- பி.ஏ. காதர்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 05, மு.ப. 11.00) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. இன்றைய மாறிவரும் உலகப்போக்கின் ஒரு வெளிப்பாடு அது . இப்போக்கை இக்கட்டுரை வரலாற்றுப் பார்வையில் சான்றுகளுடன் தருகிறது.]
2003இல் ஈராக்கை தாக்குவதற்கு எவ்வாறு அமெரிக்கா தயாரானதோ அதே விதத்தில் அதே பொய்யைக்கூறிக்கொண்டு அமெரிக்கா போருக்கு தயாரானது அதன் ஊடகங்கள் ஈரான் அணுகுண்டு தயாரித்தால் உலகமே அழிந்து போகும் என்பது போல் நச்சுப் பிரச்சாரங்களை கக்கின. இஸ்ரேலிடம் இருக்கும் அணுகுண்டுகளைப் பற்றியோ ஏனைய நாடுகளிடம் இருக்கின்ற அணுகுண்டுகளைப் பற்றியோ, இதே டொனால்ட் டிரம்ப் முன்னைய ஜனதிபதி பராக் ஒபாமா ஈரானுடன் அணுசக்தி கட்டுப்பாடு தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து 2018 ல் வெளியேறியதைப் பற்றியோ பேசவில்லை. போருக்கான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
ஓமான் மத்தியஸ்த்தில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற ஈரான் இஸ்ரேல் பேச்சு வார்த்தையில் ஈரான் கலந்து கொள்ள வேண்டும் என மிரட்டல் தொனியில் ட்ரம்ப் அறிவித்தல் விடுத்திருந்தார். எனினும் 5 தடவைகள் பேச்சு வார்த்தைகளில் ஈரான் தொடர்ச்சியாக கலந்துகொண்டது. ஜூன் ஞாயிறு 15 ம் திகதி 6-வது பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. அதிலும் ஈரான் கலந்துகொள்ள தயாராக இருந்தது. அதற்கிடையில் 13 ம் திகதி வெள்ளிக்கிழமை, சகல இராஜதந்திர மரபுகளையும் மீறி, இறைமையுள்ள ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு தாக்குதல் தொடுக்க்கூடாது கூடாது என்ற ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் மீறி தனது வான் தாக்குதலையும் சீர்குலைவு கொரில்லா தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. இத்தாக்குதலுக்கு 'எழும் சிங்கம்' (operation rising lion) என பெயரிட்டது.
இன்னொரு நாட்டின் அணு நிலையங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் அதன் மூலம் வெளியாகின்ற வ கதிர்வீச்சு ஏனைய நாடுகளுக்கும் பரவி ஆபத்தை விளைவிக்கும் என்பதனாலே அத்தகைய தாக்குதல்கள்களை போர்க் குற்றமாக ஐநா பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த விதியை மீறி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. அதனை அணுநிலையங்களை கண்காணிக்கின்ற IAEA நிறுவனம் கூட கண்டிக்கவில்லை.
இஸ்ரேல் தனது வான் தாக்குதலை தொடர்வதற்கு முன்னர், ஈரானுக்குள் ஊடுருவி இருந்த அதன் உளவுப்பிரிவான மொசாத் வலைப்பின்னல் மூலம் ஈரானின் வான்தடுப்பு சாதனங்களை உள்ளிருந்தே தாக்கி செயலிழக்கச் செய்தது. அதே சமயம் உள்ளிருந்தே பாரிய ட்ரான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று ராணுவ கமாண்டர்கள் உட்பட முக்கியஅரசியல் தலைவர்கள், பிரதான அணுஆய்வு விஞ்ஞானிகள் உட்பட சுமார் 20 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். சில இராணுவ தலைவர்கள் வாட்ஸாப் மூலம் ஒரு அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு போலி செய்தி அனுப்பப்பட்டு ஒரே இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சில விஞ்ஞானிகளும் ராணுவ தலைவர்களும் தங்கள் வீட்டு படுக்கையறையில் வைத்துக் கொல்லப்பட்டனர். இப்பாரிய இழப்புக்கு அவர்களின் அஜாக்கிரதையும் ஒரு காரணம்.
