- நந்தன வீரரத்ன
(லங்கா ஈ நியூஸ் - 2024 ஆகஸ்ட் 09, மு.ப. 11.00) ”நீண்டகாலமாக நிலவி வரும் வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கான தீர்வாக, `யாழ்ப்பாணத்திற்கான ஆறு’ (River for Jaffna) என்ற திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி உவர் நீரை நன்னீராக்கும் ஆலையை இன்று (02) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
(2024 ஆகஸ்ட் 02, லங்காதீப)
சிங்கள அரசியல்வாதிகள், சிங்களவர்களுக்கு மட்டுமன்றி நாட்டின் தமிழ் - முஸ்லிம் வாக்காளர்களுக்கும் ”சந்திரனிலிருந்து அரிசி கொண்டு வந்து தருவோம்” போன்ற வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். ’யாழ்ப்பாணத்திற்கான ஆறு‘ என்கிற வாக்குறுதியும் அந்த வகையைச் சேர்ந்தது தான். எனினும், அது இப்போது ரணில் ராஜபக்ஷவின் சட்டைப் பையிலிருந்து எடுக்கப்பட்ட வாக்குகளைச் சேகரிக்கும் ஒரு மாயாஜால நீர்க் குவளையாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்திற்குத் தேவையான குடிநீரையும், அதன் விவசாயத்திற்குத் தேவையான நன்னீரையும் பெற்றுக் கொடுக்கும் முயற்சியானது, 17 ஆம் நூற்றாண்டின் ஒல்லாந்தர் ஆட்சி காலம் வரையான நீண்ட பயணத்தைக் கொண்டது. அந்த வரலாறு பற்றி சுருக்கமாகவேனும் இங்கு கூற வேண்டியுள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் ஆளுநர் ரிஜெகோ வன் கொயனின் (1619 - 1682) ஆட்சியின் போது, யாழ்ப்பாணத்தின் இராணுவத் தளபதியாக கேப்டன் ஹென்ட்ரிக் வன் ரஹேன் நியமிக்கப்பட்டார். ’கடவுள் உலகை உருவாக்கினார். டச்சுக்காரர்கள் நெதர்லாந்தை உருவாக்கிக் கொண்டனர்‘ என நம்பிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த ரஹேன், யாழ்ப்பாணத்திலுள்ள விவசாய நிலங்களுக்குத் தண்ணீரை வழங்குவதற்காக, வடமராட்சி நீரேரிக்கு தொண்டமானாறில் உவர் நீர் தடுப்பணையொன்றை நிர்மாணித்து, உவர் நீர்ப் படையைக் குளத்திலிருந்து அகற்றி நன்னீர் நிலையாக்கினார். அதே போல, நீர்வேலியில் ஒரு உவர் நீர் தடுப்பணைக் கட்டப்பட்டு உப்பாறு கடல் நீரேரியின் நன்னீர் பாதுகாக்கப்பட்டது. எனினும், 300 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட இயற்கையின் அருட்கொடையை மனிதகுல முன்னேற்றத்திற்காக பயன்படுத்தவென மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியானது பாதுகாக்கப்படவோ, பராமரிக்கப்படவோ இல்லை. இந்த கடந்த கால காலனித்துவம் என்பது ஒருபுறமிருக்க சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ’யாழ்ப்பாணத்திற்கான ஆறு‘ என்ற விடயம் தேர்தல் காலத்து சோடனையாக எவ்வாறு மாற்றப்படுகிறது என்பது பற்றி இப்போது ஆராயலாம். இது நாட்டின் அரசியல்வாதிகளின் ஒரு கனவல்ல.
