~

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் திரைக்குப் பின்னால் பிள்ளையான்!

- லங்கா ஈ நியூஸ் சிறப்பு நிருபர்-

(லங்கா-இ-நியூஸ் -02.ஏப்ரல்.2025, இரவு 11.30 மணி)  இந்த கொடூரமான ஈஸ்டர் தாக்குதல் கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நடவடிக்கைகளின் வலையமைப்பின் மூலம் நடத்தப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் சஹ்ரானும் ஒரு சிலரும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தனர். எவ்வாறாயினும், தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும், மொட்டுக்கட்சி அரசாங்கத்தின் பிரதி அமைச்சராகவும் இருந்த பிள்ளையானின் பெயரும், அத்தாக்குதலைத் திட்டமிட்டு ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டதன்  காரணமாக இப்போது உள்ளூர் மற்றும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆசாத் மௌலானா மற்றும் பிள்ளையானின் தொடர்புகள்

ஒரு காலத்தில் பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய ஆசாத் மௌலானா பின்னர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார். கடந்த ஆண்டு, பிள்ளையானுக்கும் இலங்கை அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலேவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானியாவின் சனல் 4 க்கும் ஆசாத் மௌலானா வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, ஒரு பாராளுமன்ற விவாதமும் நடத்தப்பட்டது, பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விசாரணைக் குழுவையும் நியமித்தார். எவ்வாறெனினும், அரச சார்பு ஊடக நிறுவனங்களான ‘ஹிரு’ மற்றும்  ‘தெரண’ தொலைக்காட்சிகள் தமது அரசியல் எஜமானர்களுக்கு ஆதரவாக பொதுஜன அபிப்பிராயத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஆசாத் மெளலானாவின் அனைத்து கூற்றுக்களையும் நிராகரித்து அவரை இழிவுபடுத்தும் பிரச்சாரமொன்றை முன்னெடுத்தன.

உண்மையை வெளிப்படுத்துவதற்கான இறுதி உரிமை

ஈஸ்டர் படுகொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை பக்கச்சார்பான ஊடகங்களும் ராஜபக்ச-ரணில் கூட்டணியும் பாதுகாக்க முயற்சிக்கும் அதே வேளையில், உண்மையை அம்பலப்படுத்துவதற்கான எங்கள் கடமையையும் உரிமையையும் நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நெருங்கிய சகாவான கலீல், இராணுவ புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜன்ட் ஆவார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த கலீல், சஹ்ரானுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தார். பிள்ளையான் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து மட்டக்களப்புக்குத் திரும்பியபோது, கலீலுடன் நெருக்கமாக வேலை செய்யத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

பிள்ளையான், கலீல் மற்றும் சஹ்ரான் கும்பல்

சிறையில் இருந்தபோது, பிள்ளையானும் கலீலும் சஹ்ரானின் குழுவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக சனல் 4 மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை செய்தி வெளியிட்டுள்ளன. காத்தான்குடி அழியார் சந்தியில் இடம்பெற்ற சிறிய குண்டு வெடிப்புக்கு சஹ்ரான் குழுவே பொறுப்பு என ஆசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிள்ளையானின் சொந்த புத்தகம் கூட இந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறது, அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.

சஹ்ரானின் குழு தங்கள் மத நம்பிக்கைகளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்ததாக பிள்ளையான் கூறியதையும் ஆசாத் மௌலானவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது.

சுரேஷ் சாலேவுக்கும் பிள்ளையானுக்குமான சந்திப்பு

மௌலானாவின் கூற்றுப்படி, சுரேஷ் சாலே மற்றும் சஹ்ரானின் குழுவினருக்கு இடையிலான தொடர்பை "அவர்களின் செயல்திறனை அதிகரிக்க" உதவுமாறு பிள்ளையன் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.  இதன் விளைவாக, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு பின்னர் புத்தளத்தில் தென்னந்தோட்டம் ஒன்றில் சுரேஷ் சாலயால் அறிமுகப்படுத்தப்பட்ட குழுவை சந்தித்தனர். கோத்தபாய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்று பிள்ளையான் நம்புவதாக ஆசாத் மௌலானா மேலும் கூறினார்.