இதனால் ஈரானின் வான்வெளிக்குள் பெரும் தடைகள் எதுவும் இன்றி நுழைந்து தன் இஷ்டப்படி இஸ்ரேல் வான் தாக்குதல்களை தொடர்ந்தது. ஈரானின் ராணுவ தலைமையகம், ராணுவ கட்டமைப்பு அனைத்தும் சீர்குலைந்தன. இஸ்ரேலின் இந்த மின்னல் தாக்குதலும் அதன் உளவு பிரிவான மொசாதின் ஆச்சரியப்பட வைக்கும் கொரில்லா தாக்குதல்களும் உலகத்தை மிரள வைத்தன. 1967 ல் ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் காட்டிய சாகசம் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது, என்றே உலகம் கருதியது. அன்று அடிவாங்கிய எகிப்து மீண்டு எழவே இல்லை. அதே போன்று ஈரானின் ஆட்டமும் வாய் வீச்சும் முடிந்துவிட்டது என்றே உலகம் நினைத்தது.
டொனால்ட் டிரம்ப் வெற்றிக்களிப்பில் திளைத்தார். நேற்று பேச்சவார்த்தையில் இருந்தோர் இன்று உயிரோடில்லை, நாம் நேரடியாக போரில் ஈடுபடவில்லை, ஆனால் தேவையான ஆயுதங்களை பெருமளவில் கொடுத்தோம், இனியும் கொடுப்போம். ஈரான் தனது அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என முழங்கினார்.
ஆனால் அடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. ஈரானில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ட்ரான்களும் சில ஏவுகணைகளும் இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவை தாக்கின. காசா மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்துவரும் போரின் அவலத்தை முதற்தடவையாக இஸ்ரேலிய மக்கள் சிறிதளவு அனுபவித்தனர். இடையில் ஜோர்தான் அவற்றில் பலவற்றை சுட்டு வீழ்த்தினாலும், அமெரிக்க போர்க்கப்பல்கள் அவற்றை தடுக்க முயன்ற போதும் அவற்றையெல்லாம் மீறி ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேலை அவை தாக்கின. இத்தாக்குதலுக்கு 'உண்மையான வாக்குறுதி மூன்று' (Operation True Promise iii) என ஈரான் பெயரிட்டது.
இஸ்ரேலிடமிருந்த அயன் டோம் (IronDome) உலகத்திலே தலைசிறந்த வான் தாக்குதல் தடுப்பு சாதனம் என கருதப்பட்டது. அத்துடன் அமெரிக்காவின் மிகவும் திறன் வாய்ந்த 'தாட்' THAAD வான் தாக்குதல் தடுப்பு சாதனமும் அங்கு பொருத்தப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் மீறி ஈரானின் ஏவுக்கணைகள் இஸ்ரேலின் இதயப்பகுதியை தாக்கியபோது உலகம் ஆச்சரியத்தால் வாய்பிளந்து. 12 நாட்கள் தொடர்ந்த இப்போர் நவீன உயர் தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவின் ஆதரவையும், அதி சிறந்த உளவுப்பிரிவான மொசாடையம் கொண்டுள்ள இஸ்ரேலை யாராலும் தொடமுடியாது என்ற பிம்பத்தை முதல் தடவையாக நொறுக்கியது.
