~

'நிபந்தனையின்றி சரணடையுங்கள் அல்லது விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்கள் ' என்ற மிரட்டலோடு தொடங்கப்பட்ட ஈரான் மீதான அமெரிக்காவின் யுத்தம் 'ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்!' என்ற வாழ்த்தோடு முடிவடைந்ததேன்? - ஒரு அலசல். - (பாகம் -01)

- பி.ஏ. காதர்

(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 03, மு.ப. 11.00) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. இன்றைய மாறிவரும் உலகப்போக்கின் ஒரு வெளிப்பாடு அது . இப்போக்கை இக்கட்டுரை வரலாற்றுப் பார்வையில் சான்றுகளுடன் தருகிறது.]

இஸ்ரேல் ஈரான் யுத்தம் பிராந்திய யுத்தமாக மாறி மூன்றாம் உலகம் மகாயுத்தம் வெடித்துவிடுமோ என்ற அச்சம் சூழ்ந்திருந்த வேளை ‘டுவீட் மன்னன் டிரம்ப்பின்' கணிக்கமுடியாத பதிவுகள் அடிக்கடி தோன்றி அதற்கு தீனி போட்டுக் கொண்டிருந்தன. எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக  ஓடிக் கொண்டிருந்த திகிலூ ட்டும் திரைப்படம் ஒன்று திடீரென்று முடிவடைந்தது போல இந்த யுத்தம் டிரம்ப்பின் மற்றொரு டுவீட்டர் மூலம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. யுத்ததில் ஈடுபட்ட இரு தரப்பும் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை எந்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவில்லை. எனவே இதை ஒரு யுத்த நிறுத்தம் என்று சொல்வதா அல்லது இன்னொரு யுத்தத்திற்கான இடைவேளை என்று சொல்வதா என ஆய்வாளர்கள் தங்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்றைய நவீன உலகம் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் உற்பத்தியின் குவிமையமாகவும், சர்வதேச போக்குவரத்தின் மையப்பகுதியுமான மத்திய கிழக்கிலே நடைபெற்ற இவ்யுத்தம் உக்ரேன் போரைப் போலன்றி அனைத்து நாடுகளையும், சகல மக்களையும் ,பாதிக்கக் கூடியதாக இருந்ததனால் உலகமே கவலை கொண்டிருந்தது. எப்படியோ அங்கு வெடிகுண்டு சத்தம் ஓய்வுக்கு வந்தது, தற்காலிகமாகவேனும் நிம்மதியைத் தந்திருக்கிறது.

பழைய யுத்த முறை மாறியது. 

எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளாத, நிலத் தொடர்பே இல்லாத, 1,112 மைல்கள் இடைவெளி கொண்ட இரண்டு வலிமைமிக்க நாடுகள் இங்கே மோதின. இரு நாடுகளிடமும் வலிமைமிக்க கடற்படை இருந்தாலும் அவை பயன்படுத்தப்படவில்லை. உலகின் நவீன விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும் அவற்றை தனது நேசநாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறக்க முயன்றாலும், ஈரானின் ஏவுகணைகளுக்கு அஞ்சி அவை தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தன. ஏவுகணைகளும் ட்ரோன் தாக்குதல்களும் பெரும் பங்கு வகித்த இந்த யுத்தத்தில் போர்க்கப்பல்களுக்கு பெரிதாக எந்த பாத்திரமும் இருக்கவில்லை. எதிரி நாட்டின் ராணுவத்தினது சப்பாத்துக் கால்கள் பதிக்கப்படாத ஒரு யுத்தமாக இது நிகழ்ந்திருக்கிறது.

இனி வரும்  காலங்களில், யுத்தங்கள் போர்க்கப்பல்களின் முக்கியத்துவம் குறைந்து ஏவுகணைகளினதும் ட்ரோன்களினதும் விண்கோள் தகவல் தொழில்நுட்பத்திலும், வான்பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் பெரும்பாலும் தங்கியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. இதனை உயர் தொழில்நுட்ப கொரில்லா தாக்குதல் எனலாம். விலை உயர்ந்த ஆயுதங்களை விலைகுறைந்த ஆயுதங்களால் வெற்றிகொள்ளும் போர்க்கலை இது. 

