-பி.ஏ.காதர் (காதர் மாஸ்டர் ) -பகுதி 01 இல் 2
(லங்கா-இ-நியூஸ் -22.ஏப்ரல்.2025, இரவு 8.30 மணி) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது வரிகளை விதித்தமை, அமெரிக்கா தனது வலிமையை மீறி, வெளிப்படையான மேலாதிக்க ஆணவத்தைக் காட்டிய செயலாகவும், சர்வதேச ஒழுங்கில் ஏற்படுத்திய முறிவு புள்ளியாகவும் அமைந்தது. அதுவரை அதிருப்தியுடன் இருந்த நட்பு நாடுகளும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டிருந்த எதிரிநாடுகளும் பல தசாப்த காலமாக மௌனமாக அனுபவித்துவந்த அவமானங்களும் அச்சுறுத்தல்களும் இப்போது சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டதாக மாற்றிவிட்ட ன. வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாடுகள் "தனது பின்புறத்தை முத்தமிட தயாராகின்ற" என்ற அவரது அகங்கார உரை அதற்கு முத்தாய்ப்பு வைத்தது.
ஏனைய நாடுகள் மௌனமாக தகித்துக்கொண்டு மாற்று வழியைத் தேடும் வேளையில், சீனா மட்டும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த சுனாமியை, எதிர்த்து நிற்கிறது. இந்த எதிர்பாராத நிகழ்வு பலரை, குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களால் அறிவுரீதியாக அடிமைப்படுத்தப்பட்டு கறைப்படிந்துபோன மனங்களை, திகைக்க வைத்திருக்க வேண்டும். புதிய யதார்த்தம், எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும், இறுதியாக புலப்பட தொடங்கியுள்ளது.
1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் விடுதலைச் சேனையும் சீனாவை விடுதலை செய்வதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, இந்த நாடுதான் இலங்கையை விட மில்லியன் கணக்கான ஆண்டுகள் பின்தங்கியிருந்தது. அக்காலத்தில் சீனாவை விட பத்து நாடுகள் மாத்திரமே தனிநபர் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தியில்
பின்தங்கி இருந்தன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக சீனா அப்போது திகழ்ந்தது. அப்போது சீனா தொழில்துறை புரட்சிக்கு 200 ஆண்டுகள் பின்தங்கியிருந்தது, அபின் போதையால் சிதைந்திருந்தது. பஞ்சம், இயற்கை பேரழிவுகள், வெளிநாட்டு படையெடுப்புகள், உள்நாட்டுப் போர், கொள்ளை மற்றும் உலகப் போர் அனைத்தும் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்தன.
ஆனால் 1949 ல் இரத்தம் சிந்தி விடுதலைப் பெற்ற பின்னர் இந்த டிராகன் உறக்க நிலையில் இருந்து விழித்தெழுந்து மனிதகுல வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உயர்ந்தது. 1978 முதல் அதன் தொழில்துறை அமைப்பும் (industrial system) அபிவிருத்தி பொறிமுறையும் (development mechanism) மாறியது. அத்துடன் புதிய கண்டுபிடிப்புகள் innovation, ஆராய்ச்சி research, அபிவிருத்தி development ஆகியவற்றின் உலகின் மையமாக உருவெடுத்தது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, 2011 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் பயன்படுத்திய அளவுக்கு சிமெண்டைப் பயன்படுத்தியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் மாறியது.
இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? சீனாவிடம் சரியான அமைப்பும் (system) கொள்கையும் (policy) இருந்ததால் தான் அது சாத்தியமானது. சீனாவின் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதன் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட நான்கு மடங்கு பெரியது. அமெரிக்காவில் பாதுகாப்புச் செலவு கல்விக்காகும் செலவை விட நான்கு மடங்கு அதிகம். சீனா தனித்துவமான உயர்ந்த தர கல்வியை வழங்குகிறது. சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் போன்ற உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தற்போது அங்கு உள்ளன. அதன் பள்ளிகள் கட்டுக்கதைகளை வரலாறாகக் கற்பிப்பதன் மூலம் பெரும்பான்மை மேலாதிக்க சித்தாந்தத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுவதில்லை, அரசு ஊழியர்களையும் லிகிதர்களையும் உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. தேசிய ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில் தொழில்நுட்ப வல்லுநர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்க இது முயல்கிறது. இதன் விளைவாக, அமெரிக்கா ஆண்டுக்கு அரை மில்லியன் STEM பட்டதாரிகளை உருவாக்கும் அதே வேளையில், சீனா ஆண்டுதோறும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான STEM பட்டதாரிகளை உருவாக்குகிறது.
