( லங்கா -ஈ - நியூஸ் - 2022, மே, 27, பி.ப. 12.45 ) சுமார் மூன்று தடவைகள் பிற்போடப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான போலி கடவுச் சீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சசி வீரவன்சவிற்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் புத்தி ஸ்ரீ ராகல இன்று 27 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலியான பிறப்புச் சான்றிதழ்களை தயாரித்து, போலியான தகவல்களை ஆட்பதிவு திணைக்களத்தில் சமர்ப்பித்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து, இரண்டு பிறந்த தினங்களைப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச போலி இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் போது ( 2015 ) விமல் வீரவன்சவின் மனைவியான சசி வீரவன்ச எனப்படும் ரந்துனு முதியன்சேலாகே சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட இருந்தது. எனினும் மூன்று முறை தீர்ப்பு பிற்போடப்படடு இன்று தீர்ப்பு வெளியானது.
மேலும், 2010 - 01 - 01 முதல் 2014 - 31 - 12 வரையான காலப் பகுதியில் அமைச்சராக கடமையாற்றிய வேளையில் தனது சட்ட ரீதியான வருமானத்திற்கு அதிகமாக சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்ட விரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், ராஜபக்சக்களுக்கும் அவர்களின் அடியாட்களுக்கும் எதிராக போடப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட போதிலும் விமல் வீரவன்சவுக்கு அந்த ‘அதிர்ஷ்டம்’ கிடைக்கவில்லை. அமைச்சு பதவி பறிபோன பின், ராஜபக்சக்களை விமர்சித்து பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படும் வெறும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ராஜபக்ஷ எதிர்ப்பு நண்பராகவும் மாறினார். விமல் வீரவன்சவின் பொய் பித்தலாட்ட நாடகத்தை ஏற்காத மக்கள் கடந்த 9 / 5 வன்முறையில் எழுச்சி கொண்ட மக்கள் விமல் வீரவன்ச நாட்டு மக்களின் பொதுப் பணத்தில் கட்டிய சொகுசு அரண்மனைக்கு தீ வைத்தமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2022-05-27 23:48:25)
Leave a Reply