மதவாத நாடுகளான ஈரான் - இஸ்ரேல் மோதல்

ஈரான் - இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் ஒரு பொதுவான தன்மை இருக்கிறது. இவ்விரு நாடுகளின் ஆட்சியாளர்களும் தீவிர மதவாதிகள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் எனவும் ஏனைய மதத்தினரை அழித்தாலும் ஒழித்தாலும் எத்தகைய கொடுமைகளை அவர்கள் மீதுகட்டவிழ்த்து விட்டாலும் அது பாவம் இல்லை என கருதுகின்ற மனோபாவம் கொண்டவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். ஈரான் பண்டைய நாகரீக பாரம்பரியத்தையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட ஒரு நிலையான நாடு. ஆனால் இஸ்ரேல் ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக 1948ல் - ஏனைய மக்களின் நிலங்களை  அபகரித்து அவர்களின் பிணக்குவியலின் மீது உருவாக்கப்பட்ட ஒரு நவீன இராணுவ படைத்தளம். அதற்கு எல்லை கிடையாது. அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் கைப் பிள்ளையாக இருந்து கொண்டு எந்த சட்டத்தையும் மனித தர்மத்தையும் மதிக்காமல் இடைவிடாமல் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய படைத்தளம் இது. காசாவில் இதன் காட்டுமிராண்டித்தனம் நிதர்சனமாகத் தெரிகிறது. காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திவரும் பயங்கரவாத இன ஒழிப்பு தாக்குதல் ஜெர்மனியில் நாசிகள் யுதர்கள் மீது தொடுத்த பயங்கரவாத இன ஒழிப்பை விட கொடுமையானது.

எந்த மதவாத அரசும் மனித குல வளர்ச்சிக்கு தடையானதுதான், ஈரானும் அப்படித்தான். பெண்கள் அங்கு இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் அடிப்படை மனித உரிமைகள் பல அங்கு மறுக்கப்படுகிறது என்பது உண்மைதான்.  ஆனால் அமெரிக்காவின் சேவகர்களாக செயல்படுகின்ற, மன்னர் ஆட்சி நிலவுகின்ற, எண்ணை வளம்மிக்க பல அரபு நாடுகளில் ஆட்சியாளர்கள் பல மனைவியரோடு ஆடம்பரமாக வாழ்கின்ற நிலைமை ஈரானில் கிடையாது. அங்கு படிப்புக்கும் விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஈரான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம். அத்தோடு ஈரான் தனது மத பிரிவின் வழிகாட்டியான ஹசன் கூட ஊழல் மிக்க பேரரசு ஓன்றுக்கு எதிரான யுத்தத்தில் தியாக மரணம் அடைந்தவர்தான். அவரது தியாகமும் வீரமும் இன்னும் அங்கு ஒரு விழுமியமாக வேரூன்றி நிற்கிறது.

அதேபோன்று யூத மக்களுக்கும் உன்னதமான வரலாறு உண்டு. அவர்கள் நீண்ட காலமாக மத்திய கிழக்கில் வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் மற்றவர்களோடு சமாதானமாக வாழ்ந்தவர்கள். தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு அதை விஸ்தரிக்கின்ற நோக்கம் அவர்களுக்கு முன்னர் இருந்ததில்லை. சிறந்த விஞ்ஞானிகளையும் சிறந்த அறிவாளிகளையும் அது உலகத்திற்கு தந்திருக்கிறது. ஆனால் இஸ்ரேலை அவர்களிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். 

எஸ்றா (Ezra) என்ற மதநூல் யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று தங்கள் ஆலயத்தைக் கட்ட அனுமதித்ததற்கான பெருமையை பாரசீக மன்னர்களுக்கே சமர்ப்பிக்கிறது. நீண்டகாலம் பாரசீக மன்னர்கள் யூதர்களுக்கான பாதுகாவலர்களாக இருந்துள்ளனர் என்பது ஆச்சர்யமான வரலாறு. பாரசீகம் என்பது இன்றைய ஈரான் ஆகும். 1935ல் தான் இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

