~

'நிபந்தனையின்றி சரணடையுங்கள் அல்லது விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்கள் ' என்ற மிரட்டலோடு தொடங்கப்பட்ட ஈரான் மீதான அமெரிக்காவின் யுத்தம் 'ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்!' என்ற வாழ்த்தோடு முடிவடைந்ததேன்? - ஒரு அலசல் - (இறுதிப் பகுதி)

-பி.ஏ. காதர்

(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 08, மு.ப. 8.20) [இஸ்ரேல் -ஈரான் யுத்தம் விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. இன்றைய மாறிவரும் உலகப்போக்கின் ஒரு வெளிப்பாடு அது . இப்போக்கை இக்கட்டுரை வரலாற்றுப் பார்வையில் சான்றுகளுடன் தருகிறது.]

இவ்வாறு இஸ்ரேல்- ஈரான் 12 நாள் யுத்தம் சர்வதேச அரசியலை சற்று புரட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும். யுத்த நிறுத்தத்தை அவசரமாக பிரகடனப்படுத்திவிட்டு அடுத்தடுத்து ட்ரம்ப் செய்த காரியங்கள் இதனை உணர்த்துகின்றன.

மாறிய அரசியல் களம்

அதுவரை தான் முரண்பட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய தலைவர்களை சந்திப்பதற்காக நேட்டோ மாநாட்டிற்கு விரைந்த டிரம்ப், அவர்களுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு, நேட்டோ தொடர்பான தன்னுடைய அபிப்பிராயம் இப்பொழுது மாறிவிட்டது என்று கூறி அவர்களுடன் கை குலுக்கினார். உக்ரேனுக்கு Patriotபெட்ரியட் வான்தடுப்பு சாதனத்தையும் செய்மதி தகவல்களையும் வழங்குமவதாக உறுதி அளித்தார்.

அரிய கனிமங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனாவுடன் வர்த்தகப் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுவிட்டது, இனி சீனா மீதான வர்த்தக தடைகள் நீக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவு தான் மிகவும் முக்கியமானது.'இனி சீனா ஈரானிடமிருந்து எண்ணையை வாங்கிக்கொள்ளலாம், அதே சமயம் சீனா எங்களிடம் இருந்தும் எண்ணையைவாங்குங்கள்' என அவர் பதிவிட்ட ட்விட்டர் மாறிவரும் உலக அரசியல் களநிலைமையையு ம் அமெரிக்காவின் புதிய அணுகு முறையையும் வெளிப்படுத்துகிறது.

இப்பதிவுகளில் இருந்து இனி என்ன நடக்கப் போகிறது என்பதை ஓரளவுக்கு எம்மால் ஊகிக்க முடியும். அமெரிக்கா சீனாவோடு தற்காலிகமாக வேணும் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆகவே தைவானில் இப்போதைக்கு யுத்தம் ஒன்று வெடிக்கப்போவதில்லை. ஈரானோடும் அது சமரசம் செய்து கொள்ள விரும்புகிறது. சமாதான காலத்தில் தான் உளவாளிகளால் எளிதாக ஊடுருவ முடியும். மொசாட் சீஐ ஏ சீர்குலைவு வேலைகள் மூலம் வெவ்வேறு வழிகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களை உருவாக்கி ஆட்சி மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா முன்னெடுக்கக் கூடும்.

இஸ்ரேல் மீது அமெரிக்காவுக்கு இருந்த நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டாலும் இஸ்ரேலை அதனால் கைவிடமுடியாது.ஏனெனில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கு இஸ்ரேல் அதற்குத் தேவை. சிரியா பறிபோய் ஹிஸ்புல்லாவும் ஹமாஸும் பாவீனப்பட்டுள்ள நிலையில், நடந்த யுத்தத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும், ஈரானால் அதிகம் கவனம் செலுத்த முடியாத பலஸ்தீன பிரச்சினை இப்போது தீர்க்கப்படும் என எதிர்பார்க்கமுடியாது. ஆயினும் காசா யுத்தத்தை ஏதோ ஒரு விதத்தில் மேல்பூச்சாக முடிவுக்கு கொண்டு வந்து அங்கு நிலவும் போர் பதட்டத்தை தணிக்கவே அமெரிக்கா விரும்புவதாகத் தெரிகிறது. உக்ரைனை ஐரோப்பிய நாடுகளின் தலையில் கட்டி விட்டு அமெரிக்கா அதற்கு இரண்டாம் பிடில் வாசிக்கப் போகிறது என்பது புலனாகிறது. எப்படியாவது ரஸ்யாவை பணிய வைத்து சமாதான மேசைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறது என்பது தெரிகிறது.

