~

தூரத்தில் இருந்து எழுதுகிறேன் : இரண்டாவது ஏப்ரல் கலவரத்திற்கு, முதலாவது ஏப்ரல் கலவரக்காரரால்...!

-எழுதுவது சுனந்த தேசப்பிரிய

( லங்கா ஈ நியூஸ் - 2022, ஏப்ரல் 30 , பிற்பகல் 10 : 30 )  அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் இருந்த இடத்தில் பாரிய அடர்ந்த மரங்கள் மட்டுமே இருந்தன.  அது 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு சித்திரை மாதம். பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை அண்டிய வலப்பனைக்கும் கிவுலக்கலேக்கும் இடைப்பட்ட மலைக் காட்டில் இருந்தோம். அந்தக் காலத்தில் யானைகள் மலையில் நடமாடுவதைப் பார்த்தோம்.

இன்றும் சித்திரை மாதத்தில் இன்னும் பலத்த மழை பெய்கிறது. நீங்கள் நனைந்த படி காலி முகத்திடலில் போராட்ட கிராமத்தில் இருந்தீர்கள்.  அப்போது இனந் தெரியாத வயதான ஒரு தம்பதிகள் வந்து ஐநூறு மழைக் கவசங்களை கொடுத்தார்கள். அந்தக் கதையைப் பார்த்ததும் என் கண்கள் குளமாகின. மூக்கு மரமானது.

51 வருடங்களுக்கு முன் அந்த ஆணவ மழையால் என் கண்கள் ஈரமாகவில்லை. அவை தீப் பற்றி எரிந்தன. ஆனால் நாங்கள் மட்டும்தான் எங்களுக்கு இருந்தோம். உண்மையில் எங்களுக்கு நாமும் இருக்கவில்லை.

அந்த சித்திரை மாதம் 6 ஆம் திகதி வெலிமடை உலப்பனே மலைத் தொடரில் 50 - 60 பேர் கூடி இருந்தோம். அதே எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை நாங்கள் சேகரித்து வைத்திருந்தோம்.  நக்கிள்ஸ் மலையில் உள்ள காட்டிற்கு செல்ல முடிவு செய்தோம். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க.

இந்த சித்திரை மாதம் 9 ஆம் திகதி நீங்கள் பல்லாயிரக் கணக்கானோர் கூடி இருந்தீர்கள். துப்பாக்கிகள் உங்களிடம் இல்லை, வீர கோஷங்கள் மாத்திரம் இருந்தன. நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் இடத்தில் நீங்கள் ஒன்று சேர்ந்துள்ளீர்கள். அது தான் அன்பு காதல் நிறைந்த இடத்தில்.  நானும் என் தோழியும் அங்கே காற்றுக்கு ஒரு ரகசியம் சொல்லி இருக்கிறோம். எனது செல்வச் செழிப்பான இளம் நண்பர் ஒருவர் தனது காதலியுடன் கோட்டாகோகமவிற்கு வந்து ' காதல் ' என்ற பலகையை வைத்ததைக் கண்டதும் எனக்கு அந்தக் கடந்த காலம் நினைவுக்கு வந்தது. உங்கள் போராட்டத்தில் ' அன்பு ' நிரம்பி வழிகிறது.

எனவே, உங்கள் போராட்டம் முழு நாட்டிற்கும் உலகிற்கும் அழகாகத் தெரிந்து இருக்க வேண்டும்.

சித்திரை மாதத்தில் நாங்கள் வெறும் இளைஞர்களாக இருந்தோம். நாங்கள் ஒரு சகோதரியையும் எங்களுடன் அழைத்து வரவில்லை. நாங்கள் ஆண்கள் தானே ..! மற்றவர்கள் எங்களை தவறாக வழி நடத்தும், ஆயுதம் ஏந்திய இளைஞர்களாக ஏமாறிச் சென்றவர்களாக எங்களைப் பார்த்தார்கள். அல்லது பயங்கரவாதிகளாக பார்த்தார்கள்.

இந்த சித்திரை மாத போராட்டம் அனைத்து இளைஞர்களுக்கும் வண்ண மயமானது. போராட்டம் பன்முகத் தன்மை நிறைந்தது. நவீனம் நிறைந்தது.  

அந்த சித்திரை மாதத்தில் ஐம்பது, அறுபதுகளில் தொடங்கிய எங்கள் பயணம் மேலும் மேலும் கடினமாகி விட்டது. நாங்கள் அன்று முருங்கை இலை சாப்பிட்டோம். நடு நடுவே, மகாவலி கிளை ஆற்றில் டைனமைட் பயன்படுத்தி கொன்று பிடிக்கப்பட்ட சிறு மீன்கள் எரிக்கப்பட்டன. துப்பாக்கி வாயில் இருந்து அரசியல் அதிகாரம் வளர்கிறது என்று நாம் சொன்னோம்.