சட்டத்தரணியும் பத்திரிக்கையாளனுமான தியோடர் ஹெர்ஸ்ல் Theodor Herzlஎன்பவரால் தான் 1896ல், அதாவது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிக்கொண்டிருந்த காலகட்டத்த்தில், யூதர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அப்போது ஐரோப்பாவில் பலநாடுகளில் வாழும் யூதர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் அதிகரித்துவந்த சூழலில் தம்மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே அவர் இக்கருத்தை முன்வைத்தார் இதுவே அரசியல் யூதமதத்தின் தோற்றமாகும். இக்கோஷத்தை அப்போது ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு எதிராக பிரித்தானிய ஏகாதிபத்தியம் பயன்படுத்திக்கொண்டது. பின்னர் 1930களில் இஸ்லாமிய மதத்தினர் அறுதி பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கில் எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டதும், ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச ஆட்சியின் கீழ் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதும் சமகாலத்தில் நடைபெற்றன. இரண்டாம் உலகமாகயுத்தத்தின் போது யூத படுகொலைக்கு எதிராக உலக அரங்கில் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்தியங்கள் தமது நலனுக்காக 1948ல் இஸ்ரேலை உருவாக்கின. மத சித்தாந்தம் ஏகாதிபத்தியத்தால் தனது தேவைக்காக வெறியூட்டப்படும்போது அது மனித குலத்திற்கே ஆபத்தானதாக ஆகிவிடுகிறது. அதைத்தான் நாம் இஸ்ரேலில் பார்க்கிறோம். தாலிபன், ஐ எஸ் எஸ் போன்ற அமெரிக்காவின் உருவாக்கத்திலும் இவற்றைக் காணமுடியும். 

இஸ்ரேலைப் பற்றி ஜெர்மன் சான்சலர் பிரெட்ரிக் மேர்ஸ் அண்மையில் வெளியிட்ட கருத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது. அவருடைய வார்த்தையில் கூறுவதாக இருந்தால் 'எம் அனைவருக்குமாக இஸ்ரேல் செய்து கொண்டிருக்கின்ற குப்பை வேலை இதுவாகும்' (‘This is the dirty work Israel is doing for all of us’. German Chancellor Fridrich Merz).

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு கூறப்பட்ட போலி காரணம் 

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறிய ஒரே காரணம் ஈரானின் அணுசக்தி தயாரிப்பு பணிகள் அணுகுண்டை தயாரிக்கும் கட்டத்தை எட்டிவிட்டன. 

ஈரான் கையில் அணுகுண்டு இருப்பதுஇஸ்ரேலுக்கு மாத்திரம் அல்ல முழு மனித குலத்திற்குமே பேராபத்தானது ஆகவே அதனைத் தடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல. ஏனெனில் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து ஈரானை ஆட்சி செய்த முகம்மது ரீசா ஷா Mohammad Reza Shah மன்னன் காலத்தில் "அமைதிக்கான அணுசக்தி' யைப் பயன்படுத்தும் அனுமதியை வழங்கி அதற்கான தொழிநுட்ப அறிவை வழங்கியதே அமெரிக்கா தான். ஆம் மார்ச்  5, 1957 ம் திகதி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரும் ஈரான் மன்னன் ஷாவும் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 20 ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக அணுமின் நிலையங்கள் அமைத்து சுமார் 23,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஷா இலக்காக வகுத்தார்.

அது மாத்திரமல்ல 2023 ல் ஈரானும் அணு ஆயுதத்தை தயாரிக்க வேண்டும், ஏனெனில் இஸ்ரேல் அதை வைத்திருக்கிறது, தாமும் அணுவாயுதத்தை தயாரித்தால்தான் ஏனைய நாடுகள் எம்மை அச்சுறுத்துவதை நிறுத்தும் என பல ஈரானிய மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்திய போதும் அதன் உச்ச தலைவரான கொமெய்னி 'அணுகுண்டு தயாரிப்பது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது ' எனக் கூறி அதை தடுத்ததை உலகறியும். அதைவிட அமெரிக்கா உளவுத்துறை இயக்குனரான துள்சி கப்பார்ட் (Tulsi Gabbard – Director of National Intelligence) ஈரானிடம் அணுகுண்டு கிடையாது என்று கூறியதையும் சர்வதேச அணுவாயுத கண்காணிப்பு குழுவின் தலைவர் ரஃபல் மரியனோ குராசி  (IAEA Director General Rafael Mariano Grossi) அதனை உறுதிப்படுத்தியதையும் நினைவு கூறலாம்.

இதே போலி குற்றச்சாட்டை சோடித்துக்கொண்டுதான் 2003 ல் சதாம் உசைனின் மனித குலத்துக்கு எதிரான பயங்கர ஆயுதத்திடமிருந்து மனித குலத்தை காப்பதற்காக ஈராக் மீது போர் தொடுத்து அமெரிக்கா அதன் தங்கத்தையும் எண்ணெயையும் கொள்ளை அடித்தது.