சாய்ந்தமருதுவில் கண்டெடுக்கப்பட்ட சிம் அட்டை

விடுதலைப் புலிகளுக்குள் தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் பிள்ளையான் நிபுணத்துவம் பெற்றவர். மறுபுறம், கலீல் என்பவர் இராணுவ புலனாய்வு பிரிவில் சார்ஜென்ட் ஆக இருந்தார். மௌலானாவின் கூற்றுப்படி, கலீல் மற்றும் பிள்ளையான் ஆகியோர் சுரேஷ் சாலேவுக்கு சஹ்ரானின் அறிமுகத்தை எளிதாக்கினர். ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானுடன் கலீல் வழக்கமான தொலைபேசி உரையாடல்களைப் பேணியதுடன், அவரது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்.

சஹ்ரானின் உறவினர்கள் உட்பட 14 பேர் தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் இந்த நிலத்தடி நடவடிக்கையின் இருண்ட பக்கம் அம்பலமானது. சம்பவ இடத்தில் நடந்த விசாரணையின் போது, ஒரு சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்வுக்காக எஃப்.பி.ஐக்கு (FBI) அனுப்பப்பட்டது. அந்த சிம் அட்டை கலீலுக்கு சொந்தமானது என்றும், ஈஸ்டர் தாக்குதல் நாள் வரை தொலைபேசி தகவல்தொடர்புகளுக்கு இது பயன்படுத்தப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சஹ்ரானும் அவரது குழுவினரும் அழிந்த போதிலும், ஒரு மிகக் கொடிய  சக்தியின் மூலம் உண்மைகளை மறைக்கும் ஒரு இரக்சிய கட்டமைப்பால்  பாதுகாக்கப்படும் நாட்டின் உயரடுக்கினர் மத்தியில் பிள்ளையானும் கலீலும் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

கோத்தபாயவுக்கு பிள்ளையானின் மிரட்டல்

முறையான விசாரணை ஒன்றின் மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் சஹ்ரானின் குழுவினர் பிள்ளையான் மற்றும் கலீல் ஆகியோரிடம் பயிற்சி பெற்றமை தெரியவரும். சஹ்ரான் போன்ற ஒரு சிறிய குழு வெளிப்புற ஆதரவு இல்லாமல் பல ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என்பதும் சாத்தியமேயில்லை. ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள், மர்ம நிழல்களின் பின்னால்  பதுங்கியிருக்கின்றனர்.

இக்கொடிய தாக்குதலின் பின்னர், 2019 இல் கோட்டாபய ஜனாதிபதியானபோது, தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி உடனடியாக விடுதலை செய்யப்படுவார் என்று பிள்ளையான் எதிர்பார்த்தார். இருப்பினும், தாமதம் ஏற்பட்டபோது, அவர் எல்லாவற்றையும் தான் அம்பலப்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார். ஒரு கொலைக் குற்றச்சாட்டை மாற்றியமைப்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் ராஜபக்ச வம்சத்தைப் பொறுத்தவரை, சட்டத்தை வளைப்பது ஒருபோதும் ஒரு சவாலாக அவர்களுக்கு இருந்ததில்லை.

விடுதலை செய்யப்பட்ட பிள்ளையான்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர் டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி திடீரென வழக்கை தொடர வேண்டிய அவசியமில்லை என அறிவித்தார். இதன் விளைவாக, 2022 ஜனவரி 13 அன்று, சட்டமா அதிபரின் ஆசீர்வாதத்துடன் பிள்ளையன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையான அன்று, கோட்டாபயவை ஜனாதிபதியாக்க உதவிய பிரச்சாரத்தின் சூத்திரதாரியான பிள்ளையானை வரவேற்க நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் வந்தார்.

எல்லாவற்றையும் அம்பலப்படுத்த தயாராகும் ஆசாத் மௌலானா

இலங்கையில் உத்தியோகபூர்வ விசாரணையில் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேவுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளையும் வெளிப்படுத்த ஆசாத் மௌலானா இப்போது தயாராகி வருகிறார். விசாரணை நேர்மையாக முன்னெடுக்கப்படுமானால், சஹ்ரான், கலகொடஅத்தே ஞானசாரா மற்றும் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் ஒரே மேசையில் நடந்த கலந்துரையாடல்களைக் கூட அது வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------------------------
by     (2025-04-03 19:23:11)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links