எனவே, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சூரிய மின் உற்பத்தி போன்ற துறைகளில் சீனா மற்ற அனைத்து நாடுகளையும் முந்தியது. இன்று அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சியின் சின்னமாகக் கருதப்படும் டெஸ்லாவை சீனாவின் BYD (உங்கள் கனவுக்கு அப்பால் - Beyond Your Dream) மின்சார வாகனம் முந்தியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தேசநேயம் கொண்ட தனியார் துறை எப்போதும் பாதுகாப்பான இடத்தைப் பிடித்திருந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தின் பெரும்பாலான நன்மைகள் மக்களை சென்றடைகின்றன. எனவேதான் சீனாவால் தனது 11.4 பில்லியன் மக்களை - உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கை - வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. 1980 இல் தொடங்கி கடந்த 45 ஆண்டுகளில் தொழில்துறை தொழிலாளர்களின் சராசரி வருமானம் 130 மடங்கு (130 சதவீதம் அல்ல) அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அமெரிக்காவில் இந்த காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரிப்பை மட்டுமே கண்டுள்ளது.
சீன அரசாங்கம் ஒருபோதும் பெருநிறுவனங்களுக்கு Corporates அடிபணிந்ததில்லை. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs), கலப்பு வணிகங்கள் மற்றும் உள்நாட்டு தனியார் துறை ஆகியவை சீனப் பொருளாதாரத்தை உருவாக்குகின்றன. தற்போது, சீனாவின் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி கட்டத்திலிருந்து உயர்தர வளர்ச்சியின் கட்டத்திற்கு (from quantity to quality) மாறியுள்ளது. எனினும் ஒவ்வொரு மட்டத்திலும் அரசே தலைமைத்துவத்தை வழங்கு கிறது.
சீன அரசாங்கம், வேறு எவரையும் கடிவாளத்தை கையில் எடுக்க விடுவதில்லை; நாட்டை சரியான திசையில் வழிநடத்தும் தனது கடமையை ஒருபோதும் கைவிட்டதில்லை. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) இந்த நாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சில, சீனா மாநில கட்டுமான பொறியியல், சீனா தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா போன்றவை SOE-களாகும், அதே நேரத்தில் டென்சென்ட், அலிபாபா, JD.com, TSMC, பைட் டான்ஸ் (டிக் டாக்) போன்றவை மிகப்பெரிய தனியார் நிறுவனங்களாகும். சீனாவின் புல்லட் ரயில்கள் உலகின் வேகமானவை மிகவும் முன்னேற்றகரமானவை. ஆயினும் இது அரசு தனது மக்களுக்கு வழங்க வேண்டிய போக்குவரத்து சேவையின் ஒரு அங்கமாகவே இது கருதப்படுகிறது; லாபத்திற்கான வணிகமாகக் கருதப்படுவதில்லை.
உலகின் மிகப்பெரிய வங்கியான சீன தொழில்துறை வணிக வங்கி அரசாங்கத்திற்குச் சொந்தமானது. 2021 ஆம் ஆண்டில், அதன் ஆளுநர் $110,000 டொலர் சம்பளத்தைப் பெற்றார். அதே சமயம் JP மோர்கன் சேஸ் வங்கியின் அமெரிக்க வங்கி ஆளுநரான ஜெமி டிமோன் ஆண்டுதோறும் $34 மில்லியன் டொலர் பெற்றார். இன்னொருவிதத்தில் கூறுவதானால் அமெரிக்க வங்கி ஆளுநர் ஜெமி டிமோனின் அரை நாள் ஊதியம் சீன வங்கி ஆளுநரின் ஆண்டு சம்பளத்திற்குச் சமம். வாங்கும் சக்தி சமநிலைகள் அல்லது PPPயைப் பொறுத்தவரை, சீனா 2017 இல் அமெரிக்காவை விஞ்சியது என்பது சுவாரஸ்யமான விடயம். ஏனெனில் சீனாவில் மக்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது ஆயினும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது சுமார் 48% குறைவாக உள்ளன.