ஈரானால் அமெரிக்காவின் துணையோடு ஈராக் போர்தொடுத்தபோது அதனால் 8 வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனால் இப்போரில் இஸ்ரேலால் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்பது சில நாட்களிலே அமெரிக்காவுக்கு புலப்பட ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்கா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில நாட்கள் இப்போர் தொடர்ந்தால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போகும் என்ற அச்ச நிலைமை உருவானது. ஏனெனில் இப்போர் நீடித்தால் ஹமாஸ் ஹிஸ்புல்லா ஹூதிகள் உட்பட ஏனைய ஈரான் சார்பு போராளி குழுக்களும் போரில் குதிக்கக்கூடிய ஆபத்தும், அதனால், சிரியா உட்பட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலே ஈரானுக்கும் பலஸ்தீனர்களுக்கும் ஆதரவான மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடிய ஆபத்தும் இருந்தது.
அதுவரை இஸ்ரேலின் திட்டமிட்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மத்திய கிழக்கு நாடுகள் திணறி சரணடைந்ததுதான் வரலாறாக இருந்தது. இஸ்ரேல் தோல்வியுற்றால் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஆட்டம் காணும். எனவே அமெரிக்கா நேரடியாக இவ்யுத்தத்தில் குதிக்க தீர்மானித்தது. அதேவிதமாக ஈரானையும் இஸ்ரேல் பணியவைக்கும் என்ற நம்பிக்கையில் தனது நேச சக்திகளான நேட்டோ நாடுகளையும் கூட அலட்சியம் செய்துவிட்டு இஸ்ரேல் ஊடாக இந்த யுத்தத்தை தொடுத்த அமெரிக்கா இப்போது தானே களத்தில் இறங்கி இஸ்ரேலைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவானது. ஆகவே தான் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இரண்டு நாட்கள் கலந்து கொள்வதற்காக சென்ற ட்ரம்ப் தனது பயணத்தை இடைநடுவில் ஒரே நாளில் முடித்துக்கொண்டு ஜூன் 17ல்அமெரிக்கா திரும்பினார். அப்போது நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் எமது ஆய்வுக்கு மிகவும் முக்கியமானவை.
ஒன்று, இரண்டு நாட்கள் காலக்கெடு கொடுத்து, அதற்குள் ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும் அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தமை. இவ்வாறு வெற்றிபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை சரணடையுமாறு எச்சரித்த ஒரே தலைவர் டரம்பாகத்தான் இருக்க முடியும். இஸ்ரேல் இன்னமும் போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என உலகத்தை நம்ப வைக்கும் அவரது சாத்தியமற்ற முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
இரண்டு, பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே டிரம்ப் அவசரமாக நாடு திரும்பினார் என பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கூறியதற்கு ‘யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்னிடம் வேறு பல திட்டங்கள் இருக்கின்றன என ஆத்திரமாக கூறிய பதில். நாடுதிரும்பிய டிரம்ப் அவசரமாக அமெரிக்க பாதுகாப்பு சபையைக்கூட்டி ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்தை எடுத்துவிட்டார் அல்லது அப்படி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக நம்பவைத்து ஈரானை மிரட்ட நினைத்தார் என்பதை இது சுட்டிக்காட்டியது.
ஆனால் ஈரான் பதிலுக்கு ஒரு காரியத்தை செய்தது. மறுநாள் 18ம் திகதி டெல் அவிவில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக்கூறி குறிப்பிட்ட நேரத்தில் முதல் தடவையாக தனது சொந்த தயாரிப்பான பத்தா Fattah ஹைப்பர்சோனிக் பெலிஸ்டிக் ஏவுக்கணை மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நவீன ஏவுகணை 1200 மேல் தொலைவை வெறுமனே ஏழு நிமிடங்களில் கடந்து அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அனைத்து உயர் தொழில்நுட்ப தடுப்பு சாதனங்களை துளைத்துக்கொண்டு இத்தாக்குதலை நடத்தியது. அதையடுத்து ஈரான் அமெரிக்காவுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது. 1200 மைல்களுக்கு அப்பால் இருக்கிற டெல் அவிவை எம்மால் தாக்க முடியுமானால் மிக அருகில் இருக்கின்ற அமெரிக்க நிலைகளை தாக்குவதற்கு அதிக நேரம் பிடிக்காது என்பது தான் அது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் 19 ராணுவ தளங்கள் உள்ளன. இவை அமெரிக்காவின் இராணுவ பாலத்தின் சின்னமாக கருதப்பட்டன. அவற்றைக் கொண்டிருந்த எண்ணைவளம்மிக்க இஸ்லாமிய நாடுகள் அவற்றை தமது பாதுகாப்பு அரண்களாகவும் தமது செல்வசெருக்கை பறைசாட்டும் அடையாளமாகவும் கருதின.