உங்களுக்கு சாய் டீயில் இருந்து பொங்கல் சாதத்துடன் சீன ரோல்ஸ்களைக் கொண்டு வருவது நாட்டு குடி மக்கள். இன்றும் நான் பார்க்கிறேன் மாரி பிஸ்கட் சாப்பாட்டுடன் வரும் குழந்தைகளை அரவணைக்கும் வாலிபர்களை.  உங்கள் போராட்டம் உணர்வுகளால் பேசப்படுகிறது. வார்த்தைகளால் பேசப்படுகிறது. இந்த ஒரு உணர்ச்சி வலுவான சக்தியாக மாறி விட்டது. நீங்கள் ஒரு மிகவும் அழகான மாதிரி கிராமத்தை நடத்தி வருகிறீர்கள்.

அந்த சித்திரை மாதத்தில் தினமும் காலையில் கண் விழிக்கும் போது எங்கள் குழு குறைந்து கொண்டே சென்றது.  சிலர் சிறந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றிருந்தனர். இறுதியில் கூட்டத்தை விட எங்களிடம் அதிக துப்பாக்கிகள் இருந்தன. என் தோளில் இரண்டு துப்பாக்கிகள் இருந்த நாட்கள் இருந்தன. எனினும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தோம்.

இந்த சித்திரை மாதத்தில், உங்கள் குழு ஒவ்வொரு நாளும் அளவிலும் தரத்திலும் வளர்ந்து வருகிறது. அளவு பெருக்கல் ஆகிறது. அரசியல் போராட்டத்திற்குச் செல்லாத எனது உறவினர்கள், மகன்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்து  காலி முகத்திடலுக்குச் சென்ற படங்கள் என் கண்களை மீண்டும் ஈரமாக்குகின்றன.  

உற்சாகமான உணர்வு இதயத் துடிப்பு சூடான கண்ணீரில் வௌியாவதை உணர்கிறோம். !

சித்திரை மாதத்தில் ஒரு நாள் பச்சையாக பூசணி காயை சாப்பிட்டோம். அவற்றைக் எமக்கு கொடுத்த விவசாயிகள் எங்களுக்கும் இராணுவத்திற்கும் பயந்து இருந்தார்கள். நாங்கள் இராணுவத்தை இலக்கு வைத்தோம். இராணுவம் எங்களை இலக்கு வைத்தது.

இந்த சித்திரை மாதத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவல்துறைக்கு ரோஜா பூ கொடுக்கிறார். ஒரு துறவி ஒரு துண்டுப் பிரசுரம் கொடுக்கிறார். ஒரு இளைஞன் தண்ணீர் போத்தல் கொடுக்கிறான். பல காவல் துறை அதிகாரிகள் இதய பூர்வமாக போராட்டத்தில் மையம் கொண்டுள்ளனர். காலி முகத்திடலுக்கு வராத, வர முடியாத  நூறாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றும் கோட்டாகோஹோம் பெருமூச்சுகள் கடற் கரையில்  அலைகளை உருவாக்கும் சுழலை ஏற்படுத்துகிறது.

இது ஒரு புரட்சி. நாட்டு மக்களின் மனதை மாற்றும் புரட்சி.  

அந்த சித்திரை மாதத்தில் நான் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அரசியல் பொறுப்புத் தலைவராக இருந்தேன். ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் எவரும் எம்முடன் இருக்கவில்லை. நாங்கள் அவர்களை எடுக்க முயற்சிக்கவும் இல்லை. தமிழ் மொழி பேசத் தெரியாதவர்களாக நாம் இருந்தோம்.

இந்த சித்திரை மாதத்தில் புத்தாண்டு உணவை போர்க் களத்திற்கு கொண்டு வருகிறார்கள் முஸ்லிம் பெண்கள் குழு. முஸ்லீம் குடும்பங்கள் கொடி ஏற்றுவதைப் பார்க்கும் போது கனவு நனவாகும் நிம்மதி வருகிறது.

