- எழுதுவது விசேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் 2020 நவம்பர் 10 பிற்பகல் 3.25) இலங்கை வரலாற்றில் பலமான நபர் ஒருவரை கைது செய்ததன் மூலம் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் ஆச்சரியம் அடைந்த சந்தர்ப்பம் உள்ளதா? முதல் தடவையாக அவ்வாறு ஒன்று நடந்தது எப்போது? 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை நேரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுனன் மஹேந்திரனுடன் இணைந்து செயற்பட்ட அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் சானி அபேசேகரவினால் கைது செய்யப்பட்ட போது குற்ற விசாரணை திணைக்களத்தை முழு நாடும் ஆச்சரியமாக பேசியது. அதே போன்று அவர் கோட்டாபய ராஜபக்ச தொடர்புபட்ட மிக் விமான கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை துபாய் நாட்டில் வைத்து கைது செய்வதற்கான இணைப்பு பணிகளை முன்னெடுத்து வந்தார்.
2018 ஆம் ஆண்டு குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர் என்ற அடிப்படையில் பிணை முறி மோசடி விசாரணைகளை தன்னிடம் பொறுப்பு அளித்ததன் பயனாக இந்த மோசடியுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான அர்ஜுனன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை இந்த நாட்டின் அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் சுதந்திர தின பேரணி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளையில் சானி அபேசேகர கைது செய்தார். அதன் பின்னணியில் மேலும் ஒரு விடயம் நடந்து கொண்டிருந்ததை எவரும் அறிந்திருக்கவில்லை. காரணம் சானி அபேசேகர யாரிடமும் சொல்லாமல் தனது கடமையை சரிவர செய்தார்.
அதே தினத்தில் சானி அபேசேகர புலனாய்வு பிரிவினர் மற்றும் சர்வதேச போலீசாருடன் இணைந்து சட்டவிரோத நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவை துபாய் நாட்டில் வைத்து கைது செய்யும் நடவடிக்கைகளை செயல் படுத்திக் கொண்டிருந்தார். துபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க இறுதியில் இலங்கை நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இலங்கைக்கு தேவையான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கு பின்னர் பாதாள உலகக் குழு தலைவர் என கருதப்படும் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாகந்துரே மதூஷ் என்பவர் தனது மகளின் பிறந்த தின கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில் இலங்கை போலீசாரின் உதவியுடன் சர்வதேச போலீசாரால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார். சானி அபேசேகர துபாய் நாட்டு பாதுகாப்பு பிரிவுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு காரணமாக இவ்வாறு கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது.
அப்போது குற்ற விசாரணைப் பிரிவினர் உதயங்க வீரதுங்கவின் உறவு சகோதரர் ஒருவர் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பான தகவல்களை கண்டறிந்து பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணை பிரிவுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பு அதிகாரியாக செயற்பட்ட ரவி வித்யாலங்கார உடனடியாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று இந்த நிதி மோசடி விடயம் தொடர்பில் சானி அபேசேகர தகவல் கண்டறிந்துள்ள விடயத்தை தெரிவித்தார். அப்போது சானி அபேசேகரவை பழி வாங்காமல் விடப் போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச ரவி வித்யாலங்காரவிடம் சத்தியம் செய்துள்ளார்.
அர்ஜுன் அலோசியஸின் நிதி கை மாற்றம் தொடர்பான விடயத்தில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் பெயர் அடிபட்டதால் அர்ஜுன அலோசியஸை உடனடியாக தனது வீட்டிற்கு அழைத்த ரணில் விக்ரமசிங்க விசாரணையின் போது சுஜீவ சேனசிங்கவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது ரணிலை ஆச்சரியத்துடன் பார்த்த சானி அபேசேகர சட்டத்தின் முன் சரியான தகவல்களை முன்வைக்க வேண்டும் என்பதால் நீதிமன்ற அறிக்கையில் சுஜீவ சேனசிங்க தொடர்பிலும் பதிவிடப்படும் என ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் சானி அபேசேகரவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் அவருடைய வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாப்பு என்பன மீள பெறப்பட்டது. அரசாங்கம் குறைத்த பாதுகாப்பை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு மீள் சானி அபேசேகரவிற்கு பாதுகாப்பு வழங்கியது.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் செயல்படுத்தப்பட்ட வெள்ளை வான் கடத்தல் குறித்த தகவல்களை, ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பவற்றை விசாரித்த பின்னர் சானி அபேசேகர தகவல் வெளியிட்டார். எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் திட்டமிட்ட சோடிக்கப்பட்டவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவரும் நிரபராதிகள் எனவும் தெரிவித்து வருகிறது. ஆனால் உபாலி தென்னகோன் கடத்தி தாக்கப்பட்ட சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரது கைவிரல் அடையாளம் அவரது வாகனத்தில் இருந்தமை எவ்வாறு என்பதை அரசாங்கம் விளக்க மறுக்கிறது. இந்த ஊடகவியலாளர்களை கடத்தி தாக்கி கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பதை அனைவரும் அறிவோம். அதனால் சானி அபேசேகரவை கோட்டாபய ராஜபக்ஷ இலக்கு வைப்பது ஏன் என்பதை நம் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.