ஈரான் யுத்தம் அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பான கண்ணோட்டத்தையே மாற்றி விட்டது. அதுவரை உலகை அச்சுறுத்தும் வகையில் அங்கு கம்பீரமாக பவனி வந்த விமானம்தாங்கி கப்பல்கள் இப்போது ஈரானின் ஏவுகணை தம்மீது விழுந்து விடுமோ என்று நடுங்கின. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் உலக அரங்கில் தனக்கு ஏற்பட போகும் அவமானத்தை கருதி அமெரிக்கா கவலை கொள்ள வேண்டியிருந்தது. இப் படைத்தளங்களில் அதுவரை மிடுக்கோடு நடந்த சீருடை அணிந்த அமெரிக்கா படைவீரர்கள் இப்போது தம்மீது ஈரானின் ஏவுக்கணை வந்து விழுமோ என அஞ்ச வேண்டியிருந்தது. இப்படை வீரர்கள் சிலராவது இறந்தால் அமெரிக்காவில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி டிரம்ப் சிந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை தம்மை பாதுகாக்கும் என்று நம்பிய அமெரிக்கா படைத்தளங்களை இப்போது தாங்கள் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதை இஸ்லாமிய நாடுகள் உணர்ந்தன.
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் எந்த ஒரு யுத்தத்திலும் அமெரிக்கா வெற்றி பெற்றதில்லை. 1950 களிலே கொரியா யுத்தத்தில் அமெரிக்கா தோல்வி அடைந்தது. 70களில் வியட்நாமில் தோல்வியடைந்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் அடிவாங்கியது. ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்ற ஏமன் ஹூதிக்களைக்கூட கூட இஸ்ரேல் அமெரிக்கா இரண்டாலும் வெற்றி கொள்ள முடியவில்லை. இப்போது இஸ்ரேல் பலவீனமடைந்துள்ள நிலையில், சீனாவினதும். ரஸ்யாவினதும் வடகொரியாவினதும் ஆதரவு கொண்ட ஈரானை அமெரிக்கா எங்கே வெற்றி கொள்ளப் போகிறது என பகிரங்கமாகவே பலர் கேள்வி எழுப்பத்தொடங்கினர்.
அதற்கு சிகரம் வைத்தாற்போல் சர்வதேச போக்குவரத்துக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணையை (strait of Hormuz) ஈரான் மூடுவதற்கு தீர்மானித்தது ஏனைய மத்திய கிழக்கு நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் கலக்கமடையச் செய்தது.
இப்பின்னணியில் அமெரிக்கா ஈரானை தாக்கினால் நிச்சயம் ஈரான் அமெரிக்க நிலைகளை தாக்கும் என்பது உறுதியாகி விட்ட நிலையில் தமது நாடுகளில் அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளை உணரத்தொடங்கி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.
ஏற்கனவே 37 ட்ரில்லியன் கடனில் மூழ்கி உலகின் முதலாவது கடன்கார நாடாக மாறியுள்ள அமெரிக்காவினால் மற்றொரு நீண்ட கால யுத்தத்தை தொடர்வது சாத்தியம் இல்லை. இது அமெரிக்காவுக்கும் தெரியும். ஆகவே அவர்கள் குறுகிய காலத்துக்கு ஒரு பாரிய தாக்குதலை நடத்தி ஈரானை பலவீனப்படுத்தி அதனை இஸ்ரேலுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வைப்பதே அமெரிக்காவின் திட்டமாக இருந்தது. ஆனால் ஈரானின் பாட்டா Fattah ஏவுகணை தாக்குதல் ஒரு தெளிவான செய்தியைக் கூறியது.
அதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஈரானுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய போதும் கூட அதன் ஏவுகணை தயாரிப்போ ட்ரோன் தயாரிப்போ பாதிக்கப்படவில்லை, அதன் பாசறையை இஸ்ரேலால் , நெருங்க முடியவில்லை என்பதும் அதன் ராணுவ கட்டமைப்பு பலமாக இருப்பதும் உணரப்பட்டது.
எனவே அமெரிக்கா தனது முதலாவது திட்டத்தை கைவிட்டு இரண்டாவது பிளான் பி (Plan B) யை நடைமுறைப்படுத்த தொடங்கியது. அதுதான் இரகசிய பேச்சுவார்ததை மூலம் இணக்கத்துக்கு வந்து ஒருவரை ஒருவர் நோகாமல் தாக்கி விட்டு இருவருமே வெற்றி பெற்றதாக உலகத்துக்கு காட்டிக்கொண்டு கைகுலுக்குவது. வல்லரசுகள் யுத்தத்தில் ஈடுபடும் போதே அதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு ரகசிய திட்டத்தை வைத்திருக்கும். யுத்தம் நடக்கும்போதே பின் வாசல்வழியாக இரகசிய பேச்சுவார்த்தையை அவை நடத்தும். இதற்கு பின்வாசல் இராஜதந்திரம் (Backchannel Diplomacy) என்று பெயர்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் 1978 ல் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தங்களாகும். இது இஸ்ரேல், எகிப்து மற்றும் அமெரிக்கா இடையேயான பின்வாசல் இரகசிய பேச்சுவார்த்தைகள் மூமாகவே சாத்தியமாக்கப்பட்டது.
ஈரான் - கொன்ட்ராஸ் ஊழல் விவகார மும் இத்தகையது. அமெரிக்க அதிபர் ரீகன் நிர்வாகத்தின் போது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாக்கள் லெபனானில் பிடித்து வைத்திருந்த ஏழு அமெரிக்க பணைய கைதிகளை விடுதலை செய்வதற்காக, அப்போது ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த ஆயுத ஏற்றுமதி தடையையும் மீறி, ஈராக் - ஈரான் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது வெளிப்படையாக ஈராக்குக்கு ஆதரவு நல்கிக்கொண்டு, இரகசியமாக ஈரானுக்கு ஆயுதங்களை 1981 முதல் 1986 வரை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தை நிக்கரகுவாவில் சாட்டினிஸ்ட்ராக்களுக்கு (Sandinista) எதிராக போராடிய அமெரிக்காவின் கூலிப்படையான கொன்ட்ராஸ் (Contras) ஆயுத குழுவுக்கு வழங்கிய விவகாரம் அம்பலத்துக்கு வந்த போது அது ஈரான் - கொன்ட்ராஸ் ஊழல் (ஈரான் - Contras scandal) என்று அழைக்கப்பட்டது.
2015ல் ஈரானும் அமெரிக்காவும் நடத்திய பின்வாசல் இரகசிய பேச்சுவார்த்தைகள் மூமாகவே (JCPOA) அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கைச்சாத்திட்டது.
கடந்த இஸ்ரேல் ஈரான் யுத்தம் தொடங்குவதற்கு முன்னமே வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு தான் இருந்தது. இப்போர் ஆபத்தான காலகட்டத்தை நெருங்கிய போது, அமெரிக்காவின் கட்டளைநிலையத்தையும் ஒரு பாரிய படைத்தளத்ததையும் கொடுள்ள கத்தார், தனது நலனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதை உணர்ந்து, சமரச முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. இப்பேச்சுவாரத்தையில் தன்னை ஈடுபட சொன்னது அமெரிக்கா தான் என்பதை பின்னர் கத்தார் ஒத்துக்கொண்டது.
