~

இது ஒரு மகத்தான மக்கள் எழுச்சியின் முடிவா அல்லது இரண்டாம் சுதந்திரத்தின் தொடக்கமா?

-பி.ஏ.காதர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 22 ஆம் திகதி , பிற்பகல் 11 : 30 )  கடந்த இருவாரங்களில் எல்லாமே  மின்னல் வேகத்தில் நடந்தேறிவிட்டன. 

19.04.2022 ரம்புக்கனவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிர் இழந்தார் பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தும் இந்த அரச பயங்கரவாத தந்திரோபாயம்  வெகுண்டெழுந்த மக்களாலும் அணிதிரண்ட சட்டத்தரணிகளாலும் முறியடிக்கப்பட்டது.

இருண்ட திங்கள் 09.05.2022, அமைதியான போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்சவின்  குண்டர்களால்  திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக  மக்கள் பேரெழுச்சி வெடித்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவிவிலகி பலத்த பாதுகாப்போடு ஓடி திருகோணமலை கடற்படை தளத்தில் ஒளிய நேர்ந்தது. ஹிட்லரின் நாசிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றித்தினமான  (மே 09 ) அதே தினத்தில் ராஜபக்சவின்  நவீன பாசிசம் தோற்கடிக்கப்பட்டது.  மக்களுக்கு கிடைத்த  இந்த வெற்றி சாதாரணமானதல்ல.

நடக்க முடியாததை நடத்திக்காட்டிய உங்களால் மீதி தூரத்தையும் கடக்க முடியும்..

2009 இதே மே மாதம் பல்லாயிரம் சாதாரண தமிழ் மக்களை படுகொலை செய்து விடுதலை புலிகளை முறியடித்து முப்பது வருட உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த  போர்குற்றவாளியான இவரும் இவரைச்சார்ந்த இராணுவ உயர் அதிகாரிகளும் தண்டனையின்மை சலுகையுடன் வெற்றிவிழாக்கள் நடத்திக்கொண்டு, ஞானசார தேரர் போன்ற இனவாத பெளத்த பிக்குகளை வளர்த்து   முஸ்லிம் மக்கள் மீது இனவன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, தேச பக்தி என்ற பெயரில்  இவர்கள் சிங்கள பெளத்த பேரினவாத குடும்ப சர்வாதிகார ஆட்சி நடத்திய போது இன நல்லிணக்கம்  புறந்தள்ளப்பட்டது,  யுத்தத்தால் ஏற்கனவே சீரழிந்து போயிருந்த நாட்டின் பொருளாதாரம் இவர்களின் அதீத ஊழலால் பலத்த அடிவாங்கியது. 2015 தேர்தலில் இதனால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ராஜபக்ச குடும்ப ஆட்சி மறுபடியும்  ஆட்சிக்குவர தீவிர சிங்கள பெளத்த பேரினவாதத்தை கையில் எடுத்தது, முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவன்முறை தாக்குதல்களையும்  இறுதியில் ஈஸ்டர் தாக்குதலை ஒருசில இஸ்லாமிய பயங்கரவாதிகளைக்கொண்டு திட்டமிட்டு அரங்கேற்றி, இனவாத பெளத்த உயர்பீடத்தின் ஆசிர்வத்தோடு அறுதி சிங்கள பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று இராட்சத  பலத்தோடு ஆட்சிக்கு வந்தபின்னர் நவீன பாசிச தன்மை கொண்ட தீவிர சிங்கள பெளத்த பேரினவாதமும், ஊழலும், யதேச்சதிகாரமும் நிறுவனமயமானது. 

யாராவது நினைத்தார்களா இத்தனை விரைவில் இவர்கள் அம்பலமாவார்கள் என்று? இவர்களை தேர்ந்தெடுத்த அதே சிங்கள மக்கள் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள் என்று? இனரீதியில் பிளவுண்டிருந்த இலங்கை இந்தளவு ஐக்கியப்படும் என்று?

இந்த அதிசயத்தை செய்துகாட்டியது யார்? நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு  காணாத பொருளாதார நெருக்கடிதான் இதற்கு  அடித்தளமானது என்பது உண்மைதான்.  ஆனால் இதுவரை இவ்வாறான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது மக்களின் ஆத்திரத்தையும் கவனத்தையும் எண்ணிக்கையில் சிறுபான்மை மக்கள் மீது திருப்பி விடுவதுதான் வழமையாக இருந்துவந்துள்ளது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அது இலங்கையையும் பாதித்தபோது  1915 முஸ்லிம்களுக்கெதிரான இன வன்முறை வெடித்தது. 1930 களில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையில் இந்திய தமிழருக்கும் மலையக தமிழருக்கும் எதிரான இனவாதம் உச்சகட்டடத்தை அடைந்தது. 1970 களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மலையக தமிழர் மீது இனவன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இத்தடவை மாத்திரம் ஏன் இந்த ஆட்சியாளர்களின் இன்வாதத்தை தூண்டும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை?