ஜெனரல் வெஸ்லி கிளார்க்கின் அதிர்ச்சியான அம்பலப்படுத்தல் 

ஈரான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முடிவு இன்று நேற்று எடுக்கப்பட்டதல்ல. சோவியத் யூனியன் சிதைக்கப்பட்டபின்னர் அமெரிக்கா  ஏக வல்லரசாக கோலோச்சிய 2000 த்தின் தொடக்கத்தில், தாங்களே இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து கூலி பயங்கரவாத கும்பல்களை தமது தேவைக்காக உருவாக்கிகொண்டு, இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியை சிருஷ்டித்து,  9/11 இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்காவும் பிரிட்டனும், மற்றொரு வல்லரசு உருவாவதற்குள் மத்திய கிழக்கில் உள்ள ஈராக், சிரியா, லெபனான், லிபியா. சோமாலியா, சூடான், ஈரான் ஆகிய ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைத் தாக்க ஐந்தாண்டு திட்டத்தை கூட்டாக வகுத்தன.  இதனை ஜெனரல் வெஸ்லி கிளார்க் General Wesley Clark  அம்பலப்படுத்தியபோது உலகமே மூக்குமீது விரலை வைத்தது.

நான்கு நட்சத்திர ஜெனரல் வெஸ்லி கிளார்க் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்டுகின்ற ஒரு இராணுவத்தலைவர். வியட்நாம் போரிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் 1997 முதல் 2000 வரை நேட்டோவின் ஐரோப்பாவின் கூட்டணித் தளபதியாக இருந்தார். கொசோவோ போரின் போது நேச நாட்டு ஆபரேஷன் படையின் (Operation Allied Force) கட்டளைத் தளபதியாக செயல்பட்டார். அதிர்ச்சியூட்டும் இத்தகவலை ஜெனரல் வெஸ்லி கிளார்க் மீண்டும் உறுதிப்படுத்துவதை பின்வரும் காணொளியில் பார்க்கலாம்

33 வருடமாக இதே பொய்யைக்கூறிவரும் நெதன்யாகு. 

அதற்குமேலாக ஈரான் இன்னும் சில மாதங்களில் அல்லது சில நாட்களில் அணுகுண்டை தயாரித்துவிடும் என்ற பூச்சாண்டியை கடந்த 33 வருடங்களாக, அதாவது 1992 இல் இருந்து போர்வெறியனான நெதன்யாகு கட்டவிழ்த்துவிட்டு வருகிறார். அண்மை காலத்தில் இதைப்பற்றி மிக அதிகமாக அவரே பேசி வருகிறார். நெதன்யாகு ஒரு தனி நபர் கிடையாது அவர் அமெரிக்க இஸ்ரேலிய யுத்த ஆயுத தயாரிப்பு நிறுவனஙகளின் அரசியல் பிரதிநிதி. எனவே தான் இஸ்ரேலில் மக்கள் இவரை தேர்தல்களில் தோற்கடித்தாலும் மீண்டும் மீண்டும் எப்படியோ யுத்த பிரபுக்கள் அவரை பதவிக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள் . இவர்தான் ஈராக்கில் சதாம் உசேன் அணுகுண்டு தயாரித்து வருகிறார் என்ற புரளியை முதன்முதலாக கிளப்பியவர். இவர் கடந்த 33 வருடங்களாக ஈரானுக்கு எதிரான இந்த கதையைக் கூறிவருவதை அல்ஜசீராவின் காணொளி ஒன்று அண்மையில் வெளியிட்டது. அது இது

ஆகவே ஈரானை தாக்குவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக உருவாக்கிய போலிகாரணமே ஈரானின் அணுகுண்டு புரளியாகும் என்பது தெளிவாகிறது. 

ஈரான் மீது யுத்தம் தொடுத்ததற்கான உண்மையான காரணம்..

அமெரிக்காவின் மேலாதிக்கத்திக்கும், மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட இஸ்ரேலின் இராணுவத்தின் தாக்குதலுக்கும் அதன் ஹிட்லர் பாணியிலான (“Auftragtaktik” or “recon-pull) எதிர்பாராத மின்னல் தாக்குதல்களுக்கும், அதன் உளவுப்பிரிவான மொசாத்துக்கும், அஞ்சி ஏனைய அரபு நாடுகள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் சரணடைந்த பின்னர், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் இஸ்ரேலின் விஸ்தரிப்புக்கும் சவாலாக இருப்பதும் பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக உறுதியாக இருப்பதும் ஈரான் மாத்திரமே. இதுவே இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் ஆத்திரத்துக்குமான பிரதான காரணம். ஈரான் ஆதரவு துணைப் படைகளான ஹமாஸ் காசாவிலும் ஹிஸ்புல்லா லெபனானிலும் ஹூத்தீஸ் ஏமனிலும் ஏனைய பல குழுக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக போராடுவது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மேலும் சீற்றம் கொள்ளச் செய்துள்ளன. இவை அனைத்தையும் விட ஈரான் மீது வரலாற்று ரீதியான பகை அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் உண்டு.