ஒரு நாடகம் அரங்கேறியது. 22.06.2025, ஏற்கெனவே இஸ்ரேல் தாக்கிய போர்டோவ் Fordow, நஸ்டன்ஸ் Natanz, இஸ்பஹான் Isfahan ஆகிய மூன்று ஈரானின் அணுஆராய்ச்சி தளங்கள் மீது அமெரிக்கா அதி பளு கூடிய பாதாள சுரங்கங்களைத் தகர்க்கும் குண்டுகளை விசேட விமானங்கள் மூலம் வீசி தாக்கியது. ஈரான் அதை தடுக்கவில்லை. உயிர் உடமை சேதங்கள் பற்றியா நம்பகரமான செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. குறிப்பிட்டு கூறும் அளவுக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் டிரம்ப் தனது இலக்கு நிறைவேறிவிட்டது, இனி ஈரானால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என ட்வீட்டில் பதிவிட்டார். பதிலுக்கு ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது மறுநாள் 23.06.2025 ஏவுக்கணை ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியது. முன் கூட்டியே இத்தாக்குதல் பற்றி காட்டருக்கும் அமெரிக்காவுக்கும் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா அவற்றை இடைமறித்து அழித்துவிட்டதாக கூறியது. ஈரானோ தமது தாக்குதலால் பாரிய சேதம் அப்படைத்தளத்துக்கு ஏற்பட்டதாக அறிவித்தது. ஆனால் இதற்கான ஆதாரங்களை அது வெளியிடவில்லை. நடந்து முடிந்தது ஒரு நாடகம் தான் என்பது மக்களுக்குத் தெரியும். முதல் தடவையாக அமெரிக்காவின் படைத்தளம் ஒன்று தாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா ஆத்திரமடையவில்லை. மாறாக டொனால்ட் டிரம்ப் தமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு சேதமில்லாமல் தாக்கியதற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்தார்.
அதற்கடுத்த நாள் 24.06.2025 ஈரான் -இஸ்ரேல், இரு நாடுகளும் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது என டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டார். இப்போரில் முத்தரப்புமே வெற்றி பெற்று விட்டதாக கூறி ஈரானை மீண்டும் மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம் என அதில் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல், ஈரான் இரண்டு நாடுகளுமே தாங்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரவில்லை என மறுப்பு தெரிவித்தன. ஆனால் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் பேசுகின்ற டிரம்ப் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
அதே சமயம் இவ்விரு நாடுகளும் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன என்பதுதான் முக்கியமான விடயம். அதற்குக் காரணம் இருந்தது. போரில் ஈடுபட்ட இருநாடுகளுக்கும் போர்நிறுத்தம் தேவைப் பட்டது. அயன் டோமையும், மொசாட்டையும் ,உயர் தொழில்நுட்பத்தையும், இராணுவ பயங்கரவாதத்தையும், அமெரிக்காவையும் நம்பியிருந்த இஸ்ரேல் பலத்த அடி வாங்கி இருந்தது. அது தன்னுடைய எதிர்கால பாதுகாப்பு தொடர்பான அடிப்படை மூலோபாயத்ததையே மீளாய்வு செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஈரான் பாரிய இழப்புகளைச் சந்தித்திருந்தது. அதன் விரிந்த வான்பரப்பை பாதுகாப்பதற்கு வழியின்றி திணறிக் கொண்டிருந்தது. மொசாட் தாக்குதலுக்கு அஞ்சி அதன் உச்சதலைவர் கொமெய்னி வெளியே தலைகாட்ட முடியாமல் ஒளிந்திருக்க நேர்ந்தது. இருதரப்புக்கும் அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஆகவேதான் இவ்விருநாடுகளும் போர்நிறுத்தத்தை அரைமனதோடு ஏற்றுக்கொண்டன
அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் கூட இப்போர் நிறுத்தம் தேவைப்பட்டது. நீண்டகால யுத்தத்துக்கு தயாரான ஈரான் நிதானமாக திட்டமிட்டமுறையில் தனது தாக்குதல்களை நடத்திவந்தது. யுத்தம் தொடங்கிய ஆரம்ப நாட்களில் மொசாட்டின் தாக்குதல்களை சமாளிக்க ஈரான் திணறிய போதும் சீக்கிரமே நிலைமையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இழக்கப்பட்ட தலைவர்களை மாற்றீடு செய்து கொண்டு தனது ஆளில்லா விமானங்களையும் ஏவுக்கணைகளையும் மிக பாதுகாப்பாக வைத்துக் கொண்டது. ஆனால் அமெரிக்கா நீண்ட கால யுத்தத்திற்கு தயாரில்லை. போர் நீடித்தால் சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவும் நேரடியாகவே ஈரானுக்கு ஒத்துழைப்பு நல்கும்; ஏனெனில் ஈரான் இப்போரில் விழுந்தால் உலகின் மாற்று சக்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பிரிக்ஸ் (BRICS) விழும் என்பது இந்நாடுகளுக்குத்தெரியும். இதனை அமெரிக்கா உணர்ந்தே இருந்தது. உலக அபிப்பிராயமும் இஸ்ரேலின் யுத்தவெறியாட்டத்துக்கு எதிராக மாறியிருந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் யூதர்கள் கூட இஸ்ரேலின் காசாமீதான பயங்கரவாத இனஒழிப்பை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் தனிமைப்பட்டிருந்தன. போர்வெறியரான நெதன்யாகு இந்த யுத்தத்திற்குள் அமெரிக்காவை இழுத்து விட முயற்சிக்கிறார் என பல செனட்டர்கள் எச்சரிக்கத் தொடங்கினர். செனட்டர் ராண்ட் போல் Sen. Rand பால் போன்றோர் அமெரிக்காவின் ஜனாதிபதி யார், நெதன்யாகுவா என கேள்வி எழுப்ப தொடங்கினர். எனவே தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் பெரும் தொகையை சமாளிப்பதற்கு திண்டாடிக்கொண்டிருக்கும் அமெரிக்கா ஒரு நீண்ட கால போருக்கு, அதுவும் தற்போதைய சூழ்நிலையில், ஈடுபடுவதற்கு தயாராக இல்லை.
மாறிவரும் உக்ரைன் - ரஷ்ய யுத்தக் கள நிலைமை அத்துடன் அமெரிக்கா இப்போரை அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்ததற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அதுதான் வேகமாக மாறிவரும் உக்ரைன் - ரஷ்ய யுத்தக் கள நிலைமையாகும். ஈரான் யுத்தத்தில் உலக கவனம் கவனம் திரும்பிய போது அந்த 12 நாட்களில் ரஷ்யாவின் கை வெகுவாக ஒங்கத் தொடங்கிவிட்டது. உக்ரைனில் அதன் முன்னேற்றம் மிக வேகமாக இருந்தது. இந்த நிலை தொடர்ந்தால் வெகு சீக்கிரமே உக்ரைன் ரஷ்யாவிடம் வீழ்ச்சியடையும், அங்குள்ள அரிய கனிமங்களிலும் பெரும் விளைச்சல் நிலப்பரப்பிலும் கண் வைத்து போருக்கு இராணுவ, நிதி உதவிகளை வழங்கிய அமெரிக்கா, தான் போரில் கொட்டிய பணம் அனைத்தையும் இழக்க வேண்டிய ஆபத்து உருவாகி வருவதை உணரத் தொடங்கியது.
தொடரும்….
Read Part 1 - https://www.lankaenews.com/news/566/ta
---------------------------
by (2025-07-05 23:24:38)
Leave a Reply