(லங்கா ஈ நியூஸ் - 25, மார்ச் ,2022 , பி.ப. 8 : 35 ) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருந்து பல பில்லியன் டொலர் பணத்தை பெறவென புதிய நிதியம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கி உள்ளார். இந்த நிதியமானது இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அல்ல என்றும் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுதலை செய்வதுடன், யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள் நடவு செய்வதற்காக அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீளவும் விடுவிக்க முடிவு செய்ததுடன், காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்குதல், யுத்த கால பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இன்றி நாடு திரும்பவும் மற்றும் புதிய அரசியல் அமைப்பின் கீழ் 13 + தீர்வு வழங்க வேண்டும் எனவும் இங்கு இணக்கம் காணப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கக் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டன.
" இலங்கை கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை நான் காண விரும்புகிறேன் " என்று ஆர். சம்பந்தன் கருத்து வெளியிட்டதாகவும் " நாட்டைக் கட்டி எழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் " என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், சமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம். ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்யன் ராஜபுத்திரன், தவராஜா கலை அரசன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
---------------------------
by (2022-03-27 03:50:08)
Leave a Reply