1953 ல் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து மன்னன் ஷா பொம்மை ஆட்சியை உருவாக்கியமை 

ஊழல்மிக்க ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தை (இப்போது பிபி) Anglo-Iranian Oil Company (now BP) தேசியமயமாக்கிய , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கின் (Mohammad Mosaddegh) அரசாங்கத்தை ,பிரிட்டனின் MI6 வும் அமெரிக்காவின் சிஐ ஏ (CIA) வும் கூட்டாக சதி செய்து 1953 ல் கவிழ்த்து மன்னன் ஷாவை ஆட்சி கட்டிலில் ஏற்றி பொம்மை ஆட்சியை உருவாக்கின.

1979 ல் வெடித்த இஸ்லாமியப் புரட்சி

1979 ல் வெடித்த இஸ்லாமியப் புரட்சி அமெரிக்க ஆதரவு ஷாவின் ஆட்சியை முடிவுகட்டியது. ஷா நாட்டின் தங்கத்தை திருடிக் கொண்டு நாட்டை விட்டு ஓடினான். அதுவரை 14 வருடங்கள் பாதுகாப்புக்காக பிரான்சில் 14 வருடங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த இஸ்லாமிய மத அறிஞர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமெய்னி நாடு திரும்பி புதிய இஸ்லாமியக் குடியரசை ஆட்சி செய்யத்தொடங்கினார். எனவே ஈரானிய இஸ்லாமிய குடியரசு ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா வுக்கு எதிரான அரசாக உருவெடுத்தது.

நவம்பர் 1979- அமெரிக்க பணயக்கைதிகள் விவகாரம்: 

நாட்டைவிட்டு ஓடிய ஷாவை புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா அனுமதித்தை எதிர்த்து, அவரை ஈரானிடம் ஒப்படைக்குமாறு கோரி ஈரான் மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நுழைந்து 52 அமெரிக்கர்களை கடத்திச்சென்று 444 நாட்கள் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். இதனால் ஆத்திரமுற்ற வாஷிங்டன் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து, நாட்டின் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. 

1980-88: அமெரிக்கா ஆதரவுடனான ஈராக் படையெடுப்பு:

அப்போது அமெரிக்காவின் விசுவாசியாக இருந்த சதாம் உசேன் தலைமையில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக், ஈரான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈரான் ஈராக் யுத்தம் 8 வருடங்கள் நீடித்தது, இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா வழங்கிய இரசாயன ஆயுதங்களையும் ஈராக் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தியது. இவ்யுத்தம் ஈரானை இராணுவ ரீதியாக பலப்படுத்தியது. 

முகமது ஹொசைன் ஃபஹ்மிதே (Mohammad Hossein Fahmideh) என்ற 13 வயது சிறுவன் ஈராக்கிய பீரங்கி படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக 1980 அக்டோபர் 30 ஆம் திகதி தனது உடலில் கையெறி குண்டு பெல்ட்டை கட்டிக்கொண்டு ஈராக்கிய பீரங்கி ஒன்றின் அடியில் குதித்து வெடிக்கச் செய்து, தற்கொலைசெய்து கொண்ட நிகழ்வு இன்றும் ஈரானில் பெருமையுடன் நினைவுகூரப்படுகிறது . அவர் ஈரானில் ஒரு தியாக போர் வீரராகக் கொண்டாடப்படுகிறார்.

1983 பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இரண்டு குண்டு தாக்குதல்கள் : 

ஈரானின் துணையுடன் பெய்ரூட்டில்இருந்த அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 17 அமெரிக்கர்கள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து அங்கிருந்த பன்னாட்டுப் படைகளின் முகாம்களில் இரண்டு தற்கொலை லாரி குண்டுகள் வெடித்ததில், 220 அமெரிக்க கடற்படையினர், 18 கடற்படை மாலுமிகள், மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள், 58 பிரெஞ்சு துருப்புக்கள் கொல்லப்பட்டனர். 

ஜூலை 1988 - ஈரானிய விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. 

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் வின்சென்ஸ், ஈரானிய சிவிலியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் 290 பயணிகளும் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். பின்னர் இராணுவ ஜெட் விமானம் என்று தவறாக சுடப்பட்டதாக அமெரிக்கா மன்னிப்பு கேட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. 