எனினும், ஒரு கட்டத்தில் நிராகரிக்க முடியாத மற்றொரு சாத்தியக்கூறு உள்ளது: ஈரான் இந்த இடைநிறுத்தத்தை தனது சக்தியை வலுப்படுத்தப் பயன்படுத்தினால், இது அமெரிக்க ஆதிக்கத்தையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாக்கத்தையும் சவால் செய்யக்கூடும், அது அமெரிக்கா தலைமையிலான மற்றொரு தாக்குதலைத் தூண்டக்கூடும், இதில் இஸ்ரேல் மற்றும் யுத்தவெறியர்களான  மக்ரோன் (பிரான்ஸ்), ஸ்டார்மர் (யுகே) மற்றும் மெர்ஸ் (ஜெர்மனி) போன்ற  தலைவர்கள் கூட்டு சேரக்கூடும். அப்படி ஒரு யுத்தம் மீண்டும் தொடங்கப்படுமானால் அது அமெரிக்கா தனது மேலாதிக்கத்துக்குத் தானே வேட்டு வைத்துக் கொள்வதாகவே அமையும். 

நிறைவாக.. 

ஜனவரி 17, 1961 திகதி தனது பதவி காலத்தை முடித்துக்கொண்டு வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறிய போது அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவர் Dwight Eisenhower அவரது பிரியாவிடை உரை மிகவும் பிரபலமானது. அதை யூடியூப்பில் காணலாம்.  அதில் அவர் இராணுவத்துறை வர்த்தகமாயமாக்கப்படுவதால் ஜனநாயக அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல் பற்றி ஒரு கடுமையான எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்தார். அவரே ஒரு அமெரிக்க இராணுவ அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பாவில் நேச நாட்டுப் பயணப் படையின் உச்ச தளபதியாக இருந்தவர். ஐந்து நட்சத்திர இராணுவ ஜெனரலாக பதவி வகித்த இவரது தீர்க்கதரிசனமான எச்சரிக்கையை இப்போது மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளவேண்டும். 

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் உலகின் நவீன ஆயுத தொழிற்சாலையாக மாறிய அமெரிக்கா பின்னர் மெல்ல மெல்ல ஒரு ராணுவ ஆயுதம் தயாரிக்கும் யுத்த பிரபுக்களின் அரசாக மாறத் தொடங்கியது.

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடந்த காலத்திலே அமெரிக்காவில் தனியார் ஆயுத உற்பத்தி துறை ஒரு ராட்சத வடிவத்தை எடுத்தது, நவீன தொழில்நுட்பங்களைக்கொண்டு அது ஏனைய துறைகளை மிஞ்சியது, போரற்ற உலகத்தில் அதனால் நீடிக்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. 1954ல் உருவாக்கப்பட்டு செல்வாக்குமிக்க அமைப்பாக வளர்ந்த யூத லோபியான AIPAC (the American Israel Public Affairs Committee) கொமிடடியுடன் ஆயுத உற்பத்தித்துறை கைகோர்த்தது. இவ்விரு சக்திகளும், உலக நிதிநிறுவனங்களையும் பிரதான சர்வதேச ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த யூதமேட்டுக்குடிகளுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கத்தையும் அதன் வெளிநாட்டு கொள்கையையும் கட்டுப்படுத்தத் தொடங்கின. இஸ்ரேல் அமெரிக்காவில் தனியார் ஆயுத உற்பத்தி துறையின் பரிசோதனைக்களமானது. பாலஸ்தீனியர்கள் பரிசோதனை எலிகளானார்கள். சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நேட்டோவின் துணையோடு உலகம் முழுவதும் அமெரிக்கா தனது மேலாதிக்க சுரண்டலை விரிவுபடுத்த முயன்றது. இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர். 9/11 இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப்பின்னர் இஸ்லாமிய போபியாவை கட்டவிழ்த்துவிட்டு முஸ்லீம் நாடுகள் பலவற்றின் மீது போர்தொடுத்து அவற்றின் செல்வங்களையும் வளங்களையும் கொள்ளையடித்தது. இதனால் அமெரிக்க யுத்த பிரபுக்களும் எண்ணெய் முதலாளிகளுக்கும் கொழுத்த லாபம் சம்பாதித்தனர். இவ்விரு துறையும் அமெரிக்க பொருளாதரத்தின் பிரதான தூண்களாக மாறின.