தனது அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் கொடுக்கல் - வாங்கல் விடயங்களுக்கு சானி அபேசேகர ஒத்துழைப்பு வழங்க மறுப்பதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சானி அபேசேகர விஷமாக மாறினார். பிணை முறி மோசடி குற்றவாளிகளை பின் தொடர்ந்து சென்றதால் சானி அபேசேகரவை ரணில் விக்ரமசிங்க வெறுத்தார். சஜித் பிரேமதாச தனது நண்பர் சவேந்திர சில்வாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் சானி அபேசேகரவை சஜித்திற்கும் பிடிக்காது. சானி அபேசேகர சார்பில் எந்த ஒரு அரசியல்வாதியும் முன் நிற்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம். சானி ரஞ்சன் ராமநாயக்க உடன் பேசிய தொலைபேசி உரையாடலை குடு தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. ஆனால் உண்மை எந்த ஒரு அரசியல்வாதியும் அழுத்தத்திற்கும் அடிபணியாத வீரம் மிக்க அரச அதிகாரியாக சானி அபேசேகர செயல்பட்டார்.
பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் நிறைந்த ஒரு பிரிவினர் சானி அபேசேகரவிற்கு எதிராக நிற்கின்றனர். அதற்கு காரணம் அச்சமின்றி குறித்த பொலிஸ் அதிகாரிகளின் குற்றங்களையும் கண்டுபிடிக்க சானி அபேசேகர அவர்களை பின் தொடர்ந்தார். கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சில போலீஸ் அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தினார். அதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் அடங்குவர். கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை விடயத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை கைது செய்து மரண தண்டனை வரை அழைத்துச் சென்றார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சிகளை அழித்த குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார சட்டத்திற்கு முன் கொண்டு செல்லப்பட்டார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளை காப்பாற்றிய சந்தேகத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டார். போலீஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்ய சூழ்ச்சி செய்த சந்தேகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சானி அபேசேகர கைது செய்தார்.
இலங்கையில் முதல் தடவையாக பொலீஸ் துறையாக இருக்கட்டும் இராணுவ துறையாக இருக்கட்டும் பிரபல நபர்களாக இருக்கட்டும் அவர்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களாக இருக்கட்டும் அனைவரும் எந்த ஒரு குற்றச் செயலுக்கும் துணை போகாமல் நேர்மையாக செயல்பட நினைத்திருந்தால் அது குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சானி அபேசேகர செயல்பட்ட காலத்தில் ஆகும்.
சானி இவ்வாறு நேர்மையாக செயல்பட சென்று எதிரிகளை உருவாக்கிக் கொண்டார். அவ்வாறு சானிக்கு எதிராளியாக மாறிய நபர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் சானியின் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கொள்ளைக் காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், குற்றவாளிகள், மோசடிக் காரர்கள், பாதாள உலகக் குழுவினர், கொலையாளிகள், மோசடி நிறைந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் வாதிகள், அரச ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சானி அபேசேகர போன்றதொரு நேர்மையான போலீஸ் அதிகாரி மீண்டும் ஒருமுறை போலீஸ் துறைக்கு வருவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். அதனைத் தடுப்பதற்கு அனைத்து விதத்திலும் களமிறங்கி செயல்படுவர்.
