இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் நாட்டை பொறுபேற்கத் தயார்..!
(லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 07 , பிற்பகல் 06 : 45 ) ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டில் இருந்து சற்று கீழ் இறங்கி வந்துள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் நமது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து மிதமான நிலைக்கு வந்துள்ளனர். அதன்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ள முன் மொழிவுகள் அடிப்படையில் நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று 07 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ள யோசனை திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தேவையான சட்டத் திருத்த ஏற்பாடுகளை 6 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் எனவும் அதிகபட்சமாக இந்த நடவடிக்கை 15 மாதங்களுக்குள் நடைமுறை படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,
" ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பார தூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ள முன் மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தி உள்ளது.
மேலும் தற்போதைய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன் வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத் திட்டத்தை தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாக நாங்கள் தெரிவிக்கின்றோம்.
இதற்கு அமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது. " இவ்வாறு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணைய சேவைக்கு வந்துள்ள உள்ளகத் தகவல் படி, ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு சக்தி வாய்ந்த வௌி நாட்டு அரசு ஒன்று வழங்கிய உத்தரவாதமே காரணம் என தெரிய வந்துள்ளது. குறித்த பலம் வாய்ந்த வௌி நாட்டின் விசேட பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருடன் இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பின் பின்னர் சுமார் நான்கு மாதங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவார் என அந்த பலம் வாய்ந்த நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர். இதற்கு இடையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்குத் தேவையான சில நிறைவேற்று அதிகாரங்கள் பாராளுமன்றுக்கு வழங்கப்படும். இதற்கான உறுதி மொழியை குறித்த சக்தி வாய்ந்த வௌி நாட்டு அரசானது எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் வழங்கி உள்ளதாக தெரிய வருகிறது. ( நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் முன்னர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. )
இதன்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன் மொழிவுகள் அதற்கமைய அமுல்படுத்தப்படும். அவ்வாறு திட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ஏனைய வல்லரசு நாடுகள் நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி வழங்கியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய அதிகாரபூர்வ அறிவிப்பு இதன் பின்னணியில் தான் வௌியானது. நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்தால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணைகளை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் எதிர்க்க முடியாது.
இந்த அனைத்து மாற்றங்களுக்கும் காரணம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் சுயாதீனமாக வீதியில் இறங்கி ராஜபக்சக்களை வீட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தி கொடுத்த அழுத்தம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அரசியல் சார்பற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்த முன் மொழிவுகள் பின்வருமாறு,
நிலவும் நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான 13 யோசனைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் அர்த்தமுள்ள பாராளுமன்ற கண்காணிப்பு இல்லாமை, அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பொறுப்புக் கூறல் மற்றும் வௌிப்படைத் தன்மை இல்லாமை என்பன தற்போதைய அமைதி இன்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கம் 18 மாதங்கள் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் 6 மாதங்களுக்குள் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் அரசாங்கத்தின் காலம் நிறைவிற்கு வரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு பேரவையின் அனுமதியின் படி மத்திய வங்கியின் ஆளுநரும் நிதிச் சபையும் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சிபாரிசு செய்துள்ளது.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை, குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்படல் வேண்டும் என்ற யோசனைகளைத் தாம் முன்வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
---------------------------
by (2022-05-08 12:32:02)
Leave a Reply