திகதி முதல், அவரது கணக்கில் இருந்து முறையே 56.98 அமெரிக்க டொலர், 15.00 அமெரிக்க டொலர், 1807.09 அமெரிக்க டொலர் ( மொத்தம் 1879.47 அமெரிக்க டொலர் ) கணக்கில் இருந்து கழிக்கப்பட்டுள்ளது. முந்தைய இருப்பு 2836.45 அமெரிக்க டொலராக காணப்பட்ட போதும் , நடப்புக் கணக்கு இருப்பு 956.98 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. ( இது தொடர்பான சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) இந்த நடவடிக்கை தொடர்பாக கணக்கு வைத்திருக்கும் நபரிடம் இருந்து வங்கி எந்த வாய் மொழி அல்லது எழுத்து மூல அனுமதியையும் பெறவில்லை. முன் அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படவும் இல்லை.
இது விடயம் தொடர்பாக சம்பத் வங்கியிடம் கணக்கு வைத்திருக்கும் நபர் வினவிய போது , IR22USD-0040 / EXP PROCEEDS R என்ற தலைப்பின் கீழ் பணம் வேறு பிரிவில் பத்திரமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான உத்தரவு இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் டொலர் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் உழைத்த டொலர்களை தங்களுக்கு தேவை ஏற்படும் போதும் தேவையான அளவு பணத்தை ரூபாவாக மாற்றிக் கொள்வர். அதில் யாரும் செல்வாக்கு செலுத்தவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது.
இது விடயம் தொடர்பில் தௌிவினைப் பெற பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை லங்கா ஈ நியூஸ் இணையம் கோரியது. நாட்டில் எந்த ஒரு வங்கியும் அப்படிச் செய்ய முடியாது என அவர்கள் கூறினர். பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், கணக்கு வைத்து இருப்பவரின் எழுத்து மூல அனுமதி இன்றி, பணத்தை இடை நிறுத்தல், பயன்படுத்தல், மாற்றுதல் போன்ற போன்ற எந்த நடவடிக்கையையும் வங்கி அல்லது மத்திய வங்கியால் எடுக்க முடியாது என்று நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் எமக்குத் தெரிவித்தார். ஒரு நபரின் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே செய்ய முடியும் என்பதோடு அதுவும் ஒருவரின் கணக்கில் உள்ள பணத்தை நீதிமன்றத்தால் " சீஸ் ' செய்ய மட்டுமே முடியும் என்றும் மூத்த அதிகாரி கூறினார்.
அதன்படி, கடும் டொலர் தட்டுப்பாட்டால் தவித்துக் கொண்டு இருக்கும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் 7 அறிவு கொண்ட நிதி அமைச்சர், பொருளாதார ஒஸ்தார் எனக் கூறிக் கொள்ளும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் ஒன்று சேர்ந்து தமக்கு விசுவாசமான வர்த்தக வங்கிகளுடன் இணைந்து பொது மக்களின் டொலர்களை கொள்ளை அடித்து வருவது தௌிவாகத் தெரிகிறது. எனவே வெளிநாட்டு டொலர் நாணயக் கணக்கு வைத்து இருப்பவர்கள் தங்கள் கணக்கு நிலுவைகளை அடிக்கடி கண்காணித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்ட விரோத செயற்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க லங்கா ஈ நியூஸ் இணையம் தயாராக உள்ள நிலையில் இவ்வாறான நியாயமற்ற டொலர் கொள்ளை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரேனும் இருப்பின் தகுந்த அனைத்து ஆதாரங்களுடன் எமது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரியப்படுத்தவும்.
---------------------------
by (2022-02-14 09:48:54)
Leave a Reply