இறுதியாக அந்த சித்திரை மாத இறுதியில் நாங்கள் ஹுன்னஸ்கிரியவை அடைந்த போது, தலைமைக் குழுவின் எட்டு பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர். முன்னேறிச் செல்வதா இல்லையா என்ற பிளவு  எமக்குள் ஏற்பட்டது.  நான்கு பேர் சாலையில் இருந்து குதித்து நக்கிள்ஸ் நோக்கி செல்ல முடிவு செய்தனர். நாங்கள் நாலு பேர் எங்கள் கைகளில் இருந்த அனைத்து கைத் துப்பாக்கிகளையும் ரவைகளையும் அவர்களிடம் கொடுத்து விட்டு திரும்பினோம். முன்னேறிச் சென்ற நான்கு பேரில் இருவரை மக்கள் ராணுவத்திடம் பிடித்துக் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மற்ற இருவரும் பின்னர் திரும்பி வந்தனர்.

ஒரு போராட்டத்தின் மத்தியில் பிளவுகள் ஏற்படுவது இயற்கையானது. அவை சரியாகக் கையாளப் படாவிட்டால், சோகத்தில் முடிகிறது.  

சித்திரை மாதம் வெளி வரும் போது, கலாச்சாரப் படை எடுப்பு நடந்ததாகக் கூறப்பட்டது.  அதை முறியடிப்போம் என்று நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பீர் ஒன்று குடிப்பதும் தவறாகி விட்டது. காதலியாக இருந்த வகுப்பு மாணவிக்கு நான் பூட் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.  முடி சுருட்டை நிலையை அழித்து பின் பக்கம் கொண்டை கட்டினேன்.

இதனைக் கருத்தில் கொண்டு தான் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவிகளுக்கு கவுன், ரப்பர் செருப்பு, அட்டைப் பலகைகள் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு கொண்டு வர நேற்று வரை உத்தரவு  இடப்பட்டது. 88 - 90 களில் பாலியல் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இன்று காலி முகத்திடல் போர்க் களத்தில் ஒரு கலாச்சார வசந்தம் உள்ளது. உடையிலும், காதலிலும், பேச்சிலும், பாடலிலும், நடனத்திலும் புதுமை உள்ளது ! போர்க் களத்தில் காதல் மலர்ந்து இருக்கலாம். உக்ரைனில் போர்க் களத்தில் கூட அன்பின் பிணைப்புடன் அழகான திருமணங்கள் கூட நடந்தன. அது தான் வாழ்க்கை !

எனது சொந்த கிராமத்தை சேர்ந்த எனக்கு நன்கு தெரிந்த நபர்களே என்னை போலீசில் பிடித்து ஒப்படைத்தனர். அதனால் வாழும் அதிர்ஷ்டம் கிடைத்தது. கண் முன்னே கொலை செய்யும் போது. அந்த மக்கள் அரசாங்கத்தின் பக்கத்தை எடுத்து  நின்றிருந்தனர்.

நாங்கள் முகாம் அமைத்த பின் வயது வந்த அரசியல் வாதிகளைத் தேடிச் சென்றோம். செங்கொடி சங்கத் தலைவர் ராமையா போன்றவர்கள். போராட்டம் பரந்த மக்கள் பங்கேற்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கோட்பாட்டு ரீதியில் அவர்கள் எமக்கு ஆலோசனை வழங்கினர்.   அப்போது எனக்கு இருபது வயது கூட ஆகவில்லை. சகோதரர் ராமையாவிடம் கற்றுக் கொண்டேன். நான் சுசில் சிறிவர்தனவிடம் ஆங்கிலம் கேட்டேன்.

இன்று உலகம் வேறு. அறிவுள்ள இளம் தலைமுறையினர் எல்லா இடங்களிலும் மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர். நாம் நினைத்த விவசாயத் தலைமை வரலாற்றிற்கு உரியது. ஆனால் அவர்களின் சக்தி முக்கியமானது. ஆனால் அனுபவத்தின் மதிப்பு பழையதாக இருக்காது. இன்றைய உலகில் போராட்ட களம் இளமை ஆற்றல் நிறைந்தது என்பது உண்மை. நீங்கள் இந்த நவீன சண்டை மரபுகளை விதைக்கிறீர்கள்.

அதன் பிறகு 7 வருடம் ஜம்பர் அணிந்து காலையில் தேங்காய் சம்பலும் பாணும் சாப்பிட்டேன். தினமும்.  ஆனால் எனது சிறை கூட சுவரில் இரண்டு துளைகள் ஏற்படுத்தி பலகை வைத்து புத்தக அலமாரிகள் இரண்டு செய்தேன். சிறை கட்டுப்பாட்டாளர்கள் அதனை அனுமதித்தனர். எங்களிடம் புத்தகங்களைக் கேட்டுப் படிப்பவர்களும் இருந்தார்கள்.  வெறும் தரையில் தூங்கிக் கொண்டே ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்களைப் படித்தேன். "  எஃகு எப்படி உயிர்பெற்றது " என்பதை ஒரே இரவில் படித்தேன்!