அதேசமயம் அதுவரை அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளப்படுத்திய பல தொழில்துறைகள் காணாமல் போயின. 90,000 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் அமெரிக்காவை விட்டு சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தன. இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக 70களில் வளர்ச்சிபெற்ற கிளவுட் பொருளாதாரம் (Cloud economy) அமசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற சில புதிய பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்கியது. அதன் பக்கவிளைவாக எலன் மஸ்கின் டெஸ்லா ஐபோன் (iphone) போன்ற பாரிய உயர்தொழிநுட்ப நிறுவங்கள் சிலவும் உருவாகின. 

இராணுவத் துறைக்கும் க்ளவுட் தொழில்நுட்பம் தேவைப்பட்டால் கூட இவை இரண்டுக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படத் தொடங்கியது. ஆயுதம் தயாரிக்கும் யுத்த பிரபுகளுக்கு யுத்தம் வேண்டும். பெரும்தனவந்தர்களாகிவிட்ட கிளவுட் தொழிலதிபர்களுக்கு விரிவான சந்தை வேண்டும், யுத்தமற்ற அமைதியான சூழல் வேண்டும், இந்த முரண்பாடு அமெரிக்காவின் புதிய போக்காக தலையெடுத்தது.

இதைவிட இதுவரை அமெரிக்காவின் ஏபோகமாக இருந்த உயர் தொழில்நுட்பங்கள் குறிப்பாக கிளவுட்பொருளாதரம் சீனாவினாலும் ரஷ்யாவினாலும் சவாலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பல துறைகளிலே குறிப்பாக ஏஐ துறையில் சீனா அமெரிக்காவை மிஞ்சி விட்டது. ரஷ்யா இராணுவத்துறையில் அமெரிக்காவை விட சில துறைகளில் முன்னணி வகிக்கிறது. அதைவிட இராணுவ துறைக்கும் கிளவுட் பொருளாதாரத்திற்கும் தேவையான அத்தியாவசிய தேவையான அரிய கனிமங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும், சீனாவின் பாதை பெல்ட் முன்னெடுப்பு (Belt and Road initiative) உலகை வேறுவிதத்தில் இணைத்து வருவதும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

பிரிக்ஸ் கூட்டமைப்பின் வளர்ச்சி இதனை பிரதிபலிக்கிறது. இதற்கு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மத்தியகிழக்கில் ஈரானின் எழுச்சி உத்வேகமளித்துள்ளது.  உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் மத்திய கிழக்கின் முக்கியத்துவத்தை ஜிம்மி கார்ட்டர் கோட்பாடு (Jimmy Carter Doctrine) தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.இச்சவால்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு, வலுவாக உருவாகி வரும் பல் துருவ பூகோள போக்கிக்கு எதிராக தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் வல்லமை அமெரிக்காவிடம் இப்பொழுது கிடையாது. ஆகவே அது அதற்கு தன்னுடைய பொருளாதார வியூகத்தையும் வெளிநாட்டுக்கு கொள்கையையும் மீளமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான அவகாசம் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அந்த அவகாசத்தை தான் இந்த யுத்த நிறுத்தம் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்கால திசைதொடர்பான கேள்வி எழுந்துள்ள நிர்ணயகரமான இக்காலகட்டத்தில் ஆயுத தயாரிப்பு யுத்தப்பிரபுக்களும் அதன் கைப்பவையான இஸ்ரேலின் லோபி AIPAC யும் வெற்றிபெறுமா அல்லது அமெரிக்காவின் புதிய கிளவுட் பொருளாதர நிறுவனங்களின் கை ஓங்குமா என்பதை பொறுத்தே அமெரிக்காவின் பொருளாதரக் கொள்கையும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையும் இனி தீர்மானிக்கப்படும். 

