- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 24, பிற்பகல் 11. 00 ) நாட்டு மக்கள் கஸ்டத்திற்கு மத்தியில் தினமும் சாபம் வழங்கி முன் எடுத்துச் செல்லும் போராட்டங்களுக்கு மத்தியில் மெதமுலன ராஜபக்ஷக்கள் வீட்டின் மீது வான் வழியே இடி விழுந்தது போல குடும்பத்திற்கு உள்ளே குழப்பம் ஏற்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையே கடும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது சகோதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்தமையும் அதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் அலுவலக பிரதானியும் அவரது இரண்டாவது மகனுமாகிய யோஷித்த ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினர் நிராகரித்தமையும் இந்த விரிசலுக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவென சந்திக்க வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு விடுத்த நிலையில் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்துக் கொண்டு கடந்த 22 ஆம் திகதி தங்காலை வீட்டுக்குச் சென்று விட்டனர். மேலும் இது குறித்து பேச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் அழைக்க முயற்சித்த போதும் அந்த சந்தர்ப்பத்தை யோஷித்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் சூம் தொழிநுட்பம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட கோட்டா - மஹிந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டது. ' கோட்டா கோ ஹோம் ' என்று மக்கள் கூறும் போது கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லாமல் மஹிந்த ராஜபக்ஷவை வீடு செல்லுமாறு கோருவது எந்த வகையில் நியாயம் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு ஷங்ரிலா அதி சொகுசு ஹோட்டலில் தங்கி உள்ள முன்னாள் நிதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவை முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் சந்தித்து விரிவாகப் பேசியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் பதவி விலகத் தேவை இல்லை என நாமல் ராஜபக்ச இங்கு கூறியுள்ளார். அத்துடன் எஞ்சி உள்ள வழக்கு நிலுவைகள் முடியும் வரை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என பசில் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் ஒரு மனதுடன் இணங்கி உள்ளனர். பசில் ராஜபக்ஷ மற்றும் யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிராக இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சந்திப்பின் பின் பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்.
பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ சந்திப்பின் பின் பத்தரமுல்லையில் அமைந்துள்ள மொட்டுக் கட்சி காரியாலயத்தில் மொட்டுக் கட்சி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், சமுர்த்தி ஜகத் குமார, சனத் நிஷாந்த உள்ளிட்ட மேலும் சிலரின் பங்கேற்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையில் 113 கை ஒப்பங்களைக் காண்பிக்கவென தொடங்கப்பட்ட திட்டத்தில் வெறும் 42 பேர் மாத்திரமே கை எழுத்து இட்டுள்ளனர். மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து குறைந்தது 50 பேரின் கை ஒப்பங்களை கூட மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகப் பெற முடியவில்லை. புதிய அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அல்லது மஹிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கை ஒப்பத்தைக் கூட மொட்டுக் கட்சி செயலாளரால் பெற முடியவில்லை.
பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டு வரப்படும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்த முடியாது என்றும் ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால் தன்னால் அதற்கு ஆதரவாக கை உயர்த்த முடியும் எனவும் டலஸ் அழகப்பெரும மொட்டுக் கட்சி செயலாளருக்கு தெரிவித்துள்ளார். டளஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமித்து இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை முன் கொண்டுச் செல்ல சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் வௌியிடவில்லை. மக்கள் போராட்டத்திற்கு வெளியில் பதில் கிடைக்காத நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் அளிக்கும் அரசியல் அமைப்பு திருத்தத்தின் பின்னர் சர்வ கட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க இணங்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அவ்வாறு இல்லாமல் நாட்டை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய வரம்பற்ற அதிகாரங்களுடன் கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர வைத்துக் கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைப்பது ஒரு போதும் சாத்தியப்படாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்தாக உள்ளது.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யா விட்டால் மக்கள் வீதியில் இறங்கி ஹூ சத்தம் இட்டு அசிங்கப்படுத்துவர் என்பதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விரும்பியதைச் செய்ய இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவிற்கு அறிவுரை வழங்கி உள்ளனர். எனினும் இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த ராஜபக்ஷ துளி அளவும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதுடன் முடிந்தால் ' கோட்டாவை பதவி விலகிச் செல்லச் சொல்லுங்கள் ' என்று விடாபிடியாகக் கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி பிரதமர் பதவியில் மாற்றம் செய்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த இணங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதனை மாகாநாயக்க தேரர்கள் உறுதி செய்துள்ளனர்.
---------------------------
by (2022-04-26 07:34:20)
Leave a Reply