1954 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் துறைப் பொறியியலாளரான ச. ஆறுமுகம் (1905-2000), யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் நன்னீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வொன்றைக் கண்டார். அது, வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் யாழ் மாவட்டம் 1270 மில்லிலீட்டர் மழையைப் பெற்றுக் கொள்வதும், அதனைப் பாதுகாப்பதற்குமான வழியொன்றைக் கண்டறிவது பற்றியதாகும். வட கிழக்கு பருவப் பெயர்ச்சியின் போது யாழ்ப்பாணத்திற்குக் கிடைக்கும் மழையில் 80 வீதமானது ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே பெறப்படுகிறது. இந்த மழை நீரைப் பாதுகாத்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு நதியை உருவாக்குவதே ஆறுமுகத்தின் திட்டமாக இருந்தது. வறண்ட காலங்களில் மழை நீரைப் பயன்படுத்தும் இலங்கையின் பாரம்பரிய முறைமையானது இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் அடிப்படையாக அமைந்தது. ’ஆறுமுகம் திட்டத்தில்‘ வடமராட்சி மற்றும் உப்பாறு ஆகிய நீரேரிகளை மட்டுமன்றி, ஆனையிறவு நீரேரியையும் நன்னீர் நிலைகளாக உருவாக்க முன்மொழியப்பட்டிருந்தது. அத்துடன், கனகராயன் ஆற்றிலிருந்து இரணைமடு குளத்திற்கு நீரை நிரப்பி, அதன் மூலம் சேமிக்கப்படும் நீரைக் கொண்டு நன்னீர் நீர்த்தேக்கமொன்றை உருவாக்குவதற்கான யோசனையொன்றும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், யாழ்ப்பாண மீனவர்கள் 1976 - 77 புயலில் இருந்து தமது மீன்பிடிப் படகுகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவற்றை நீரேரிக்குள் எடுக்கும் பொருட்டு அவர்கள் அமர்ந்திருந்த கிளையை வெட்டிப் போட்டனர். மீனவர்கள் முதலில் மீனவப் படகுகளை நீரேரிக்குள் கொண்டு வருவதற்காக இந்த உவர் நீர் தடுப்பணையின் ஒரு பகுதியை உடைத்தனர். இரண்டாவதாக, இறால் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்கள், நீரேரிக்குள் கடல் நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக அணையின் எஞ்சிய பகுதிகளை டைனமைட் வைத்து தகர்த்தனர். சில காலத்திற்கு முன்பு வரை வடமராட்சி நீரேந்துப் பிரதேசம் நன்னீர் பிடிப்புள்ள பயிர் நிலமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒரு தொழிலுக்காக இன்னொரு தொழிலை அழிக்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது ஒரு சமூகப் பிரச்சினை என்பதையும் தாண்டி பாரதூரமானதொரு அரசியல் பிரச்சினையாகக் காணப்படுகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் பலம் பொருந்திய வெள்ளாள சாதியினரின் பொருளாதார நலன்கள், மிகவும் பலவீனமான கரையார் சாதியினரால் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது என்பதும், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வெள்ளாளர்களாக இருந்த ஒரு காலகட்டத்தில் கரையார் சாதியினர் எப்படி இந்த முறைகேடான செயல்களைச் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பதுமே இங்கு கேள்வியாக உள்ளது. இதற்கான மிக நெருங்கிய பதிலை தமிழ் போராளிக் குழுக்களின் தலைமைத்துவங்களிலிருந்து எம்மால் கண்டு கொள்ளலாம். பாரம்பரிய தமிழ்த் தலைமைகள் 70 களின் முற்பகுதியில் வடக்கிலிருந்து துடைத்தெறியப்பட்டன. அதனால் ஏற்பட்ட இடைவெளியை கரையார் சாதியினர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் நிரப்பினர். இத்தகையதொரு பின்புலத்தில் விவசாயத்துறைக்கான அணையொன்று மீன்பிடித்துறைத் தேவைக்காக அழிக்கப்பட்டது என்பது தண்டனைக்குட்படாத குற்றமாகக் காணப்பட்டது.