இந்த ஒன்றிணைந்த சக்திகளே இன்று சானி அபேசேகரவிற்கு எதிராக செயல்படுகின்றன. சுமார் ஆறு வருடங்களின் பின்னர் சானி அபேசேகர மீது குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக செயல்பட்ட வாஸ் குணவர்தன என்ற பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒன்று எனவும் அச்சுறுத்தி அழுத்தம் காரணமாக பெறப்பட்ட சாட்சி என்றும் சானி அபேசேகர மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அப்படியானால் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஏன் அந்த விடயத்தை வெளியில் கூறவில்லை என்பதை பகிரங்கப்படுத்த மறுக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயல்பட்ட போது இந்த விடயத்தை வெளிப்படுத்தி நிரூபித்து வாஸ் குணவர்தனவிற்கு உதவி செய்யாமல் இருந்தது ஏன்? இந்த கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. கோட்டாபய நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சானி அபேசேகர மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்படுவது ஏன் என அவர்கள் கூற மறுக்கின்றனர். இந்த கேள்விகளுக்கு பதில் அவர்களிடம் இல்லை. வாஸ் குணவர்த்தன என்ற கூலிக் கொலையாளியை காப்பாற்றும் நோக்கமாக சானி அபேசேகர மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இன்று அரசியலில் பெயர் போட்டுக் கொள்ளவும் குற்றவாளிகளிடம் இருந்து சலுகை வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளவும் இருக்கும் சிறந்த வழிமுறை சானி அபேசேகரவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகும். சானி அபேசேகரவிற்கு எதிராக பேசுவதற்கு முன்வரும் அல்லது சானி அபேசேகரவிற்கு எதிராக தகவல்களை வெளியிட முன்வரும் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் போன்றவர்களுக்கு குடு தொலைக்காட்சி இலவசமாக சந்தர்ப்பம் வழங்க காத்திருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நெருங்கிய நண்பரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை திருப்திப்படுத்தும் நோக்கில் சானி அபேசேகரவிற்கு ஆதரவாக செயல்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை போட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ கூறும் எல்லா விடயங்களையும் மறுக்காமல் செய்யக் கூடிய நபர் என தன்னை நிரூபித்து பொலிஸ் மா அதிபர் பதவியில் அமரும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சானி அபேசேகரவிற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கிறார்.
சானி அபேசேகரவிற்கு எதிரான நேர்காணல் நிகழ்ச்சிகளை செயல்படுத்துவது யார்? அது வேறு யாருமல்ல. தனது மாதாந்த சம்பளத்தை பிரபல கோடீஸ்வர வியாபாரி ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சமுதித்த சமரவிக்ரம என்ற நபராவார். லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக பதவி பெறுவதற்கு பார்த்துக் கொண்டிருக்கும் ஊழல் நிறைந்த நீதிபதி உபாலி அபேரத்ன (பிஸ்சு பூசா) அரசியல் பழிவாங்கல் தொடர்பான காட்டு நீதிமன்றத்தின் ஊடாக சானி அபேசேகரவை குற்றவாளியாக நிரூபிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார். உயர்நீதிமன்றத்திற்கு தாவிக் கொள்ள முயற்சிக்கும் சுகத கம்லத் மற்றும் சவேந்திர பெர்னாண்டோ ஆகிய சட்டத்தரணிகள் சானி அபேசேகரவிற்கு எதிராக ஆதாரங்களை தயாரித்து அவரை குற்றவாளியாக மாற்றி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கின்றனர்.
இன்று நமது அரசியல் தலைவர்களை குளிர்மை படுத்துவதற்காக உள்ள சிறந்த வழிமுறை அர்ஜுனன் அலோசியஸ், உதயங்க வீரதுங்க, துமிந்த சில்வா, வெள்ளை வேன் கடத்தல் காரர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன போன்ற நபர்களை எவ்வித குற்றங்களும் செய்யாமல் நிரபராதிகள் என்று கூறுவதாகும். அத்தோடு இந்த அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்திற்கு முன் கொண்டு வந்து தண்டனை பெற்று கொடுத்த நேர்மையான வீரமான போலீஸ் அதிகாரி சானி அபேசேகரவை குற்றவாளி என நிரூபித்து சிறையில் அடைப்பதாகும். நாம் இதனை ஏற்றுக்கொண்டு எதுவுமே பேசாமல் இருந்தால் தற்போது நாட்டில் அதிகூடிய அதிகாரங்களைப் பெற்று ஆட்சியிலிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளை வேன் சுற்றுலா நமக்கு கிடைக்கும். இந்த அதிகாரங்கள் இன்று கோட்டாபய ராஜபக்ஷவிடம் மாத்திரமே இருக்காது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷவாக இருக்கட்டும் ரணில் விக்ரமசிங்கவாக இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும் சஜித் பிரேமதாசவாக இருக்கட்டும் இவர்கள் எவருக்கும் நேர்மையாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி சானி அபேசேகரவிக்கு சார்பாக முன்னிற்க வேண்டிய தேவை இல்லை. வேறு போலீஸ் அதிகாரிகளும் சானி அபேசேகரவை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட தயாராக இல்லை. இவர்கள் அனைவரது எதிர்பார்ப்பும் சானியைப் போன்று அல்லாமல் அரசியல்வாதிகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி அவற்றை செயல்படுத்துவதும் அரசியல்வாதிகளின் எதிரிகளை மாத்திரம் சிறைக்கு அனுப்புவதற்கு செயல்படவும் அவர்களது நண்பர்களை சிறையில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள செயல்படவே விரும்புகின்றனர்.
தொடர்புடைய செய்தி
மாகந்துரே மதூஷ் கொலையின் ரகசியம் வெளியானது..!
---------------------------
by (2020-11-10 01:46:00)
Leave a Reply