இந்த சித்திரை மாதத்தில் போர்க் களத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கி உள்ளீர்கள். மீண்டும் நூலகத்தைப் பார்த்ததும் என் கண்களில் நீர் வழிந்தது. போர்க் கள பூமியில் விடிய விடிய விழித்து புத்தகங்களைப் படிப்பவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்ப்பது கனவு.

நான் சிறையில் இருந்த போது தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய  " மரண வீட்டுக் குறிப்பு " என்ற புத்தகத்தை விரும்பிப் படிப்பேன். அன்று நாள் முழுவதும் ஒரே இடத்தில் வசிக்கும் போது, சிறிய சம்பவங்கள் கூட அதன் கடிதங்கள் மற்றும் படங்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. நான் அதை அனுபவித்தேன். ஒன்றாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன்.

போராட்ட காலத்தில் நாங்கள் புத்தகங்கள் படிக்கவில்லை. போராட்ட இலக்கியம் எதுவும் உருவாக்கவில்லை. ஆனால் சிறைகளுக்குள் நாங்கள் போராட்ட இலக்கியம் படைப்பு செய்தோம். புத்தகங்களைப் படிக்கவும் மொழி பெயர்க்கவும் நான் சிறையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன்.

அந்த சித்திரை மாதத்தில் நாங்கள் அப்போதும் பிரபலமாக இருந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினோம். அதனால் தான் மக்கள் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் ஆயுதம் ஏந்திய போது மக்கள் அச்சம் அடைந்தனர். வாய்ப்புள்ள உலக நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம் எம்மை நசுக்கியது.

இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள மிக மோசமான ஊழல் மற்றும் தீய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் முழுவதும் சலிப்பு அடைந்து இருக்கும் போது இந்த சித்திரை மாதத்தில் நீங்கள் போராடுகிறீர்கள். அதுதான் இந்த மக்கள் ஆதரவின் ரகசியம். மேலும் போராட்டம் எந்த வகையிலும் வன்முறையாக இருக்கக் கூடாது என்ற உங்கள் புரிதல் அன்பான ஒன்று.

புரட்சி என்பது ரோஜாக்களின் படுக்கை அல்ல என்று நாங்கள் கூறினோம். அது இன்றும் உண்மை. நீங்கள் ரோஜாக்களைக் கொடுக்கும் போது துப்பாக்கிகள் சத்தம் கேட்பதை நீங்கள் இன்னும் கேட்கலாம். தமக்கு பணம் மற்றும் அதிகாரத்தில் மோகம் கொண்ட மனம் இல்லாத ஆட்சியாளர்கள் செய்யாதது உலகில் எதுவும் இல்லை.  

எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வோம் என்று தெரிய வில்லை. பரந்த கூட்டணி பற்றி எங்களுக்குத் தெரியாது. ஏனைய எல்லோரும் தவறு என்று நாம் நினைத்தோம். நாங்கள் ஒரு பெரிய அமைப்பை வைத்திருந்தோம் ஆனால் தவறான வழியில் போராடினோம். தவறான நேரத்தில் போராடினோம். தனியாகப் போராடினோம். அதனால் தான் நசுக்கப்பட்டு விட்டோம்.

நான் அதற்காக வருத்தப்படவில்லை. ஏனென்றால் அந்தப் போராட்டம் எனக்கு ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது. ஆனால், இளைய தலைமுறையினர் நம்பிக்கைகள் சிதைந்து மிக மோசமான வன்முறைக்குச் சென்றனர்.  போர் மட்டும் அல்ல, அரசியலும் ஒரு கலை மற்றும் அறிவியல். ராஜதந்திரமும் அது போலத் தான்.

எல்லாம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. நான் எப்போதும் எல்லாவற்றையும் பற்றி கற்றுக் கொள்கிறேன். ஒன்று நான் தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டேன். ஆனால் அதைக் கற்றுக் கொள்ள தோல்வி தேவையில்லை.

லைஃப் ஆஃப் பையில் ஹிரண் சொன்னது போல, " நண்பா, நான் உன்னை காதலிக்கிறேன் " என்று, ஆனால் நான் இப்போது " காலாவதியாக " தாக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவன் ! சுனில் (மாதவா) இருந்திருந்தால் அப்படித்தான் சொல்வார். சுனில் வயதை எடை போட்டு வைத்துக் கொண்டுதானே எழுதினார்.

அதனால், “ போராட்டத்தை நேசிக்கிறேன் ! போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நேசிக்கிறேன் ! " வெற்றி உண்டாகட்டும் " என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் !

சுனந்த தேசப்பிரிய

---------------------------
by     (2022-04-30 17:40:03)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links