நீர்ப்பாசன பொறியியலாளர் அறுமுகத்தின் இந்தத் திட்டமானது, தேர்தலொன்று நெருங்கும் சந்தர்ப்பங்களில் ரணில் ராஜபக்ஷவுக்குப் போன்றே ஏனைய திட்டமிடலாளர்களின் சோம்பேறிப் பார்வைக்கும் அவ்வப்போது தோன்றி மறையும் ஒன்றாகவே இருந்து வருகிறது. 1960 களில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகித்த நெவில் ஜயவீர, யாழ்ப்பாணத்திற்கு நதியொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான இந்த நீர்ப்பாசனத் திட்டம் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாக நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ். சிவதாசன் கூறுகிறார். 70/80
நீர்ப்பாசன பொறியியலாளர் சிவதாசனின் நினைவுகளைத் தட்டிப் பார்க்கும் போது, சி. வணிகசிங்கம் தவிர்ந்த வேறு எந்தவொரு யாழ். அரசியல்வாதியும் இந்த பெறுமதிமிக்க திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காண முடிகிறது. இது, 1947 ஆம் ஆண்டு முதல் வறண்ட வலயத்திற்கு நீரினைப் பெற்றுக் கொடுக்க உழைத்த சிங்களத் தலைவர்களைப் போலவே எதிர்க்கட்சி சுகபோகத்திற்கு அடிமையான தமிழ் அரசியல்வாதிகளும் இந்த மரணித்துக் கொண்டிருக்கும் நதிக் கனவு பின்னைய நாட்களில் இரத்த ஆறாக மாற்றப்பட்டதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்கிறது.
1983 ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன இது தொடர்பில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் உள்ளன. எனினும், அவர், அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐ.தே.க தலைவர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு இரத்த ஆறு ஒன்றை அனுப்ப ஆரம்பித்திருந்தனர். அத்துடன், அவரது அரசியல் கொள்கைகள் அத்தகைய தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் ஒத்துப் போகவில்லை. 1983 கறுப்பு ஜூலையுடன், முன்மொழியப்பட்டிருந்த ‘யாழ்ப்பாணத்திற்கான ஆறு’ ஆற்றுத் திட்டம் மேலும் 20 ஆண்டுகளுக்கு பரண் மீது போடப்பட்டது. 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை எரியூட்டிய தலைவர்களில் ஒருவரான அப்போதைய நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அடுத்து நடைபெறவிருந்த தேர்தலை இலக்காகக் கொண்டு ’யாழ்ப்பாணத்திற்கான ஆறு‘ தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். ஆனால், 2004 ஏப்ரல் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஐ.தே.கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன் இந்த தேர்தல் வாக்குறுதியும் நாட்டின் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தொண்டமானாறு உவர் நீர் தடுப்பு அணையை புனரமைக்க பணம் ஒதுக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் 2008 இல் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தால் நிறைவு செய்யப்பட்டது. எனினும், ’ஆறுமுகம் திட்டம்’ அல்லது ’யாழ்ப்பாணத்திற்கான ஆறு‘ என்ற ஆற்றுத் திட்டத்தின் ஒட்டுமொத்த முன்மொழிவும் இன்று வரையில் முழுமையடையாத நிலையிலேயே உள்ளது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசித்திரமான முன்மொழிவை அன்றே நடைமுறைப்படுத்தியிருந்தால், இலங்கையின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கக் கூடும். இந்நாட்டின் துரதிர்ஷ்டம் காரணமாக அது அப்படியே அடங்கிப் போனது. இப்போது ரணில் ராஜபக்ஷ அடுத்த தேர்தலுக்கான தமிழ் வாக்குகளைப் பறிப்பதற்காக இந்தத் திட்டத்தை மீண்டும் பரண் மீதிருந்து தூசு தட்டி எடுத்துள்ளார். இம்முறை ஏமாறப் போவது யார் என்பதை இன்னும் சில வாரங்களில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
---------------------------
by (2024-08-09 15:44:28)
Leave a Reply