அமெரிக்க மக்களுக்கு ஒரு உன்னதமான வரலாறு உண்டு. சுதந்திர போரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களும், நாட்டுக்கொரு நவீன அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியவர்களும், மே தின போராட்டத்தின் மூலம் 8 மணி போராட்டத்தை வென்று தந்தவர்களும் அவர்கள்தான். 

மறுபுறத்தில் அதன் ஆளும் வர்க்கம் கொடூரமானம் படைத்தது. அமெரிக்காவை அது கட்டியெழுப்பியதே அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின் பிணக்குவியல் மீதுதான்.  மனிதர்களை அடிமைகளாகப் பிடித்து கொடூரமாக சுரண்டிய மூர்க்கத்தனமான முதலாளித்துவத்தை கண்ட நாடும் அதுதான். அதே முதலாளித்துவ வர்க்கமே இன்று ஏகாதிபத்தியமாக மாறி, ஜனநாயகத்தையும் மனித உரிமையும் நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது, வலிமை குன்றிய பிறநாடுகளில் பெண்கள் குழந்தைகள் உற்பட அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிகிறது, தனக்கு சேவகம் செய்யக்கூடிய ஊழல் மிக்க சர்வதிகாரிகளையும் கொடுங்கோலரையும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றி பாதுகாக்கிறது.
 
ஆனால் இன்று ஏகாதிபத்திய கொள்ளையிலே சில பருக்கைகள் தமக்கும் க்கிடைப்பதாலும், ஏகாதிபத்திய ஊடகங்களாலும், ஹொலிவூட் திரைப்படங்களாலும், காலை இலக்கியங்களூடாகவும் முன்னெடுக்கப்படுகின்ற சித்தாங்களாலும் சீரழிந்த கலாச்சாரத்தாலும் மயக்கமுற்று இம்மக்கள் இன்று வெளியுலகில் உண்மையிலே என்ன நடக்கிறது என்பது அறியாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இயக்கங்களும் தொழிலாளர் இயக்கங்களும் ஆளும் வர்க்க கட்சிகளின் அனுபந்தமாக மாறற்றப்பட்டுள்ளன. விழிப்புற்றுவரும் புத்திஜீவிகளை விலைக்கு வாங்கி சீரழிக்கும் என் ஜி ஓ கலாச்சாரம் ஓங்கிவருகிறது. 

எனினும் தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள், சமூக அமைப்புகளினதும் சமூக ஊடகங்களினதும் வளர்ச்சி, பெண்களின் எழுச்சி, நிரவத்தி உடைத்துக்கொண்டு அங்கு ஏற்றப்பட்டுவரும் ஒருமைப்பாடு, போருக்கெதிராக வலுபெற்றுவரும் மக்கள் அபிப்பிராயம் என்பன அங்கே மாற்றத்தை கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. அம்மக்கள் அவ்வப்போது தங்கள் ஒன்றுபட்ட பலத்தை மக்கள் போராட்டத்தில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். வளர்ந்துவரும் இம்மக்கள் சக்தி பேரியக்கமாக மாறும்போதுதான் அமெரிக்காவில் உண்மையான ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். (புகைப்படம் - ஈரானை தாக்கிய பிறகு நேட்டோ தலைவர்களுடன் டொனால்ட் டிரம்ப்.)

முற்றும் - நன்றி 

- பி.ஏ. காதர்

Read Part 1 - https://www.lankaenews.com/news/566/ta
Read Part 2 - https://www.lankaenews.com/news/567/ta

---------------------------
by     (2025-07-08 15:07:29)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links