-விபரமாகக் கூறுகிறார் அனுபாவனந்த
(லங்கா ஈ நியூஸ் - 2022, மார்ச் , 15 , பிற்பகல் 11.30 ) இலங்கை நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மிகவும் துரதிஷ்டவசமான பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டியவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆவார். அவர் அரசியலில் ஈடுபட்ட கடந்த மூன்று தசாப்தங்களில், நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக எழுச்சிக்கு பங்களிப்பு செய்தார். அவரது அரசியலின் அடிப்படையானது கிராமிய சிங்கள பௌத்த தேசியவாதம் ஆகும். இது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. சர்வதேச நாணய நிதியத்திற்கு IMF எதிரானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. அவர் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்த போதும், பின்னர் ராஜபக்சே வலையில் விழுந்து இயங்கிய போதும் கடைபிடிக்கப்பட்ட கொள்கை இதுதான். சமீபத்தில் ராஜபக்சே இடத்தில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகும் அவர் அதே பழைய சிந்தனையை தொடர்கிறார். விமல் வீரவன்ச இப்போது பசில் ராஜபக்ஷவுக்கு தனது பழைய ' அமெரிக்க ஏகாதிபத்திய சதி ' என்று விமர்சித்து பசில் ராஜபக்ஷவை அதில் கட்டி வைத்துள்ளார்.
விமல் வீரவன்ச அன்றில் இருந்து திறந்த பொருளாதார திட்டத்தை எதிர்த்தவர். அவரது பொருளாதார கொள்கையானது 1970 - 1977 ஐக்கிய முன்னணி அரசாங்கம் பின்பற்றிய இறக்குமதி மாற்று பொருளாதார முறை ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களாக, ஐக்கிய நாடுகள் சபைக்கு பொறுப்பான இரண்டு சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை இலங்கையை விழுங்க 24 மணி நேரமும் சதி செய்யும் நிறுவனங்களாக விமல் வீரவன்ச முத்திரை குத்தி வந்துள்ளார். அந்த நிறுவனங்கள் மீதான விமர்சனம் மக்கள் இடையே ஒரு பகுத்தறிவு அற்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது விமல், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடனான இணைப்பு துண்டிக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவுடனான எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் விமல் வீரவன்ச எதிர்த்து வந்தார். கூகுள், கோகோ கோலா, யாஹூ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என நாட்டு பொது மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பி .பி. ஜயசுந்தர பொருளாதார கொலையாளி என குற்றம் சுமத்தியவர் விமல் ஆவார். ஆனால் இந்த நாட்டின் உண்மையான பொருளாதார கொலையாளி யார் என்று கேட்டால் அது விமல் வீரவன்சவே. கடந்த மூன்று தசாப்தங்களாக நாடு முழுவதும் சந்தைப் பொருளாதாரம் மற்றும் தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை நிறுவ உழைத்த ஒரு அரசியல் அயோக்கியனாகவே விமல் வீரவன்சவை பார்க்க முடிகிறது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த தேவை அற்ற உதவியாக வழங்க ஐக்கிய அமெரிக்கா தயாராக இருந்த நிலையில், மில்லேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு ( MCC ) விமல் வீரவன்ச கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். எம் சி சி திட்ட உதவிக்காக 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வசதிகளுக்காக 32.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்க ஐக்கிய அமெரிக்கா ஒப்புக் கொண்டது. அப்போது விமல் வீரவன்ச, உரிய உதவித் தொகை கிடைத்தால் நாடு பிளவுபட்டு இரண்டாகி விடும் என அச்சம் மிகுந்த விமர்சனங்களை மக்கள் மத்தியில் முன் வைத்தார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் ஸ்ரீ மஹா போதியை தரிசிக்க தனக்கு அமெரிக்க விசா பெற வேண்டிய நிலை ஏற்படும் என சபதம் செய்தார். இவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பொய்ப் பிரசாரத்தால் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை இழப்பு ஏற்பட்டது. அந்த அமெரிக்க மானியம் இப்போது நேபாள நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் 1 - 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதை கடுமையாக எதிர்க்கும் விமல் வீரவன்ச, சீனாவிடம் 6 - 7 சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. திறந்த நிதிச் சந்தையில் இருந்து 9 - 10 சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இவை முட்டாள் தனமான தேசியவாத கொள்கைகள் ஆகும். விமல் வீரவன்ச போன்ற மற்றும் ஒரு சந்தர்ப்பவாதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதானால் தனது இறந்த உடலின் மீது ஏறியே செல்ல வேண்டி வரும் என தெரிவித்திருந்தார். தற்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கள பௌத்த இனவாதத்திற்கு அடி பணிந்து கொண்டிருந்த வேளையில் வாசுதேவ நாணயக்கார அரசியல் ரீதியாக மரணம் அடைந்தார். இலங்கை முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றது, அப்போதைய வாசுதேவ நாணயக்காரவின் தலைவரான என் . எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் ஆகும். அவர் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று உரிய நேரத்தில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தி இருந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கை இன்று எதிர் கொள்ளும் நிதி நெருக்கடியைப் போன்ற ஒரு நிதி நெருக்கடி நிலையை இந்தியா எதிர் கொண்டது. அது 1991 ஆம் ஆண்டில் ஆகும். அந்த நேரத்தில் இந்தியா சோவியத் யூனியனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தது. மற்றும் பெரும்பாலும் அந்த தளத்துடன் வர்த்தகம் செய்தது. அப்போது, சோவியத் யூனியனுடன் இந்தியா இந்திய ரூபாயைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. வளை குடா போர் காரணமாக, இந்தியாவிற்கு கிடைத்த அந்நிய செலாவாணி மிகவும் குறைந்தது. 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியா, இறக்குமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடன்களை மீளச் செலுத்த முடியாத நெருக்கடியை சந்தித்தது. அரசாங்கம் பெரும் நிதிப் பற்றாக்குறையை எதிர் கொண்டிருந்த நேரத்தில், வர்த்தகப் பற்றாக்குறையும் உருவாக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர் குலைந்தது.
இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு மூன்று வார இறக்குமதிகளில் முதலீடு செய்ய முடியாத அளவு காணப்பட்டது. இதற்கு இடையில், அரசாங்கம் தனது சொந்த நிதிப் பொறுப்புகளைத் திருப்பிச் செலுத்தும் தருவாயில் இருந்தது. மூடிஸ் ஆய்வு நிறுவனம் இந்தியாவின் பத்திர மதிப்பீட்டைக் குறைத்தது. அதே சமயம் ஆட்சியில் இருந்த அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அரசு அரசியல் நெருக்கடியை சந்தித்ததால் அவரது அரசு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. அதே நேரத்தில், நிதி மதிப்பீட்டு நிறுவனங்களால் இந்தியா மேலும் கீழ் இறக்கப்பட்டது. அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தடுக்க, தங்க கையிருப்புகளை அடமானம் வைப்பதைத் தவிர வேறு வழி இந்தியாவிற்கு இருக்கவில்லை. இந்தியா பொருளாதார அழிவின் விளிம்பில் இருந்தது.
பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் பிரதமர் சந்திரசேகர் அரசு கவிழ்ந்தது. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஆணையுடன் பி. வி. நரசிங்க ராவ் பிரதமராக தெரிவானார். பொருளாதார நிபுணரான மன் மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமித்து அரசியல் செல்வாக்கு அழுத்தம் இன்றி செயல்பட அனுமதித்தார்.
அப்போதும் இந்தியா மூடிய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. இந்தியா பொருளாதார ரீதியில் அழிவதை தடுக்க நரசிம்ம ராவ் அரசு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியது. இந்தியா இனி மூடிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற முடியாது என்று இரு சர்வதேச நிதி நிறுவனங்களும் நிபந்தனைகளை விதித்தன. அதன்படி, இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கியது.
இந்தியாவின் புதிய அரசாங்கம் ஜூலை மாதம் 1 ஆம் திகதி 1991 ஆம் ஆண்டு அன்று இந்திய ரூபாயின் மதிப்பை 9% ஆகவும், ஜூலை 3 ஆம் திகதி ரூபா மதிப்பை 11% ஆகவும் குறைத்தது. ஆரம்பத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் பின்னர் அவை மறைந்து விட்டன. இந்த புதிய பொருளாதார சீர் திருத்தங்கள் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றியது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி ) 1991 ஆம் ஆண்டில் 266 பில்லியன் டொலரில் இருந்து 2019 ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் அமெரிக்க டொலராக சுமார் 1,100 சதவீதம் அதிகரித்தது. அவர்களின் வாங்கும் திறன் சமநிலை ( PPP ) 1991 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 2019 ஆம் ஆண்டில் 12 டிரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. நவம்பர் 2020 ஆம் ஆண்டு அளவில் இந்தியாவின் வெளிநாட்டு கையிருப்பு 530 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை மிஞ்சி உள்ளது இந்தியா.
அப்போதைய இந்திய பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று தசாப்தங்களுக்கு முன் அழிந்து போக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, பொருளாதார நிபுணரை நிதி அமைச்சராக நியமித்து, சுதந்திரமான தேசியக் கொள்கையைத் தொடர அனுமதித்து, புத்துயிர் அளித்தார். அப்போது மன் மோகன் சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரத் திசையில் இந்தியா இன்னும் நகர்கிறது. ஆட்சி மாறினாலும் அந்த அடிப்படை தேசிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து அவர்கள் விலகவில்லை.
நமது நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. அதில் இருந்து வெளியேற ஜனாதிபதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரக் குழுவை நியமித்தார். அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்கள் க.பொ.த ( சாதாரண தர ) பரீட்சையில் கூட சித்தியடையவில்லை.
தமிழக முதல்வர் கே. ஸ்டாலின் தனது மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்கான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரக் கவுன்சிலை பெயரிட்டார், இதில் 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற எஸ்தர் டுஃப்லோ உட்பட சிறந்த பொருளாதார நிபுணர்கள் அடங்குவர்.
ஆனால் துரதிஷ்ட வசமாக நமது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பொருளாதார கவுன்சிலில் ஒரு பொருளாதார நிபுணர் கூட இல்லை. அவர் நியமித்த பெரும்பாலான பொருளாதார கவுன்சில்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடி என்ன என்பது பற்றிய அடிப்படை புரிதல் இல்லை அல்லது அறிவு இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடைமுறை நீண்ட காலத் திட்டம் எதுவும் கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இல்லை என்பதே அந்த நியமனங்கள் மூலம் சமூகத்திற்குச் சொல்லப்படும் செய்தியாகும். எனவே, இந்த பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால பொது மாற்றீட்டைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு வெளியே உள்ள சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதற்கு உத்தியோகபூர்வ எதிர்க் கட்சித் தலைவரே பிரதானமாக இருக்க வேண்டும். இல்லையேல், அழிவின் விளிம்பில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆக்ஸிஜனைக் கொடுப்பது என்ற மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி மாநாட்டுப் பிரேரணை பொறிக்குள் சிக்கினால், நாடு இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்து விடும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற சிறிசேனவின் சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய உடன்படும் அதேவேளையில், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதியின் நடவடிக்கை, இவை வெறும் பேச்சுக் கடைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு
https://www.lankaenews.com/category/33
---------------------------
by (2022-03-15 21:38:40)
Leave a Reply