இதற்குகாரணம், சிங்கள பெளத்த பேரினவாதிகளை பகைத்துக்கொண்டால் தங்களுக்கு வாக்கு விழாமல் போகுமோ என்ற அச்சத்தில் மெளனம் காக்கும் வேடதாரிகள் அல்ல, அத்தகைய தலைமைகளை ஒதுக்கித்தள்ளி தலைமையை தமது கரங்களில் எடுத்துக்கொண்டிருக்கும் தலைமையற்ற தலைமைகளே இந்த அதிசயத்தை செய்து காட்டியிருக்கிறார்கள். நடக்க முடியாததை நடத்திக்காட்டிய உங்களால் மீதி தூரத்தையும் கடக்க முடியும்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது..

இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையைப்போல மகிந்தவின் இடத்துக்கு பின்கதவால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமன  நாடகத்தின் பின்னால் ஒரு வல்லரசு இருக்கிறது. ராஜபச குடும்பமும் அவரது கட்சியினரும்  மாத்திரமல்ல, அடுத்த தேர்தலில் மக்களிடம் செல்லமுடியாத ஊழல்மிக்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுமே தங்களது ஊழல் வருமானத்தின் வழி அடைப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். 

அத்துடன் ராஜபக்ச குடும்ப ஆட்சியில் அக்குடும்பமும் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருசிலரும் மாத்திரமே சம்பாதித்தார்கள். தனது கட்சியை ச் சேர்ந்த ஒருவர் கூட பாராளுமன்றில் இல்லாத ரணிலுக்கு தான் பதவியில் இருக்க பாராளுமன்றில்  பெரும்பான்மை ஆதரவு தேவை. இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களும், எஞ்சியிருக்கும் சில காலத்தில் இயன்றளவு சம்பாதிக்க நினைப்பவர்களும் ரணிலோடு குதிரை பேரம் பேசி அவரை ஆதரிக்கிறார்கள். ஒரு வல்லரசுக்கு சேவகம் செய்யும் ஒரு சில கட்சிகளும் ரணிலை தாங்கிப்பிடிக்கின்றன. ராஜபக்ச குடும்பம்  தாம் இழைத்த குற்ற செயல்களில் இருந்தும் ஊழல்களில் இருந்தும் தம்மை காப்பாற்றுவதற்கு  ரணிலைத் தவிர  வேறு யாரைத்தான் நம்பும்? அவர்தான் மஹிந்த ராஜபக்சவின் நான்காவது சகோதராயிற்றே! பிற கட்சிகளுடன் கலந்துரையாடாமலே ஒற்றை ஓநாயான ரணிலை அவசரமாக நியமித்தது நாட்டை காப்பாற்ற அல்ல, தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான்.   மக்கள் பலமோ பாராளுமன்ற பலமோ இல்லாத ரணில் அவர்களுக்கு கிடைத்த வரம். நாட்டுக்கு கிடைத்த சாபம். ரணில் தன்னை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அவரை அரியணை ஏற்றிய வல்லரசினதும்  பணயக்கைதி, நாடோ இவர்களின்  பணயக்கைதி. இந்த நிலை விரைவில் மற்றொரு நெருக்கடியை தோற்றுவிக்கும்.

மக்கள் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் போது அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கம் ஒன்றுதிரள்வது வரலாற்றில் புதிய ஒன்றல்ல. இதுவே மக்கள் போராட்டம் வெற்றியை நோக்கி நகர் கிறது என்பதற்கான அறிகுறிதான்.  இத்தருணத்தில் தான் முன்னரை  விட தன்னம்பிக்கையும் ஒற்றுமையும் தேவை. இப்போது சிலர் 'எமது போராட்டம் தோற்றுவிட்டது ராஜபக்ச அணி வெற்றிபெற்றுவிட்டது' என ஒப்பாரிவைப்பது கேட்கிறது.  இது உண்மை அல்ல இன்னும் கலக்கத்தில் இருப்பது ஆட்சியாளர்கள் தான். 

பின்னடைவுகள் இல்லாத முன்னேற்றம் கிடையாது..

