- எழுதுவது அலுவலக செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் , 27 , பிற்பகல் 02 : 35 ) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு அளிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளி வரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதுவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வெளி நாட்டு ஊடகவியலாளர் ஒருவருடன் டுவிட்டர் தளத்தில் கருத்து பரிமாறிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், “ இதன் பின்னர் விமல் வீரவன்ச அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்படுவதானால் நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு நீங்கள் கூறுகிறீர்களா ? " எனக் கேட்டிருந்தார்.
நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோல்வியை சந்தித்தால் புதிய பிரதமர் ஒருவரையும் அமைச்சரவையையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத போது, அவ்வாறான யோசனைகளுக்கு அமைய செயற்படும் அரசியல் அதிகாரத்தை ஜனாதிபதி இழக்கின்றார் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம். ஏ. சுமந்திரனின் கருத்து படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வது தான் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என கருதுகிறார்.
அதற்காக, அரசியல் அமைப்பின் 21 ஆது திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பாராளுமன்றில் குற்றப் பிரேரணை தாக்கல் செய்து அவரை பதவி நீக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.
எம். ஏ. சுமந்திரனின் கூற்று படி, குற்றப் பிரேரணை கொண்டு வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம்.
வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிங்கள மக்கள் தலையிடாத காரணத்தால் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் கோட்டா கோ ஹோம் போராட்டங்களில் கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இந்தியாவின் தி இந்து நாளிதழுக்கு தெரிவித்து இருந்தார்.
சுமந்திரனின் இந்த சட்ட மற்றும் அரசியல் வாதங்களின் படி, இலங்கையில் ராஜபக்சக்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தற்போது ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாக்கும் மேடைக்கு எம். ஏ. சுமந்திரந்திரனும் வந்து சேர்ந்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனின் இந்த சட்ட மற்றும் அரசியல் தர்க்கத்தின் பிரகாரம் நம்பிக்கை இல்லா பிரேரணை நாட்டுக்கு ஆபத்து நிறைந்தது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்யும் செயற் பாட்டிற்கு அதிக காலம் செல்லும். 21 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலம் கொண்டு வந்து நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.
இந்த நேரத்தில் ராஜபக்சக்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா கருதுவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த பின்புலத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ராஜபக்சேக்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த நாட்டில் வசிக்கும் பெரும் அளவிலான தமிழ் மக்கள் கலந்து கொள்வது இல்லை என தெரிய வந்துள்ளது.
---------------------------
by (2022-04-27 14:10:39)
Leave a Reply