உலக சந்தையில் சீனாவின் விநியோகப் பங்கு 31.06 சதவீதமாக உள்ளது, கடந்த ஆண்டு, அதன் வர்த்தக உபரி $1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது. 2024 ஆம் ஆண்டில் சீனா அமெரிக்க கொள்முதல்களில் $438.9 பில்லியன் அல்லது அமெரிக்காவின் இறக்குமதியில் 36% ஆகும். இருப்பினும், சீனப் பொருளாதாரத்தின் பிரமாண்ட தன்மையைக் கருத்தில் கொண்டால், அது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2. 9% மாத்திரமே.
சீனப் பொருட்களை, குறிப்பாக அதன் விநியோகச் சங்கிலிகளில், நம்பியிருப்பதிலிருந்து அமெரிக்கா உடனடியாகத் தன்னைத் தானே விலக்கிக் கொள்ள முடியாது. 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்கு சீன இறக்குமதிகள் குறைந்துள்ள போதிலும், தற்போது மூன்றாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏராளமான பொருட்கள் இன்னும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களையும் மூலப்பொருட்களையுமே நம்பியுள்ளன.
தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, தற்போது நடைபெற்றுவரும் சுங்கவரிப் போர், ஆப்பிள் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட, சீன உற்பத்தியை பெரிதும் நம்பியுள்ள, பல அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தை கணிசமாகக் குறைக்கக்கும். உலகளவில் இராணுவ தளவாடங்களுக்கும் உயர் தொழில்நுட்பத் தொழில்களுக்கும் தேவையான அரிய தாதுவளங்களில் Rare earth சுமார் 72% சீனாவால் வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் 1,411 பில்லியன் மக்கள்தொகையையும் வசதியான நடுத்தர வர்க்கத்தையும் கொண்டிருந்த சீனா ஒரு பெரிய சந்தையைக் கொண்டுள்ளது - இது முழு ஐரோப்பா (449.2 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (340.1 மில்லியன்) ஆகிய இரண்டு சந்தைகளின் கூட்டுத்தொகையை விட பெரியது
அதனிடம் இத்தனைப்பெரிய உள்நாட்டு சந்தை இருந்தபோதிலும், உலகின் தொழிற்சாலையான சீனா, அதன் தற்போதைய பாரிய அளவிலான விநியோகத்தை உள்வாங்க முடியாது, ஆனால், அமெரிக்க சந்தையை மட்டுமே அது நம்பியிருக்கவில்லை. அமெரிக்கா தனது சந்தையை சீனாவிற்கு மூடினால், அமெரிக்கா தனது சிக்கலான விநியோகச் சங்கிலியை மறுசீரமைக்க முடிவதை விட வேகமாக வேறு இடங்களில் மாற்று சந்தையைக் கண்டுபிடிக்க சீனாவால்முடியும். அமெரிக்காவில் பொருட்களின் விலை சீனா மீது விதிக்கப்படும் சுங்க வரிக்கேற்ப உயர்ந்து, உள்நாட்டில் பொருளாதார கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
சீனாவின் எழுச்சியின் இரகசியம்: சுயசார்பு சந்தைப் பொருளாதாரம். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பின்வரும் அசாதாரண அறிக்கையை வெளியிட்டபோது, அமெரிக்காவின் சுங்க வரிப் போருக்கு எதிரான சீனாவின் எதிர்ப்பாற்றலின் இரகசியம் வெளிப்பட்டது:
‘70 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனாவின் வளர்ச்சியானது தன்னம்பிக்கை கடின உழைப்பு ஆகியவற்றையே நம்பியுள்ளது - ஒருபோதும் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி-ஆதாரங்களை handouts நம்பியிருக்கவில்லை, அத்துடன் அது எந்த அநீதியான அடக்குமுறைக்கும் அஞ்சுவதில்லை’
உலகின் மொத்த மக்கள்தொகையில் 25% மக்கள்தொகையைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய நாடான சீனாவுடன் சிறிய தீவான இலங்கையை ஒப்பிடுவது பொருத்தமானதாக அமையாது. எனவே சிறிய தீவான சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் ஓர் ஒப்பீடு செய்வோம்.
தொடரும் …..
( நேற்று 19.04.2025 ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் லங்கா ஈ நியூஸ் ஊடகத்தில் வெளியானது.)
---------------------------
by (2025-04-22 15:04:04)
Leave a Reply