இப்படி இவர்கள் ஒப்பாரி வைப்பதற்கான கரணம் இலங்கையில் இப்படியான சாத்வீகமான ஜனநாயகத்திற்கான ஒரு பாரிய மக்கள்  போராட்டம் நடைபெறுவது இதுவே முதல் தடவை. இவர்கள் சுலபமான விரைவான வெற்றியை எதிர்பார்த்து இதில் இணைந்தவர்கள். மக்கள் எழுச்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல. அது பல்வேறு திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது. ஆளும் வர்க்கம் இதனை முறியடிக்க அனைத்தை சதிகளையும் செய்யும். இப்போது அவர்களுக்கு இளைஞர்களை கைது செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை பாவித்து முக்கிய அமைப்பளாளர்களையும் கைது செய்யலாம், இராணுவத்தினதும் பொலிசினதும் துணையோடு போராட்டத்தை நசுக்க நினைக்கலாம். இன்று மனித உரிமைமீறலுக்கு எதிராகவும் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கின்ற வல்லரசுகள் திரை மறைவில் ஆட்சியாளர்களுக்கு அதனை  நசுக்க ஆதரவு கொடுக்கலாம் ஏனெனில் நாட்டின் தற்போதய நெருக்கடியில் லாபமடைபவர்கள் அவர்களே.

இதற்கான உதாரணங்கள் ஏராளம் உண்டு. மூன்று பேருக்கு மேல் கூட முடியாது என்ற இரும்பு சட்டம் இருந்த கென்யாவில் சுமார் 61 வருடம் நடைபெற்ற நீண்ட மக்கள் போராட்டத்தில் மக்கள் சந்தித்த சவால்களை விடவா இப்போராட்டம் சங்கடங்களை சந்தித்துவிட்டது? இராணுவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகத்தொடங்கி 61 வருடங்களாக தென் கொரியாவில் தொடரும் ஜனநாயகத்துக்கான போராட்டம் எத்தனை படிப்பினைகளை எமக்கு தந்துள்ளது? இந்த வரிசை நீண்டது. 

இன்று ஆளும்தரப்பினர் மக்களுக்கு எதிராக ஒன்று பட்டிருக்கிறார்கள். இலங்கை இந்து சமுத்திரத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் அதில் மேலாதிக்கத்திற்காக போட்டியிடும் வல்லரசுகளும் அவர்களின் பின்னால் இருக்கின்றன.  ஆனால் ஒன்றுபட்ட மக்களின் பலத்தின் முன்னால் அவர்களால் தாம் நினைப்பதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த ஒற்றுமைதான் மக்களின் பலம். இந்த ஐக்கியம் தொடரும்வரை அவர்களால் இப்போராட்டத்தை எதுவும் செய்யமுடியாது.

இவர்களின் இந்த கூட்டு சதியை முறியடிப்பதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டிய தருணமிது. ஊசலாட்டங்களுக்கு இடம் கொடாமல் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம். 1948ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து போராடாமல், ஒரு துளி ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றோம். ஆனால் நாம் இப்போது நடத்துவது அதிகார வெறி பிடித்த எமது சுதேச ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போராட்டம். அது அத்தனை சுலபமானதல்ல. ஆனால் முடியாததல்ல.

முன்னால் உள்ள பணிகள்..

இப்போது ராஜபக்ச  ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அதிகம் போனால் இன்னும் இரண்டு வருடங்கள் - அடுத்த தேர்தல் வரையும் இவர்களின் ஆட்டம் தொடரலாம்.  மக்கள் போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு நாம் உடனடியாக செய்யவேண்டிய பல பணிகள் எம்முன்னால் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்றவேண்டும்: இருண்ட திங்கள் வன்முறையாளர்களையும் அதன் சூத்திரதாரிகளையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோஷமும் இப்போது சேர்த்துக்கொள்ளப்படுத்தல் வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் மன்றங்களை (People’s council) ஏக தலைமையிலன்றி ஐக்கிய முன்னணி கோட்பாட்டின் அடிப்படியில் அமைத்தல் வேண்டும், அடுத்த தேர்தலுக்கு தயாராகவேண்டும். அதில்   சொந்த வேட்பாளர்களை நிறுத்துவேண்டும். . மக்கள் மைய  அரசியலமைப்பை உருவாக்க்வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும்  புதிய ஆட்சி முறை ஒன்றினை அறிமுகப்படுத்த வேண்டும்..

மக்களின் இரண்டாம் சுதந்திரத்திற்கான போராட்டம் வெல்க!

--பி.ஏ.காதர்

---------------------------
by     (2022-05-22 19:51:42)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links