பொருளாதார காரணங்களும் புவிசார் அரசியலும் 

இத்தகைய அரசியல் காரணங்களுக்கான பகை அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் தொடர்ச்சியாகவே இருந்து வந்தாலும் பொருளாதார காரணமும் அதற்கு பின்னால் இருந்தது. உலகில் நான்காவது பெரிய எண்ணைய் வளத்தை கொண்டுள்ள ஈரான் உலகின் மையப்பகுதியில் அமைந்திருப்பதும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு உட்படாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எப்பொழுதுமே ஒரு உறுத்தலாகவே இருந்தது. ஏனெனில் ஈரானின் மலிவான எண்ணெய் உலக சந்தைக்கு வருமானால் அமெரிக்காவின் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிப்பட்டு போகும் ஆபத்து இருந்தது. அத்துடன் ஈரான் பொருளாதரரீதியில் வளர்ந்தால் மேலும் பலமான எதிரியாக அது உருவெடுத்துவிடும் என அது உணர்ந்தது. இதுவே ஈரான் மீது மீது பொருளாதாரத் தடை விதித்ததற்கு பிரதான காரணம்.

உக்ரேனிய போரில் ருஸ்யாவுக்கு பக்கபலமாக ஈரான் இருப்பதும் சமீபகாலமாக சீனாவுடன் அரசியல் இராணுவ, பொருளாதார உறவு வலுவடைந்து வருவதும் அமெரிக்காவின் ஆத்திரத்துக்கு மற்றுமொருகாரணம்.  அமெரிக்காவின் இக்கரிசனையை மேலும் வளர்க்கும் விதத்தில் அண்மையில் ஒரு எதிர்பாராத விடயம் நடைபெற்றது. வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் தயாரிப்புக்கு  இன்றியமையாத "வெள்ளை தங்கம்" என்று அழைக்கப்படும் லித்தியத்தின் உலகின் இரண்டாவது பெரிய படிமம் ஈரானில் இருப்பது, சமீபத்தில், மார்ச் 2025 ல் கண்டுபிடிக்கப்பட்டது. லோயி இன்ஸ்டிடியூட் (Lowy Institute) இதனை 'அடிப்படை போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று' (A potential strategic game-changer) என விவரித்தது.

லித்தியம் படிமத்தை வடித்தெடுக்கும் உயர் தொழில் நுட்பம் இன்று சீனாவிடம்தான் இருக்கிறது என்பதையும் இத்துடன் பொருத்திப்பார்த்தால்  அமெரிக்கா திடீரென ஈரான் மீது போர் தொடுப்பதில் ஆர்வம் காட்டியதற்கு வேறெந்த உடனடிக் காரணத்தையும் தேட முடியவில்லை. அத்துடன் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு, அனைத்து சர்வதேச விதிகளையும் ராஜதந்திர நாகரீகத்தையும் மீறி, அமெரிக்கா நடந்து கொண்ட முறை இச்சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்கிறது.

எனவே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உண்மையான நோக்கம் சிரியாவில் செய்ததைப் போல ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தம்மால் வளர்த்தெடுக்கப்பட்ட கைப்பாவை ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வந்து தமது பொம்மை அரசு ஒன்றை நிறுவுவது தான். இதற்காகவே காலம் சென்ற ஷாவின் மகன் ரேசா ஷாவை அது தயார் படுத்தி வைத்துள்ளது. 

ஈரானில் ஆட்சிமாற்றத்துக்கான சீஐஏ - மொசாட் - MI6 சதி நீண்டகாலமாகவே இடம்பெற்றுவருக்கிறது. வழமையான 'ஜனநாயகம் மனித உரிமை' கோஷங்களை முன்வைத்து அமெரிக்க நிதியில் இயங்கும் தொண்டர்நிறுவங்கள் மூலமும் அரசியல் அமைப்புகள் மூலமும் இது நடைபெற்று வருகிறது. எனினும் நேரடியாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் யுத்தம் தொடுக்க துணிந்தது இதுவே முதல் தடவை. இதற்கு காசாவில் ஹமாசும் லெபனானில் ஹிஸ்புல்லாவும் கண்ட பின்னடைவும் சிரியாவில் பஷர் அல் சதாத்தின் வெளியேற்றம் ஏற்படுத்திய நம்பிக்கையும் பெரும் உந்துதலாக அமைந்தன.

தொடரும் ….

- பி.ஏ. காதர்

---------------------------
by     (2025-07-03 21:43:57)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links